ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
மலைநாட்டுத் திருப்பதிகள்
திருவண்வண்டூர் (திருவமுண்டூர்)
செங்கண்ணூரிலிருந்து (மார்க்கம் 82 காண்க) வடக்கே 4 மைல் தூரத்தில் இருக்கிறது. தங்கும் வசதிகள் ஒன்றுமில்லை. டவுன்பஸ் வசதி உண்டு. திருவல்லவாவில் தங்கி ஸேவிக்கலாம்.
மூலவர் - பாம்பணையப்பன், கமலநாதன், நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம்.
தாயார் - கமலவல்லி நாச்சியார்.
தீர்த்தம் - பாகநாச தீர்த்தம், பம்பா தீர்த்தம்.
விமானம் - வேதாலய விமானம்.
ப்ரத்யக்ஷம் - மார்க்கண்டேயர், நாரதர்.
விசேஷங்கள் - இக்கோயிலை நகுலன் ஜூர்ணோத்தாரணம் செய்ததால் இத்தலம் நகுலனால் பிரதிஷ்டை என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரில் பூமியைத் தோண்டுகையில் புதிய பெருமாள் விக்ரஹங்கள் கண்டெடுக்கப்பட்டு புதிய ஸந்நிதிகள் மண்டபங்களுடன் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. நாரதர் ப்ருஹ்மாவினால் சபிக்கப்பட்டு இவ்விடம் வந்து ஸ்ரீமந் நாராயணனை பூஜித்து பகவானிடமிருந்து தத்வ ஞானம் உபதேசிப்பதே தொழிலாக வேண்டும் என்ற வரத்தைப் பெற்ற ஸ்தலம். நாரதர் இங்கே நாரதீய புராணத்தை இயற்றியதாகவும், ஸ்ரீ மஹாவிஷ்ணுவே பரதத்துவம் என்று ஸ்தாபித்து அவரைப் பூஜிக்கும் முறை, துதி முதலியன அடங்கிய பெருநூலை இருபத்தையாயிரம் க்ரந்தங்களில் செய்து முடித்ததாக ஸ்தலபுராணம்.
மங்களாசாஸனம் -
நம்மாழ்வார் - 3227-37 - 11 பாசுரங்கள்.