ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
திருவாய்மொழி
முதற்பத்து
பத்துடை
பகவானிடம் பரத்வம் இருப்பது போல், ஸெளலப்யமும் இருக்கிறது. இத்திருவாய்மொழியில் ஸெளலப்ய குணம் கூறப்படுகிறது. இப்பண்பு ஆழ்வாரை ஆறு மாத காலம் மோஹிக்க செய்தது.
கலிநிலைத்துறை
அடியவர்க்கு எளியவன் அரி
2697. பத்துடை யடியவர்க் கெளியவன்
பிறர்களுக் கரிய
வித்தகன், மலர்மகள் விரும்பும்நம்
அரும்பெற லடிகள்,
மத்துறு கடைவெண்ணெய் களிவினில்
உரவிடை யாப்புண்டு,
எத்திறம் உரலினோ டிணைந்திருந்
தேங்கிய எளிவே.
நம் அகத்தும் புறத்தும் உள்ளான் அவன்
2698. எளிவரு மியல்வினன் நிலைவரம்
பிலபல பிறப்பாய்,
ஒளிவரு முழுநலம் முதலில
கேடில வீடாம்,
தெளிதரு நிலைமைய தொழிவிலன்
முழுவது மிறையோன்,
அளிவரு மருளினோ டகத்தனன்
புறத்தன மமைந்தே.
அவனது அவதார இரகசியம் யாருக்குத் தெரியும்?
2699. அமைவுடை யறநெறி முழுவது
முயர்வற வுயர்ந்த,
அமைவுடை, முதல்கெடல் ஒடிவிடை
யறநில மதுவாம்,
அமைவுடை, யமரரும் யாவையும்
யாவரும் தானாம்,
அமைவுடை, நாரணன், மாயையை
யறிபவர் யாரே?
ஆயிரம் பேருடையவன் எம்பெருமான்
2700. யாருமோர் நிலைமைய னெனவறி
வரியவெம் பெருமான்,
யாருமோர் நிலைமைய னெனவறி
வெளியவெம் பெருமான்,
பேருமோ ராயிரம் பிறபல
வுடையவெம் பெருமான்,
பேருமோ ருருவமு முளதில்லை
யிலதில்லை பிணக்கே.
ஆதியந்தம் இல்லாதவன் அவன்
2701. பிணக்கற அறுவகைச் சமயமூம்
நெறியுள்ளி யுரைத்த,
கணக்கறு நலத்தனன் அந்தமி
லாதியம் பகவன்,
வணக்குடைத் தவநெறி வழிநின்று
புறநெறி களைகட்டு,
உணக்குமின் பசையற அவனுடை
யுணர்வுகொண் டுணர்ந்தே.
பகவானின் நாமங்களைப் பலமுறை சொல்லுக
2702. உணர்ந்துணர்ந் திழிந்தகன் றுயர்ந்துரு
வியந்தவிந் நிலைமை,
உணர்ந்துணர்ந் துணரிலும் இறைநிலை
யுணர்வரி துயிர்காள்,
உணர்ந்துணர்ந் துரைத்துரைத் தரியய
னரனென்னு மிவரை,
உணர்ந்துணர்ந் துரைத்துரைத் திறைஞ்சுமின்
மனப்பட்ட தொன்றே.
மும்முர்த்திகளைக் கருத்தில் இருத்துக
2703. ஒன்றெனப் பலவென அறிவரும்
வடிவினுள் நின்ற,
நன்றெழில் நாரணன் நான்முகன்
அரனென்னு மிவரை,
ஒன்றநும் மனத்துவைத் துள்ளிநும்
மிருபசை யறுத்து,
நன்றென நலஞ்செய்வ தவனிடை,
நம்முடை நாளே.
ஸ்ரீமந் நாராயணனின் திருவடிகளையே நினை
2704. நாறு நின்றடு நமபழ
மையங்கொடு வினையுடனே
மாளும், ஓர் குறைவில்லை மனனக
மலமறக் கழுவி,
நாளுநந் திருவுடை யடிகள்தம்
நலங்கழல் வணங்கி,
மாளுமோ ரிடத்திலும் வணக்கொடு
மாள்வது வலமே.
பகவான் மும்மூர்த்தி ஸ்வரூபன்
2705. வலத்தனன் திரிபுர மெரித்தவ
னிடம்பெறுத் துந்தித்
தலத்து,எழு திசைமுகன் படைத்தநல்
லுலகமும் தானும்
புலப்பட, பின்னும்தன் உலகத்தி
லகத்தனன் தானே,
சொலப்புகில் இவைபின்னும் வயிற்றுள
இவையவன் துயக்கே.
பகவானின் மாயைகள் பெரியவை
2706. துயக்கறு மதியில்நல் ஞானத்துள்
அமரரைத் துயக்கும்,
மயக்குடை மாயைகள் வானிலும்
பெரியன வல்லன்,
புயற்கரு நிறத்தனன் பெருநிலங்
கடந்தநல் லடிப்போது,
அயர்ப்பில் னலற்றுவன் தழுவுவன்
வணங்குவ னமர்ந்தே.
இவற்றைப் படித்தோர் பிறப்பறுப்பர்
2707. அமரர்கள் தொழுதெழ அலைகடல்
கடைந்தவன் றன்னை,
அமர்பொழில் வளங்குரு கூர்ச்சட
கோபன்குற் றேவல்,
அமர்சுவை யாயிரத் தவற்றினு
ளிவைபத்தும் வல்லார்,
அமரரொ டுயர்விற்சென் றறுவர்தம்
பிறவியஞ் சிறையே.
நேரிசை வெண்பா
பிறவித் துன்பம் நீங்கும்
'பத்துடையோர்க் கென்றும் பரனெளிய னாம்பிறப்பால்,
முத்திதரு மாநிலத்தீர்!மூண்டவன்பால், - பத்திசெயும்'
என்றுரைத்த மாறன்றன் இன்சொல்லாற் போம், நெடுகச்
சென்றபிறப் பாமஞ் சிறை.