ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
திருவாய்மொழி
இரண்டாம் பத்து
கிளரொளி
பூதேவியின் திருமார்பகமாக விளங்குவன இரண்டு மலைகள். ஒன்று திருவேங்கடம், மற்றொன்று திருமாலிருந்சோலைமலை. பகவானுக்கு இவ்விரண்டு மலைகளிலும் விருப்பம் மிகுதி. இது திருமாலிருந்சோலையைப் பற்றிய பகுதி. அழகர் விரும்பியுறையும் இம்மலையை நினைப்பதும், வணங்குவதும், இம்மலையில் சில நாட்களேனும் வாழ்வதும் மிகச் சிறந்த செயல்களாகும். இளமை நீங்குவதற்கு முன்பே திருமாலிருஞ்சோலைக்குச் செல்ல வேண்டும் என்கிறார் ஆழ்வார்.
திருமாலிருஞ்சோலையை அடைந்து வணங்குக எனல்
கலி விருத்தம்
திருமாலிருஞ்சோலையை விரைவில் அடைக
2886. கிளரொளி யிளமை கெடுவதன் முன்னம்,
வளரொளி மாயோன் மருவிய கோயில்,
வளரிளம் பொழில்சூழ் மாலிருஞ் சோலை,
தளர்வலி ராகில் சார்வது சதிரே.
திருமாலிருஞ்சோலையைத் தொழுவதே புருஷார்த்தம்
2887. சதிரிள மடவார் தாழ்ச்சியை மதியாது,
அதிர்குரல் சங்கத் தழகர்தம் கோயில்,
மதிதவழ் குடுமி மாலிருஞ் சோலை,
பதியது ஏத்தி எழுவது பயனே.
திருமாலிருஞ்சோலைக்கு அருகிலாவது செல்க
2888. பயனல்ல செய்து பயனில்லை நெஞ்சே,
புயல்மழை வண்ணர் புரிந்துறை கோயில்,
மயல்மிகு பொழில்சூழ் மாலிருஞ் சோலை,
அயன்மலை யடைவ ததுக ருமமே.
திருமாலிருஞ்சோலையை அடைவதே நியாயம்
2889. கருமவன் பாசம் கழித்துழன் றுய்யவே,
பெருமலை யெடுத்தான் பீடுறை கோயில்,
வருமழை தவழும் மாலிருஞ் சோலை,
திருமலை யதுவே அடைவது திறமே.
அருகிலுள்ள மலையை அடைவதும் நல்வழிதான்
2890. திறமுடை வலத்தால் தீவினை பெருக்காது,
அறமுயல் ஆழிப் படையவன் கோயில்,
மறவில்வண் சுணைசூழ் மாலிருஞ் சோலை,
புறமலை சாரப் போவது கிறியே.
மாலிருஞ்சோலையை அடைய நினைப்பதே நல்லது
2891. கிறியென நினைமின் கீழ்மைசெய் யாதே,
உறியமர் வெண்ணெய் உண்டவன் கோயில்,
மறியடு பிணைசேர் மாலிருஞ் சோலை,
நெறிபட அதுவே நினைவது நலமே.
மாலிருஞ்சோலையை வலம் வருவது வலிமை
2892. நலமென நினைமின் நரகபந் தாதே,
நிலமுனம் இடந்தான் நீடுறை கோயில்,
மலமறு மதிசேர் மாலிருஞ் சோலை,
வலமுறை யெய்தி மருவுதல் வலமே.
மலையை வலம் வருவது நல்ல வழக்கம்
2893. வலம்செய்து வைகல் வலங்கழி யாதே,
வலம்செய்யும் ஆய மாயவன் கோயில்,
வலம்செய்யும் வானோர் மாலிருஞ் சோலை,
வலம்செய்து நாளும் மருவுதல் வழக்கே.
மலையை வணங்க நினைப்பது கூடச் சிறந்தது
2894. வழக்கென நினைமின் வல்வினை மூழ்காது,
அழக்கொடி யட்டான் அமர்பெருங் கோயில்,
மழக்களிற் றினஞ்சேர் மாலிருஞ் சோலை,
தொழக்கரு துவதே துணிவது சூதே.
இத்திருமலையை அடைவதே பொருள்
2895. சூதென்று களவும் சூதும்செய் யாதே,
வேதமுன் விரித்தான் விரும்பிய கோயில்,
மாதுறு மயில்சேர் மாலிருஞ் சோலை,
போதவிழ் மலையே புகுவது பொருளே.
இவற்றைப் பாடுக :கண்ணன் திருவடி சேரலாம்
2896. பொருளென்றிவ் வுலகம் படைடத்தவன் புகழ்மேல்,
மருளில்வண் குருகூர் வண்சட கோபன்,
தெருள்கொள்ளச் சொன்னஒ ராயிரத்து ளிப்பத்து,
அருளுடை யவன்தாள் அணைவிக்கும் முடித்தே.
நேரிசை வெண்பா
சோலமலையைச் சேர்க்க என்ற மாறனை வணங்குக
'கிளரொளிசேர் கீழுரைத்த பேறு கிடைக்க,
வளரொளிமால் சோலை மலைக்கே,-தளர்வறவே
நெஞ்சைவைத்துச் சேரும்'எனும் நீடுபுகழ் மாறன் றாள்,
முன்செலுத்து வோமெம் முடி.