ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
திருவாய்மொழி
மூன்றாம் பத்து
மொய்ம்மாம்
பகவானின் குணாநுபவத்தால் பேரன்பு விஞ்சி ஆடிப்பாடிப் பரவசமடையும் மெய்யன்பர்களை வாழ்த்தியும், இப்படிப்பட்ட அநுபவத்தை (நிலையை) ப் பெறாதவர்களைத் தாழ்த்தியும் இப்பகுதி கூறுகிறது.
திருமாலின் அன்பர்களை ஆதரித்தலும் அல்லாதவர்களை நிந்தித்தலும்
அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
கண்ணனைத் துதியாவிடில் பயனேயில்லை
2941. மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை
முதலைச் சிறைப்பட்டு நின்ற,
கைம்மா வுக்கருள் செய்த
கார்முகில் போல்வண்ணன் கண்ணன்,
எம்மா னைச்சொல்லிப் பாடி
எழுந்தும் பறந்தும்துள் ளாதார்,
தம்மால் கருமமென் சொல்லீர்
தண்கடல் வட்டத்துள் ளீரே!
திருமாலைப் பாடாதார்க்கும் பிறவித் துன்பம் உண்டு
2942. தண்கடல் வட்டத்துள் ளாரைத்
தமக்கிரை யாத்தடிந் துண்ணும்,
திண்கழற் காலசு ரர்க்குத்
தீங்கிழைக் கும்திரு மாலை,
பண்கள் தலைக்கொள்ளப் பாடிப்
பறந்தும் குனித்துழ லாதார்,
மண்கொள் உலகில் பிறப்பார்
வல்வினை மோத மலைந்தே.
கண்ணனைத் தொழாவிடில் நரகம்தான் கிட்டும்
2943. மலையை யெடுத்துக்கல் மாரி
காத்துப் பசுநிரை தன்னை,
தொலைவு தவிர்த்த பிரானைச்
சொல்லிச்சொல் லிநின்றெப் போதும்,
தலையினோ டாதனம் தட்டத்
தடுகுட்ட மாய்ப்பற வாதார்,
அலைகொள் நரகத் தழுந்திக்
கிடந்துழைக் கின்ற வம்பரே.
கண்ணனைத் துதியாவிடில் என்ன பயன் கிட்டும்?
2944. வம்பவிழ் கோதை பொருட்டா
மால்விடை யேழும் அடர்த்த,
செம்பவ ளத்திரள் வாயன்
சிரீதரன் தொல்புகழ் பாடி,
கும்பிடு நட்டமிட் டாடிக்
கோகுகட் டுண்டுழ லாதார்,
தம்பிறப் பால்பய னென்னே
சாது சனங்க ளிடையே?
கண்ணனையே பஜனை செய்யுங்கள் புகழ் உண்டு
2945. சாது சனத்தை நலியும்
கஞ்சனைச் சாதிப்ப தற்கு,
ஆதியஞ் சோதி யுருவை
அங்குவைத் திங்குப் பிறந்த,
வேத முதல்வனைப் பாடி
வீதிகள் தோறும்துள் ளாதார்,
ஒதி யுணர்ந்தவர் முன்னா
என்சவிப் பார்ம னிசரே?
எம்பிரானை வணங்குவோரே எல்லாம் உணர்ந்தவர்கள்
2946. மனிசரும் மற்றும் முற்றுமாய்
மாயப் பிறவி பிறந்த,
தனியன் பிறப்பிலி தன்னைத்
தடங்கடல் சேர்ந்த பிரானை,
கனியைக் கரும்பினின் சாற்றைக்
கட்டியைத் தேனை அமுதை,
முனிவின்றி ஏத்திக் குனிப்பார்
முழுதுணர் நீர்மையி னாரே.
கண்ணனிடம் நெஞ்சம் குழைக
2947. நீர்மையில் நூற்றுவர் வீய
ஐவர்க் கருள்செய்து நின்று,
பார்மல்கு சேனை அவித்த
பரஞ்சுட ரைநினைந் தாடி,
நீர்மல்கு கண்ணின ராகி
நெஞ்சம் குழைந்துநை யாதே,
ஊர்மல்கி மோடு பருப்பார்
உத்தமர்கட் கென்செய் வாரே?
வேங்கடவனின் அன்பரை தேவர் தொழுவர்
2948. வார்புனல் அந்தண் ணருவி
வடதிரு வேங்கடத் தெந்தை,
பேர்பல சொல்லிப் பிதற்றிப்
பித்தரென் றேபிறர் கூற,
ஊர்பல புக்கும் புகாதும்
உலோகர் சிரிக்கநின் றாடி,
ஆர்வம் பெருகிக் குனிப்பார்
அமரர் தொழுப்படு வாரே.
திருமாலினிடம் அன்பிலாதார் துன்புறவர்
2949. அமரர் தொழுப்படு வானை
அனைத்துல குக்கும் பிரானை,
அமரர் மனத்தினுள் யோகு
புணர்ந்தவன் றன்னோடொன் றாக,
அமரத் துணியவல் லார்கள்
ஒழியஅல் லாதவ ரெல்லாம்,
அமர நினைந்தெழுந் தாடி
அலற்றுவ தேகரு மம்மே.
அறியாமையை அகற்றி எம்பிரான் புகழ் பேசுக
2950. கருமமும் கரும பலனும்
ஆகிய காரணன் றன்னை,
திருமணி வண்ணனைச் செங்கண்
மாலினைத் தேவ பிரானை,
ஒருமை மனத்தினுள் வைத்து
உள்ளங் குழைந்தெழுந் தாடி,
பெருமையும் நாணும் தவிர்ந்து
பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே.
இவற்றைப் பாடுக : வினைகள் அழியும்
2951. தீர்ந்த அடியவர் தம்மைத்
திருத்திப் பணிகொள்ள வல்ல,
ஆர்ந்த புகழச் சுதனை
அமரர் பிரானையெம் மானை,
வாய்ந்த வளவயல் சூழ்தண்
வளங்குரு ராயிரத் திப்பத்
தருவினை நீறு செய்யுமே.
நேரிசை வெண்பா
மனமே!மாறனிடம் பக்தி கொள்
மொய்ம்பாரும் மாலுக்கு முன்னடிமை செய்துவப்பால்,
அன்பாலாட் செய்பவரை யாதரித்தும், - அன்பிலா
மூடரைநிந் தித்தும் மொழிந்தருளும் மாறன்பால்,
தேடரிய பத்திநெஞ்சே!செய்.