ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
திருவாய்மொழி
நான்காம் பத்து
ஏறாளாம்
பராங்குச நாயகி இவ்வாறு அழைத்தும் பகவான் எதிரில் வந்து முகம் காட்டவில்லை. அவன் நம்மை 'வெறுத்துவிட்டான்' என்று ஆழ்வார் முடிவு செய்தார். அவனுக்கு வேண்டாத இந்த ஆத்மா தமக்கும் வேண்டாம் என்று அவர் எண்ணுகிறார், தம்மைத் தலைவியாக கருதி ஈண்டுப் பாடுகிறார்.
தலைவி கூற்று
கொச்சக் கலிப்பா
எம்பெருமான் விரும்பாத இந்த நிறம் எனக்கு வேண்டாம்
3084. ஏறாளாம் இறையோனம்
திசைமுகனும் திருமகளும்,
கூறாளும் தனியுடம்புடன்
குலங்குலமா அசுரர்களை,
நீறாகும் படியாக
நிருமித்துப் படைதொட்ட,
மாறாளான் கவராத
மணிமாமை குறைவிலமே.
மாயன் விரும்பாத இந்த நெஞ்சு வேண்டாம்
3085. மணிமாமை குறைவில்லா
மலர்மாதர் உறைமார்வன்,
அணிமானத் தடவரைத்தோள்
அடலாழித் தடக்கையன்,
பணிமானம் பிழையாமே
யடியேனைப் பணிகொண்ட,
மணிமாயன் கவராத
மடநெஞ்சால் குறைவிலமே.
மாயன் கவராத அடக்கம் எனக்கு வேண்டாம்
3086. மடநெஞ்சால் குறைவில்லா
மகள்தாய்செய் தொருபேய்சிச்,
விடநஞ்ச முலைசுவைத்த
மிகுஞானச் சிறுகுழவி,
படநாகத் தணைக்கிடந்த
பருவரைத்தோள் பரம்புருடன்,
நெடுமாயன் கவராத
நிறையினால் குறைவிலமே.
கண்ணன் விரும்பாத தளிர் நிறம் எனக்கு எதற்கு.
3087. நிறையினாற் குறைவில்லா
நெடும்பணைத்தோள் மடப்பின்னை,
பொறையினால் முலையணைவான்
கறையினார் துவருடுக்கை
கடையாவின் கழிகோல்கை,
சறையினார் கவராத
தளிர்நிறத்தால் குறைவிலமே.
ஸ்ரீ ராமன் விரும்பாத அறிவு எனக்கு வேண்டாம்
3088. தளிர்நிறத்தால் குறைவில்லாத்
தனிச்சிறையில் விளப்புற்ற,
கிளிமொழியாள் காரணமாக்
கிளரரக்கன் நகரெரித்த,
களிமலர்த் துழாயலங்கல்
கமழ்முடியன் கடல்ஞாலத்து,
அளிமிக்கான் கவராத
அறிவினால் குறைவிலமே.
திரிவிக்கிரமன் விரும்பாத மினுமினுப்பு எனக்கு வேண்டாம்
3089. அறிவினால் குறைவில்லா
அகல்ஞாலத் தவரறிய,
நெறியெல்லா மெடுத்துரைத்த
நிறைஞானத் தொருமூர்த்தி,
குறியமாண் உருவாகிக்
கொடுங்கோளால் நிலங்கொண்ட,
கிறியம்மான் கவராத
கிளராளியால் குறைவிலமே.
நரசிங்கன் விரும்பாத வளையல் எனக்கு வேண்டாம்
3090. கிளரொளியால் குறைவில்லா
அரியுருவாய்க் கிளர்ந்தெழுந்து,
கிளரொளிய இரணியன
தகல்மார்பம் கிழித்துகந்த,
வளரொளிய கனலாழி
வலம்புரியன் மணிநீல,
வளரொளியான் கவராத
வரிவளையால் குறைவிலமே.
தேவநாதன் விரும்பாத மேகலை எனக்கு வேண்டாம்
3091. வரிவளையால் குறைவில்லாப்
பெருமுழுக்கால் அடங்காரை,
எரியழலம் புகவூF
யிருநிலமுன் துயர்தவிர்த்த,
தெரிவரிய சிவன்பிரமன்
அமரர்கோன் பணிந்தேத்தும்,
விரிபுகழான் கவராத
மேகலையால் குறைவிலமே.
கண்ணன் விரும்பாத இவ்வுடல் எனக்கு வேண்டாம்
3092. மேகலை யால் குறைவில்லா
மெலிவுற்ற அகலல்குல்,
போகமகள் புகழ்த்தந்தை
விறல்வாணன் புயம்துணித்து,
நாகமிசைத் துயில்வான் போல்
உலகெல்லாம் நன்கொடுங்க,
யோகணைவான் கவராத
வுடம்பினால் குறைவிலமே.
எம்பெருமான் விரும்பாத ஆத்மா எனக்கு வேண்டாம்
3093. உடம்பினால் குறைவில்லா
உயிர்பிரிந்த மலைத்துண்டம்,
கிடந்தனபோல் துணிபலவா
அசுரர்குழாம் துணித்துகந்த,
தடம்புனல சடைமுடியன்
தனியருகூ றுமர்ந்துறையும்,
உடம்புடையான் கவராத
உயிரினால் குறைவிலமே.
பிறப்பு நீக்கி வைகுந்தம் அடையலாம்
3094. உயிரினால் குறைவில்லா
உலகேழ்தன் உள்ளடுக்கி,
தயிர்வெண்ணெ யுண்டானைத்
தடங்குருகூர்ச் சடகோபன்,
செயிரில்சொல் லிசைமாலை யாயிரத்து
யாயிரத்து ளிப்பத்தால்
வயிரம்சேர் பிறப்பறுத்து
வைகுந்தம் நண்ணுவரே.
நேரிசை வெண்பா
மனமே!மாறன் திருவடிகளையே நினை
'ஏறு திருவுடைய ஈச னுகப்புக்கு,
வேறுபடி லென்னுடைமை மிக்கவுயிர் - தேறுங்கால்
என்றனக்கும் வேண்டா' எனுமாறன் தாளைநெஞ்சே,
நண்தமக்குப் பேறாக நண்ணு.