ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
திருவாய்மொழி
ஐந்தாம் பத்து
ஊரெல்லாம்
மடலூர வேண்டுமாயின், தான் விரும்புகின்ற நாயகனை ஒரு படத்தில் எழுதவேண்டும். ஆனால், சூரியன் மறைந்து இருள் வந்து அவரது முயற்சியைத் தடுத்துவிட்டது. 'இவள் மடலூர்வது தனக்குக் கௌரவக் குறைவு'என்று பகவானே ஆழியால் சூரியனை மறைத்து இருள் வரச்செய்துவிட்டானோ என்றும் அவர் நினைத்தார்.
நள்ளிரவு வந்தது. எல்லோரும் உறங்கிவிட்டனர். பகவானின் குணங்களையே ஆழ்வார் எண்ணிக்கொண்டிருந்தார். அசோக வனத்தில் சீதாபிராட்டி செய்ய நினைத்தது போல் தன்னைத் தானே மாய்த்துக்கொள்ளவும் விரும்புகிறார். இந்த நிலைகளை எல்லாம் இத்திருவாய்மொழி கூறுகிறது.
இரவு நீட்டிப்புக்கு வருந்திய தலைவி கூறல்
கொச்சகக் கலிப்பா
இரவு நீள்கின்றதே!என் ஆவி காப்பார் ஆர்?
3150. ஊரெல்லாம் துஞ்சி
யுலகெல்லாம் நள்ளிருளாய்,
நீரெல்லாம் தேறியோர்
நீளிரவாய் நீண்டதால்,
பாரெல்லாம் முண்டநம்
பாம்பணையான் வாரானால்,
ஆரெல்லே!வல்வினையேன்
ஆவிகாப் பாரினியே? 1
நெஞ்சமே!நீயும் என் வசமில்லையே!
3151. ஆவிகாப் பாரினியார்?
ஆழ்கடல்மண் விண்மூடி,
மாவிகார மாயோர்
வல்லிரவாய் நீண்டதால்,
காவிசேர் வண்ணனென்
கண்ணனும் வாரானால்,
பாவியேன் நெஞ்சமே!
நீயும்பாங் கல்லையே? 2
ஆழியான் வந்திலன்:சாகவும் வழி தெரியவில்லை
3152. நீயும்பாங் கல்லைகாண்
நெஞ்சமே!நீளிரவும்,
ஓயும் பொழுதின்றி
யூழியாய் நீண்டதால்,
காயும் கடுஞ்சிலையென்
காகுத்தன் வாரானால்,
மாயும் வகையறியேன்
வல்வினையேன் பெண்பிறந்தே. 3
கண்ணன் வந்திலன்:என் மனநோய் தீர்ப்பார் யார்?
3153. பெண்பிறந்தார் எய்தும்
பெருந்துயர்காண் கிலேனென்று,
ஒண்சுடரோன் வாரா
தொளித்தான்,இம் மண்ணளந்த
கண்பெரிய செவ்வாயெங்
காரேறு வாரானால்,
எண்பெரிய சிந்தைநோய்
தீர்ப்பாரார் என்னையே? 4
கண்ணன் வரவில்லை:என்னைத் தேற்றுவார் யார்?
3154. ஆரென்னை யாராய்வார்?
அன்னையரும் தோழியரும்,
'நீரென்னே?'என்னாதே
நீளிரவும் துஞ்சுவரால்,
காரன்ன மேனிநங்
கண்ணனும் வாரானால்,
பேரென்னை மாயாதால்
வல்வினையேன் பின்நின்றே. 5
மாயன் வந்திலன்:என் உயிர் காப்பார் யார்?
3155. பின்நின்ற காதல்நோய்
நெஞ்சம் பெரிதடுமால்,
முன்நின் றிராவூN
கண்புதைய மூடிற்றால்,
மன்னின்ற சக்கரத்தெம்
மாயவனும் வாரானால்,
இந்நின்ற நீளாவி
காப்பாரார் இவ்விடத்தே? 6
தெய்வங்காள்!தீவினையேன் என் செய்கேன்?
3156. காப்பாரார் இவ்விடத்து?
கங்கிருளின் நுண்துளியாய்,
சேட்பால தூழியாய்ச்
செல்கின்ற கங்குல்வாய்,
தூப்பால வெண்சங்கு
சக்கரத்தன் தோன்றானால்,
தீப்பால வல்வினையேன்
தெய்வங்காள்!என்செய்கேன்? 7
கண்ணன் வந்திலனே!தென்றல் என்னை எரிக்கின்றதே!
3157. தெய்வங்காள்!என்செய்கேன்?
ஓரிரவேழ் ஊழியாய்,
மெய்வந்து நின்றென
தாவி மெலிவிக்கும்,
கைவந்த சக்கரத்தென்
கண்ணனும் வாரானால்,
தைவந்த தண்தென்றல்
வெஞ்சுடரில் தானடுமே. 8
இரவு நீள்கிறது:என் மனத்துன்பம் துடைப்பார் யார்?
3158. வெஞ்சுடரில் தானடுமால்
வீங்கிருளின் நுண்டுளியாய்,
அஞ்சுடர வெய்யோன்
அணிநெடுந்தேர் தோன்றாதால்,
செஞ்சுடர்த் தாமரைக்கண்
செவ்வனும் வாரானால்,
நெஞ்சுடர்தீர்ப் பாரினியார்?
நின்றுருகு கின்றேனே! 9
கண்ணன் வாரான் என்றுகூட யாரும் சொல்லவில்லையே!
3159. நின்றுருகு கின்றேனே
போல நெடுவானம்,
சென்றுருகி நுண்டுளியாய்ச்
செல்கின்ற கங்குல்வாய்,
அன்றொருகால் வையம்
அளந்தபிரான் வாரானென்று,
ஒன்றொருகால் சொல்லா
துலகோ உறங்குமே. 10
இவற்றைப் படித்து வைகுந்தம் அடைக
3160. உறங்குவான் போல்யோகு
செய்த பெருமானை,
சிறந்தபொழில் சூழ்குரு
கூர்ச்சட கோபன்சொல்,
நிறந்கிளர்ந்த அந்தாதி
யாயிரத்து ளிப்பத்தால்,
இறந்துபோய் வைகுந்தம்
சேராவா றெங்ஙனேயோ? 11
நேரிசை வெண்பா
மாறன் மனத்துயரை எப்படி விளக்கமுடியும்?
ஊர நினைந்தமட லூரவுமொண் ணாதபடி,
கூரிருள்சேர் கங்குலுடன் கூடிநின்று, - பேராமல்
தீதுசெய் மாறன் றிருவுளத்திற் சென்றதுயர்,
ஓதுவதிங் கெங்ஙனே யோ? (44)