செய்ய தாமரை

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

மூன்றாம் பத்து

செய்ய தாமரை

முன்பகுதியில் நிந்திக்கப்பட்டவர்களையும் கைவிடலாகாது என்ற கருணையினால், அவர்களையும் வழிப்படுத்திக்கொள்ள நினைத்த ஆழ்வார், யாவரும் நன்கு அறிந்து கொள்ளும்படி பகவானின் ஸெளப்ய குணத்தை ஈண்டு விரிவாக எடுத்துக் கூறுகிறார்.

அர்ச்சாவதாரமே சுலப விஷயம் எனல்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

செந்தாமரைக் கண்ணனே மும்மூர்த்தி

2952. செய்ய தாமரைக் கண்ண னாயுல

கேழு முண்ட அவன்கண்டீர்,

வையம் வானம் மனிசர் தெய்வம்

மற்றும் மற்றும் முற்றுமாய்,

செய்ய சூழ்சுடர் ஞான மாய்வெளிப்

பட்டி வைபடைத் தான்பின்னும்,

மொய்கொள் சோதிய டாயி னானொரு

மூவ ராகிய மூர்த்தியே.

கண்ணனை வணங்குக

2953. மூவ ராகிய மூர்த்தி யைமுதல்

மூவர்க் குமுதல் வன்றன்னை,

சாவ முள்ளன நீக்கு வானைத்

தடங்க டல்கிடந் தான்றன்னைத்,

தேவ தேவனைத் தென்னி லங்கை

எரியெ ழச்செற்ற வில்லியை,

பாவ நாசனைப் பங்க யத்தடங்

கண்ண னைப்பர வுமினோ.

கண்ணனையே இரவு பகல் துதியுங்கள்

2954. பரவி வானவ ரேத்த நின்ற

பரம னைப்பரஞ் சோதியை

குரவை கோத்த குழக னைமணி

வண்ண னைக்குடக் கூத்தனை,

அரவ மேறி யலைக டலம

ரும்து யில்கொண்ட அண்ணலை,

இரவும் நன்பக லும்வி டாதென்றும்

ஏத்து தல்மனம் வைம்மினோ.

மாயவன் திருவடிகளையே நினைக

2955. 'வைம்மின் நும்மணத் ª 'தன்று யானுரைக்

கின்ற மாயவன் சீர்மையை,

எம்ம னோர்க ளரைப்ப தென்?அது

நிற்க நாடொறும், வானவர்

தம்மை யாளும் அவனம் நான்முக

னும்ச டைமுடி அண்ணலும்,

செம்மை யாலவன் பாத பங்கயம்

சிந்தித் தேத்தி திரிவரே.

கண்ணன் தோற்றம் பஞ்ச பூதஸ்வரூபமாக இருக்கும்

2956. திரியும் காற்றொ டகல்வி சும்பு

திணிந்த மண்கிடந் தகடல்,

எரியும் தீய டிருசு டர்தெய்வம்,

மற்றும் மற்றும் முற்றுமாய்,

கரிய மேனியன் செய்ய தாமரைக்

கண்ணன் கண்ணன்விண் ணோரிறை,

சுரியும் பல்கருங் குஞ்சி யெங்கள்

சுடர்மு டியண்ணல் தோற்றமே.

செங்கன்மாலையே யான் ஏழு பிறப்பிலும் வணங்குவேன்

2957. தோற்றக் கேடவை யில்ல வனுடை

யான வனொரு மூர்த்தியாய்,

சீற்றத் தோடருள் பெற்ற வனடிக்

கீழ்ப்பு கநின்ற செங்கண்மால்,

நாற்றத் தோற்றச் சுவைய லிஊறல்

ஆகி நின்ற,எம் வானவர்

ஏற்றை யேயன்றி மற்றொ ருவரை

யானி லேனெழு மைக்குமே.

கண்ணனைத் தொழுக : துயரங்கள் நீங்கும்

2958. எழுமைக் கமென தாவிக் கின்னமு

தத்தி னைஎன தாருயிர்,

கெழுமி யகதிர்ச் சோதி யைமணி

வண்ண னைக்குடக் கூத்தனை,

விழுமி யவம ரர்மு னிவர்வி

ழுங்கும் கன்னல் கனியினை,

தொழுமின் தூயம னத்த ராயிறை

யும்நில் லாதுய ரங்களே.

அச்சுதனிடமே நான் அடைக்கலம் புகுவேன்

2959. துயர மேதரு துன்ப இன்ப

வினைக ளாய்அவை அல்லனாய்,

உயர நின்றதோர் சோதி யாயுல

கேழு முண்டுமிழ்ந் தான்றன்னை,

அயர ஆங்கு நமன்ற மர்க்கரு

நஞ்சி னையச்சு தன்றன்னை,

தயர தற்கும கன்றன் தன்றன்னை,

மற்றி லேன் தஞ்ச மாகவே.

கடல் வண்ணன் எல்லாமாக உள்ளான்

2960. தஞ்ச மாகிய தந்தை தாயடு

தான மாயவை அல்லனாய்,

எஞ்ச லிலம ரர்கு லமுதல்

மூவர் தம்முள்ளு மாதியை,

அஞ்சி நீருல கத்துள் ளீர்கள்!

அவனி வனென்று கூழேன் மின்,

நெஞ்சி னால்நினைப் பான்ய வனவன்

ஆகும் நீள்கடல் வண்ணனே.

கண்ணனைக் காணும் நாள் எந்நாளோ?

2961. கடல்வண் ணன்கண்ணன் விண்ண வர்கரு

மாணிக் கமென தாருயிர்

படவ ரவின ணைக்கி டந்த

பரஞ்சு டர்பண்டு நூற்றுவர்,

அடவ ரும்படை மங்க ஐவர்கட்

காகி வெஞ்சமத்து, அன்றுதேர்

கடவி யபெரு மான்க னைகழல்

காண்ப தென்றுகொல் கண்களே?

இவற்றைப் பாடிப் பக்தர்கள் ஆகுக.

2962. கண்கள் காண்டற் கரிய னாய்க்கருத்

துக்கு நன்றுமெ ளியனாய்,

மண்கொள் ஞாலத்து யிர்க்கெல் லாமருள்

செய்யும் வானவ ரீசனை,

பண்கொள் சோலை வழுதி நாடன்

குருகைக் கோன்சட கோபன்சொல்,

பண்கொள் ஆயிரத் திப்பத் தால்பத்த

ராகக் கூடும் பயின்மினே.

நேரிசை வெண்பா

அர்ச்சாவதாரமே எளிது என்றான் மாறன்

செய்ய பரத்துவமாய்ச் சீரார் வியூகமாய்,

துய்ய பிவமுமாய்த் தோன்றிவற்றுள், - எய்துமவர்க்

கிந்நிலத்தில் அர்ச்சாவ தாரம் எளிதென்றான்,

பன்னுதமிழ் மாறன் பயின்று.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is மொய்ம்மாம்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  பயிலும் சுடரொளி
Next