ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
திருவாய்மொழி
நான்காம் பத்து
நண்ணாதார்
'நிறம் வேண்டா நெஞ்சு வேண்டா உடல் வேண்டா உயிர் வேண்டா' என்றெல்லாம் கூறி ஆத்மீயங்களைத் தள்ளிவிட நினைதார் ஆழ்வார். தள்ளினாலும் அவை சென்றுவிடா. வாழ்வதற்கு அவனருளை எதிர்பார்ப்பதுபோல்,
வாழ்வை முடித்துக்கொள்வதற்கும் அவனருளையே எதிர்பார்த்திருக்க வேண்டம் என்று அறிந்த அவர் 'எம்பிரானே!நீயே என்னை முடித்திடு' என்கிறார் இங்கே.
ஆழ்வார் எம்பெருமானை வேண்டுதல்
கொச்சக் கலிப்பா
கண்ணா என்னை நின் கழலிணைகளில் சேர்த்துக்கொள்
3095. நண்ணாதார் முறுவலிப்ப
நல்லுற்றார் கரைந்தேங்க,
எண்ணாராத் துயர்விளைக்கும்
இவையென்ன உலகியற்கை?,
கண்ணாளா!கடல்கடைந்தாய்!
உனகழற்கே வரும்பரிசு,
தண்ணவா தடியேனைப்
பணிகண்டாய் சாமாறே.
அம்மானே!என்னை அழைத்துக்கொள்ள விரைந்தருள்
3096. சாமாறும் கெடுமாறும்
தமருற்றார் தலைத்தலைப்பெய்து,
ஏமாறிக் கிடந்தலற்றும்
இவையென்ன உலகியற்கை?,
ஆமாறொன் றறியேன் நான்
அரவணையாய்!அம்மானே,
கூமாறே விரைகண்டாய்
அடியேனைக் குறிக்கொண்டே.
அடியேனை அழைத்து அடிமை கொள்
3097. கொண்டாட்டும் குலம்புனைவும்
தமருற்றார் விழுநிதியும்,
வண்டார்பூங் குழலாளும்
மனையழிய வுயிர்மாய்தல்,
கண்டாற்றேன் உலகியற்கை
கடல்வண்ணா!அடியேனைப்,
பண்டேபோல் கருதாதுன்
அடிக்கேகூய்ப் பணிகொள்ளே.
வள்ளலே!உன் அருளாள் என்னைக் கைக்கொள்
3098. கொள்ளென்று கிளர்ந்தெழுந்த
பெருஞ்செல்வம் நெருப்பாக,
கொள்ளென்று தமம்மூடும்
இவையென்ன உலகியற்கை?
வள்ளலே!மணிவண்ணா!
உனகழற்கே வரும்பரிசு,
வள்ளல்செய் தடியேனை
உனதருளால் வாங்காயே.
மணிவண்ணா!மறுக்காமல் என்னை ஏற்றுக்கொள்
3099. வாங்குநீர் மலருலகில்
நிற்பனவுமீ திரிவனவும்,
ஆங்குயிர்கள் பிறப்பிறப்புப்
பிணிமூப்பால் தகர்ப்புண்ணும்,
இங்கிதன்மேல் வெந்நரகம்
இவையென்ன உலகியற்கை?,
வாங்கெனைநீ மணிவண்ணா!
அடியேனை மறுக்கேலே.
ஆரமுதே!என்னை அழைத்துக்கொள்
3100. மறுக்கிவல் வலைப்படுத்திக்
குமைத்திட்டுக் கொன்றுண்பர்,
அறப்பொருளை யறிந்தோரார்
இவையென்ன உலகியற்கை?,
வெறித்துளவ முடியானே!
வினையேனை யுனக்கடிமை
அறக்கொண்டாய், இனியென்னா
ரமுதே!கூய் அருளாயே.
கண்ணா!மீண்டும் இவ்வுலகை எனக்குக் காட்டாதே
3101. ஆயே!இவ் வுலகத்து
நிற்பனவும் திரிவனவும்,
நீயேமற் றொருபொருளும்
இன்றிநீ நின்றமையால்,
நோயேமூப் பிறப்பிறப்புப்
பிணியேயென் றிவையழியக்,
கூயேகொள் அடியேனைக்
கொடுவுலகம் காட்டேலே.
கண்ணா!நின் திருவடிகளில் என்னைச் சேர்ப்பது என்று?
3102. காட்டிநீ கரந்துமிழும்
நிலநீர்தீ விசும்புகால்,
ஈட்டிநீ வைத்தமைத்த
இமையோர்வாழ் தனிமுட்டைக்,
கோட்டையினில் கழித்தெனையுன்
கொழுஞ்சோதி யுயரத்து,
கூட்டரிய திருவடிக்க
ளெஞ்ஞான்று கூட்டுதியே?
கண்ணா!நின் திருவடிகளில் சேர்வது உறுதி
3103. கூட்டுதிநின் குரைகழல்கள் இமையோரும்
தொழாவகை செய்து,
ஆட்டுதிநீ யரவணையாய்!
அடியேனும் அஃதறிவன்,
வேட்கையெல்லாம் விடுத்தெனையுன்
திருவடியே சுமந்துழல,
கூட்டரிய திருவடிக்கள்
கூட்டினை நான் கண்டேனே.
கண்ணா!சிற்றின்பம் தவிர்த்து உன் திருவடி அடைந்தேன்
3104. கண்டுகேட் டுற்றுமோந்
துண்டுழலும் ஐங்கருவி
கண்டவின்பம், தெரிவரிய
அளவில்லாச் சிற்றின்பம்,
ஒண்டொடியாள் திருமகளும்
நீயுமே நிலாநிற்பக்,
கண்டசதிர் கண்டொழிந்தேன்
அடைந்தேனுன் திருவடியே.
இவற்றைப் பாடுக : நாரணன் திருவடி சேரலாம்
3105. திருவடியை நாரணனைக்
கேசவனைப் பரஞ்சுடரை,
திருவடிசேர் வதுகருதிச்
செழுங்குருகூர்ச் சடகோபன்,
திருவடிமே லுரைத்தமிழ்
ஆயிரத்து ளிப்பத்தும்,
திருவடியே அடைவிக்கும்
திருவடிசேர்ந் தொன்றுமினே.
நேரிசை வெண்பா
மாறன் திருவடிகளே உற்ற துணை
நண்ணாது மாலடியை நானிலத்தே வல்வினையால்
எண்ணாராத் துன்பமுறு மிவ்வுயிர்கள், தண்ணிமையைக்
கண்டிருக்க மாட்டாமற் கண்கலங்கு மாறனருள்,
உண்டுநமக் குற்றதுணை யன்று.