ஒரு நாயகம்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

நான்காம் பத்து

ஒரு நாயகம்

பகவானை அடைந்ததால், தாம் ஒரு குறையும் இல்லாதவராய் இருப்பதாக உணர்ந்த ஆழ்வார், தம்மைப் போலவே பூமியிலுள்ளோர் அனைவரும் குறைவின்றி வாழவேண்டும் என்று நினைத்தார். எனவே, பகவானை அடைவதைத் தவிர மற்றவை நிலையில்லாதவை என்று ஈண்டுக் கூறுகிறார்.

ஸ்ரீ ராமாநுஜர் இத்திருவாய்மொழித் பகுதியைத் திரு நாராயணபுரத்திலுள்ள திருநாராயணப்பெருமாளுக்கு ஸமர்ப்பித்ததாகக் கூறுவர்.

செல்வம் நிலையாதது ; நாரணன் அடிமையே நிலைபெற்றது எனல்

கலி நிலைத்துறை

திருநாரணன் தாள் பெறச் சிந்திக்கவேண்டும்

3007. ஒருநா யகமாய் ஓட

வுலகுட னாண்டவர்,

கருநாய் கவர்ந்த காலர்

சிதைகிய பானையர்,

பெருநாடு காண இம்மையி

லேபிச்சை தாம்கொள்வர்,

திருநா ரணன் தாள் காலம்

பெறச்சிந்தித் துய்ம்மினோ.

திருமால் திருவடிகளை விரைந்து பணியுங்கள்

3008. உய்ம்மின் திறைகொணர்ந் தென்றுல

காண்டவர், இம்மையே

தம்மின் சுவைமட வாரைப்

பிறர்கொள்ளத் தாம்விட்டு,

வெம்மி னொளிவெயில் கானகம்

போய்க்குமை தின்பர்கள்,

செம்மின் முடித்திரு மாலை

விரைந்தடி சேர்மினோ.

கண்ணன் கழலிணைக் கருதுக

3009. அடிசேர் முடியின ராகி

யரசர்கள் தாம்தொழ,

இடிசேர் முரசங்கள் முற்றத்

தியம்ப இருந்தவர்,

பொடிசேர் துகளாய்ப் போவர்கள்

ஆதலின் நொக்கென,

கடிசேர் துழாய்முடிக் கண்ணன்

கழல்கள் நினைமினோ.

குவலயா பீடத்தை அழித்தவனை வணங்குக

3010. நினைப்பான் புகில்கடல் எக்கலின்

நுண்மண லிற்பலர்,

எனைத்தோ ருகங்களும் இவ்வுல

காண்டு கழிந்தவர்,

மனைப்பால் மருங்கற மாய்தலல்

லால்மற்றுக் கண்டிலம்,

பனைத்தாள் மதகளி றட்டவன்

பாதம் பணிமினோ.

மாயவன் பேர் சொல்லி வாழுங்கள்

3011. பணிமின் திருவருள் என்னும்அஞ்

சீதப்பைம் பூம்பள்ளி,

அணிமென் குழலார் இன்பக்

கலவி அமுதுண்டார்,

துணிமுன்பு நாலப்பல் லேழையர்

தாமிழிப் பச்செல்வர்,

மணிமின்னு மேனிநம் மாயவன்

பேர்சொல்லி வாழ்மினோ.

எதுவும் நிலையாது : எனவே அண்ணல் அடிகளை அடைக

3012. வாழ்ந்தார்கள் வாழ்ந்தது மாமழை

மொக்குளின் மாய்ந்துமாய்ந்து,

ஆழ்ந்தாரென் றல்லால் அன்று

முதலின் றறுதியா,

வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பரென்

பதில்லை நிற்குறில்,

ஆழ்ந்தார் கடல்பள்ளி அண்ணல்

அடியவர் ஆமினோ.

பகவானின் திருக்குணங்களையே அநுபவியுங்கள்

3013. ஆமின் சுவையவை ஆறோ

டடிசிலுண் டார்ந்தபின்,

தூமென் மொழிமட வாரிரக்

கப்பின்னும் துற்றுவார்,

'ஈமின் எமக்கொரு துற்றெ'றன்

றிடறுவ ராதலின்,

கோமின் துழாய்முடி ஆதியஞ்

சோதி குணங்களே.

அரவணையான் திருநாமங்களைச் சொல்லுங்கள்

3014. குணங்கொள் நிறைபுகழ் மன்னர்

கொடைக்கடன் பூண்டிருந்தது.

இணங்கி யுலகுட னாக்கிலும்

ஆங்கவ னையில்லார்,

மணங்கொண்ட கோபத்து மன்னியு

மீள்வர்கள் மீள்வில்லை,

பணங்கொள் அரவணை யான்திரு

நாம்ம படிமினோ.

கருடவாகனனின் திருவடிகளை அணுகுக

3015. படிமன்னு பல்கலன் பற்றோ

டறுத்துஐம் புலன்வென்று,

செடிமன்னு காயம்செற்

றார்களு மாங்கவ னையில்லார்,

குடிமன்னு மின்சுவர்க்க மெய்தியு

மீள்வர்கள் மீள்வில்லை,

கொடிமன்னு புள்ளுடை அண்ணல்

கழல்கள் குறுகுமினோ.

பகவானை அடைதலே சிறந்த புருஷார்த்தம்

3016. குறுக மிகவுணர் வத்தொடு

நோக்கியெல் லாம்விட்ட,

இறுக லிறப்பென்னும் ஞானிக்கும்

அப்பய னில்லையேல்,

சிறுக நினைவதோர் பாசமுண்

டாம்பின்னும் வீடில்லை,

மறுபகலில் ஈசனைப் பற்றி

விடாவிடில் வீடஃதே.

இவற்றைப் பாடுதலே உய்யும் வழி

3017. அஃதே உய்யப் புகுமாறென்று

கண்ணன் கழல்கள்மேல்,

கொய்பூம் பொழில்சூழ் குருகூர்ச்

சடகோபன் குற்றேவல்,

செய்கோலத் தாயிரம் சீர்த்தொடைப்

பாடல் இவைபத்தும்,

அஃகாமற் கற்பவர் ஆழ்துயர்

போயுய்யற் பாலரே.

நேரிசை வெண்பா

மாலடிமையே இனிது என்றார் மாறனார்

ஒருநா யகமாய் உலகுக்கு, வானோர்

இருநாட்டில் ஏறியுய்க்கும் இன்பம் - திரமாகா,

மன்னுயிர்ப்போ கந்தீது மாலடிமை யேயினிதாம்,

பன்னியிவை மாறனுரைப் பால்.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is சன்மம் பலபல
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  பாலனாய்
Next