ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
மலைநாட்டுத் திருப்பதிகள்
திருநாவாய்
சென்னை - கள்ளிக்கோட்டை ரயில் மார்க்கத்தில் உள்ள இந்த
ஸ்டேஷனிலிருந்து ஊரும் கோவிலும் 1 மைல் தூரத்தில் உள்ளன. ஷோரானூரிலிருந்து பஸ்ஸில் குட்டீபுரம் வந்து அங்கிருந்து வேறு பஸ்ஸில் திருநாவாய் வந்ததும் கோயிலை அடையலாம். சிறிய ஊர். வசதிகள் கிடையாது.
மூலவர் - நாவாய் முகுந்தன், நாராயணன், நின்ற திருக்கோலம் கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் - மலர்மங்கை நாச்சியார், சிறுதேவி.
தீர்த்தம் - செங்கமல ஸரஸ்.
விமானம் - வேத விமானம்.
ப்ரத்யக்ஷம் - லக்ஷ்மி, கஜேந்த்ரன், நவயோகிகள்.
விசேஷங்கள் - கோவில் பாரதப்புழை ஆற்றை ஒட்டியுள்ளது. எதிர்க் கரையில் சிவனுக்கும் ப்ரஹ்மாவுக்கும் கோவில்கள் உள்ளன. இதைக் காசிக்கு ஸமானமாகக் கருதி சிராத்தங்கள் முதலியன செய்கின்றனர். இவ்விடத்தில் 9 யோகிகள் யாகம் செய்ததால் இந்த ஸ்தலம் திருநவயோகி என்று பெயர் பெற்று நாளடைவில் திருநாவாய் என்று மக்கள் வழக்கில் மாறுபட்டதாக ஐதீஹம்.
ஒரு சமயம் மஹாலக்ஷ்மியும் கஜேந்திரனும் தாமரைப் பூக்களை பறித்து பகவானை அர்ச்சனை செய்ய, கஜேந்திரனுக்கு, பூ கிடைக்காமல் பகவானிடம் முறையிட பகவான் லக்ஷ்மியை பூ பறிக்க வேண்டாம் என்று சொல்லி, லக்ஷ்மியை தன்னுடன் ஏக சிம்மாஸனத்தில் அமரச்செய்து கஜேந்த்ரன் பூஜையை எற்றுக் கொண்டதாக புராண வரலாறு. மலைநாட்டில் இந்த ஓர் இடத்தில்தான் லக்ஷ்மிக்கு தனிஸந்நிதி உண்டு.
மங்களாசாஸனம் -
திருமங்கையாழ்வார் - 1520, 1856
நம்மாழ்வார் - 3634 -44
மொத்தம் 13 பாசுரங்கள்.