ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
திருவாய்மொழி
நான்காம் பத்து
பாலனாய்
ஆழ்வார் உலகத்தாருக்குச் செய்த உபதேசங்களெல்லாம், அவருக்குப் பகவானிடம் அன்பு மீதூர்ந்து செல்லக் காரணமாயின. பகவான் அன்று செய்த செயல்களை எல்லாம் நேரில் காண அவர் ஆசைப்பட்டார். ஆனால், கிடைக்கவில்லை. எம்பெருமானோடு கலந்து பிரிந்து நாயகியின் நிலையை தடைந்து மோகித்துக் கிடக்கிறார் அவர். அந்நாயகியின் தாய் தன் பெண்ணின் நிலை கண்டு இரங்குகிறாள். திருத்துழாயைப்பற்றியே இப்பகுதி அமைந்துள்ளது.
தலைவியின் நிலைகண்டு தாய் இரங்கல்
கலி விருத்தம்
திருத்துழாயினிடமே என் மகள் மயங்கிவிட்டாள்
3018. பாலனா யேழுல குண்டு பரிவின்றி,
ஆலிலை யன்னவ சஞ்செய்யும் அண்ணலார்,
தாளினை மேலணி தண்ணந் துழாயென்றே
மாலுமால், வல்வினை யேன்மட வல்லியே.
துழாய் என்றே என் மகள் அடிக்கடி சொல்கிறாள் ¢
3019. வல்லிசேர் நுண்ணிடை யாய்ச்சியிர் தம்மொடும்,
கொல்லைமை செய்து குரவை பிணைந்தவர்,
நல்லடி மேலணி நாறு துழாயென்றே
சொல்லுமால், சூழ்வினை யாட்டியேன் பாவையே.
துழாய் என்றே என் மகள் கூவுகிறாள்
3020. பாவியல் வேதநன் மாலை பலகொண்டு,
தேவர்கள் மாமுனி வரிறைஞ் சநின்ற
சேவடி மேலணி செம்பாற் றுழாயென்றே
கூவுமால், கோள்வினை யாட்டியேன் கோதையே.
துழாய் என்றே என் மகள் ஓதும்
3021. கோதில வண்புகழ் கொண்டு சமயிகள்,
பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான்பரன்,
பாதங்கள் மேலணி பைம்பொற் றுழாயென்றே
ஓதுமால், ஊழ்வினை யேன்தடந் தோளியே.
துழாய் என்று கூறி உருகுகிறாள் என் மகள்
3022. தோளிசேர் பின்னை பொருட்டெரு தேழ்தழீஇக்
கோளியார் கோவல னார்குடக் கூத்தனார்,
தாளிணை மேலணி தண்ணந்து ழாயென்றே
நாளுநாள், நைகின்ற தால்என்றன் மாதரே.
துழாயினிடம் பித்துக் கொண்டுவிட்டாள் என் மகள்
3023. மாதர்மா மண்மடந் தைபொருட் டேனமாய்,
ஆதியங் காலத் தகலிடம் கீண்டவர்,
பாதங்கள் மேலணி பைம்பொற் றுழாயென்றே
ஒதும்மால், எய்தினள் என்றன் மடந்தையே.
துழாய்க்கு அடிமையாகிவிட்டாள் என் மகள்.
3024. மடந்தையை வண்கம லத்திரு மாதினை,
தடங்கொள்தார் மார்பினில் வைத்தவர் தாளின்மேல்,
வடக்கொள்பூந் தண்ணந் துழாய்மலர்க் கேயிவள்
மடங்குமால், வாணுத லீர்!என் மடக்கொம்பே.
துழாயை என் மகள் நம்பிவிட்டாளே!
3025. கொம்புபோல் சீதை பொருட்டிலங் கைநகர்,
அம்பெரி யுய்த்தவர் தாளிணை மேலணி,
வம்பவிழ் தண்ணந்து ழாய்மலர்க் கேயிவள்
நம்புமால், நானிதற் கென்செய்கேன் நங்கைமீர்!
சங்கு, சக்கரம், துழாய் என்கிறாள் என் மகள்.
3026. நங்கைமீர்!நீரும்ஓர் பெண்பெற்று நல்கினீர்,
எங்ஙனே சொல்லுகேன் யான்பெற்ற ஏழையை,
சங்கென்னும் சக்கர மென்னும் துழாயென்னும்,
இங்ஙனே சொல்லும் இராப்பகல் என்செய்கேன்?
துழாயைத் தழுவ விரும்புகிறாள் என் மகள்.
3027. என்செய்கேன் என்னுடைப் பேதையென் கோமளம்,
என்சொல்லும் என்வச முமல்லள் நங்கைமீர்,
மின்செய்பூண் மார்பினன் கண்ணன் கழல்துழாய்,
பொன்செய்பூண் மென்முலைக் கென்று மெலியுமே.
இவற்றைப் பாடுக : தேவர் பாராட்டுவர்
3028. மெலியுநோய் தீர்க்கும்நங் கண்ணன் கழல்கள்மேல்,
மலிபுகழ் வண்குரு கூர்ச்சட கோபன்சொல்,
ஒலிபுகழ் ஆயிரத் திப்பத்தும் வல்லவர்,
மலிபுகழ் வானவர்க் காவர்நற் கோவையே.
நேரிசை வெண்பா
பேரின்பத்தை விரும்பினார் சடகோபர்
பாலரைப்போற் சீழ்கிப் பரனளவில் வேட்கையால்,
காலத்தாற் றேசத்தாற் கைகழிந்த,- சால
அரிதான போகத்தில் ஆசையுற்று நைந்தான்,
குருகூரில் வந்துதித்த கோ.