வீற்றீருந்து

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

நான்காம் பத்து

வீற்றீருந்து

பகவானின் திருவருள் பெற்ற ஆழ்வாரின் ஆனந்தம் வெள்ளம்போல் புரண்டோடுகிறது. 'இப்படிப்பட்ட எனக்கு நிகராவார் யார்?' என்று ஆழ்வார் இத்திருவாய்மொழியில் கூறுகிறார். நிகரற்ற ஆனந்தானுபவம் இவருக்கன்றி யாருக்குக் கிடைக்கும்?

எம்பெருமானின் இருப்பைக் கண்டு இன்புறுதல்

கலிநிலைத்துறை

ஏழு பிறப்புகளிலும் எனக்கு ஒரு குறையும் இல்லை

3051. வீற்றிரந் தேழுலகும் தனிக்கோல்

செல்ல, வீவில்சீர்,

ஆற்றல்மிக் காளும் அம்மானை

வெம்மா பிளந்தான்றன்னை,

போற்றி யென்றே கைகளாரத்

தொழுது சொல்மாலைகள்,

ஏற்ற நோற்றேற் கினியென்

னகுறை யெழுமையுமே?

திருமாலை ஏத்தினேன் : நோய்கள் அழிந்துவிட்டன

3052. மைய கண்ணாள் மலர்மே

லுறைவா ளுறைமார்பினன்,

செய்ய கோலத் தடங்கண்ணன்

விண்ணோர் பெருமான்றன்னை

மொய்ய சொல்லா லிசைமாலைக

ளேத்தி யுள்ளப்பெற்றேன்,

வெய்ய நோய்கள் முழுதும்

வியன்ஞாலத்து வீயவே.

அச்சுதனை ஏத்தினேன் : அழிவற்ற இன்பத்தில் இருக்கிறேன்

3053. iM லின்ப மிகஎல்லை

நிகழ்ந்தநம் அச்சுதன்,

வீவில் சீரன் மலர்க்கண்ணன்

விண்ணோர் பெருமான்றன்னை,

வீவில காலம் இசைமாலைகள்

ஏத்தி மேவப்பெற்றேன்,

iM லின்பமிக எல்லை

நிகழ்ந்தனன் மேவியே.

ஆழியானை ஏத்தினேன் : மெய்ம்மறந்தேன்

3054. மேவி நின்று தொழுவார்

வினைபோக மேவும்பிரான்,

தூவியம் புள்ளு டையான்

அடலாழியம் மான்றன்னை,

நாவிய லாலிசை மாலைக

ளேத்திநண் ணப்பெற்றேன்,

ஆவியென் னாவியை யானறி

யேன்செய்த வாற்றையே.

எம்மானை ஏத்தினேன் : தீவினைகள் அழிந்தன

3055. ஆற்ற நல்ல வகைகாட்டும்

அம்மானை, அமரர்தம்

ஏற்றை யெல்லாப் பொருளும்

விரித்தானை எம்மான்றன்னை,

மாற்ற மாலை புனைந்தேத்தி

நாளும் மகிழ்வெய்தினேன்,

காற்றின் முன்னம் கடுகி

வினைநோய்கள் கரியவே.

கண்ணனை ஏத்தினேன் ; இனி எனக்கு எதுவும் அரியதில்லை

3056. கரிய மேனிமிசை வெளிய

நீறுசிறி தேயிடும்,

பெரிய கோலத் தடங்கண்ணன்

விண்ணோர் பெருமான்றன்னை,

உரிய சொல்லா லிசைமாலைகள்

ஏத்தியுள்ளப் பெற்றேற்கு,

அரிய துண்டோ எனக்கின்று

தொட்டுமினி யென்றுமே?

கண்ணனைப் பாடினேன் ; இனிக் குறையே இல்லை

3057. என்றும் ஒன்றாகி யத்தாரும்

மிக்கார்களும், தன்றனக்

கின்றி நின்றானை யெல்லா

வுலகும் உடையான் றன்னை,

குன்ற மொன்றால் மழைகாத்த

பிரானைச்சொன் மாலைகள்,

நன்று சூட்டும் விதியெய்தினம்

என்ன குறைநமக்கே?

திருமாலைப் பாடினேன் : எனக்கு வானவரும் நிகரில்லை

3058. நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும்

இன்பனை, ஞாலத்தார்

தமக்கும் வானத் தவர்க்கும்

பெருமானை, தண்டாமரை

சுமக்கும் பாதப் பெருமானைச்

சொன்மாலைகள், சொல்லுமா

றமைக்க வல்லேற் கினியாவர்

நிகரகல் வானத்தே?

கண்ணனைப் பாடும் எனக்கு நிகர் உண்டோ?

3059. வானத்தும் வானத்துள் ளும்பரும்

மண்ணுள்ளும் மண்ணின்கீழ்த்

தானத்தும், எண்டிசை யும்தவி

ராதுநின் றான்றன்னை,

கூனற்சங் கத்தடக் கையவனைக்

குடமாடியை வானக்

கோனைக், கவிசொல்ல வல்லேற்

கினிமா றுண்டோ?

திருமாலைப் பாட நான் பெருந்தவம் செய்திருக்கிறேன்

3060. உண்டும் உமிழ்ந்தும் கடந்தும்

இடந்தும் கிடந்தும்நின்றும்,

கொண்ட கோலத் தொடுவீற்

றிருந்தும் மணங்கூடியும்,

கண்ட வாற்றால் தனக்கே

யுலகென நின்றான்றன்னை,

வண்டமிழ் நூற்க நோற்றேன்

அடியார்க் கின்பமாரியே.

இவற்றைப் பாடுக : இலக்குமியின் அருள் கிட்டும்

3061. மாரி மாறாத தண்ணம்மலை

வேங்கடத் தண்ணலை,

வாரி மாறாத பைம்பூம்

பொழில்சூழ் குருகூர்நகர்,

காரி மாறன் சடகோபன்

சொல்லாயிரத் திப்பத்தால்,

வேரி மாறாத பூமே

லிருப்பாள் வினைதீர்க்குமே.

நேரிசை வெண்பா

தன் பெருமைகளை நன்குரைத்தான் மாறன்

வீற்றிருக்கும் மால்விண்ணில் மிக்க மயல்தன்னை,

ஆற்றுதற்காத் தன்பெருமை யானதெல்லாம்,தோற்ற வந்து

நன்றுகலக் கப்போற்றி நன்குகந்து வீறுரைத்தான்,

சென்ற துயர்மாறன் தீர்ந்து.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is மண்ணை
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  தீர்ப்பாரை
Next