ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
மலைநாட்டுத் திருப்பதிகள்
திருக்காட்கரை
ஆலவாய், திருச்சூர் ரயில் மார்க்கத்தில் இருஞாலக்கொடி ஸ்டேஷனிலிருந்தும் அங்கமாலி ஸ்டேஷனிலிருந்தும் வடகிழக்கே சுமார் 9 மைல் தூரத்திலிருக்கிறது. ஆலவாய் போகும் பாதையில் 4 1/2மைல் சென்று, அங்கிருந்து வேறு பஸ்ஸில் ஒரு கிளைப்பாதையில் போகவேண்டும். வசதிகள் ஒன்றுமில்லை.
மூலவர் - காடகரையப்பன், நின்ற திருக்கோலம், தெற்கே திருமுக மண்டலம்.
தாயார் - பெருஞ்செல்வநாயகி, வாத்ஸல்யவல்லி.
விமானம் - புஷ்கல விமானம்.
ப்ரத்யக்ஷம் - கபிலமுனி.
விசேஷங்கள் - இப்பெருமாளை வாமனன் என்று மலையாளர்கள் சொல்கின்றனர். ஓணம் பண்டிகையன்று இக்கோவிலில் பெரிய உத்ஸவம் நடக்கின்றது. இத்தலத்தில் ஒரு தனிகன் வாழைத்தோட்டங்கள் ஏற்படுத்தி குலை தள்ளாமலே பலமுறை அழிந்துபோய் அந்ததனிகன் பொன் வாழைக்குலை செய்து திருக்காட்கரை அப்பனுக்க ஸமர்ப்பிக்க, பகவான் அநுக்ரஹத்தால் தோட்டங்களில் வாழை மரங்கள் உயர்ந்து வாழைக் குலைகள் இட்டதாகவும், அவையே, 'நேந்திரம் வாழை' என்று பிரஸித்தமாக இருப்பதாகவும், ஐதீஹம். பொன்வாழைக்குலை ஒருசமயம் காணாமல் போனதாகவும், அரசன் ஒரு யோகியை தீரவிசாரியாமல் சந்தேகித்து துன்புறுத்தியதாயும், அந்த வாழைக்குலை கர்ப்பக்ருஹத்திலேயே இருந்ததைக் கண்டு, யோகி தற்கொலை செய்துகொண்டு சாபம் இட்டதாகவும், சாபம் நீங்க ஜனங்கள் யோகி சொல்லியபடி மூங்கில் கூரை ஏற்படுத்திக்கெண்டு கோரைக் கொள்ளியை வெளிச்சத்திற்கு ஏற்படுத்தி நீங்கியதாக ஸ்தலவரலாறு. யோகி ப்ருஹ்மராக்ஷஸாகி ஊரில் திரிந்ததாகவும், மக்கள் யோகிக்கு சிறு கோயில் கட்டி நைவேத்தியம் தினமும் ஏற்படுத்தியதாகவும் புராண வரலாறு.
மங்களாசாஸனம் -
நம்மாழ்வார் - 3612-22 - 11 பாசுரங்கள்.