எங்ஙனேயோ

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

ஐந்தாம் பத்து

எங்ஙனேயோ

இதுவும் நாயகி நிலையில் இருந்துகொண்டு அருளிச் செய்யும் திருவாய்மொழி. தாய் தலைமகளுக்குச் சில அறிவுரைகள் கூறி (அவளை) மீட்கப் பார்க்கிறாள். 'திருக்குறுங்குடி நம்பியின் வடிவழகில் நெஞ்சைப் பறி கொடுத்து நிற்கும் என்னை அடக்க முயல்வது முறையன்று'என்று பாராங்குச நாயகி கூறுவதாக அமைந்துள்ளது இப்பகுதி.

தலைவனது உருவெளிப்பாடு கண்ட தலைவி தாய்மாரை மறுத்துக் கூறல்

கலிநிலைத்துறை

குறுங்குடி நம்பியின்பின் என் மனம் செல்கின்றது

3161. எங்ஙனேயோ அன்னை மீர்காள்!

என்னை முனிவதுநீர்?,

நங்கள்கோலத் திருக் குறுங்குடி

நம்பியை நான்கண்டபின்,

சங்கினோடும் நேமி யோடும்

தாமரைக் கண்களடும்,

செங்கனிவா யன்றி னோடும்

செல்கின்ற தென்நெஞ்சமே. 1

நம்பியின் உருவமே என் எதிரில் நின்கின்றது

3162. என்நெஞ்சி னால்நோக்கிக் காணீ

ரென்னை முனியாதே,

தென்னன் சோலைத் திருக்குறுங்குடி

நம்பியை நான்கண்டபின்

மின்னும் நூலும் குண்டலமும்

மார்வில் திருமறுவும்,

மன்னு பூணும் நான்குதோளும்

வந்தெங்கும் நின்றிடுமே. 2

நம்பியின் ஐம்படைகள் என் மனத்தைவிட்டகலா

3163. நின்றிடும் திசைக்கும் நையுமென்

றன்னைய ரும்முனிதிர்,

குன்ற மாடத் திருக்குறுங்குடி

நம்பியை நான்கண்டபின்,

வென்றி வில்லும் தண்டும்

வாளும் சக்கரமும்சங்கமும்,

நின்று தோன்றிக் கண்ணுள்நீங்கா

நெஞ்சுள்ளும் நீங்காவே. 3

நம்பியின் பொன் முடியும் வடிவும் என்னருகில் உள்ளன

3164. நீங்கநில்லாக் கண்ண நீர்களென்

றன்னையரும் முனிதிர்,

தேன்கொள் சோலைத் திருக்குறுங்குடி

நம்பியை நான்கண்டபின்,

பூந்தண் மாலைத் தண்டுழாயும்

பொன்முடி யும்வடிவும்,

பாங்கு தோன்றும் பட்டும்நாணும்

பாவியேன் பக்கத்தவே. 4

நம்பியின் உறுப்புகள் என் உயிர்மேல் உள்ளன

3165. பக்கம்நோக்கி நிற்கும் நையுமென்

றன்னைய ரும்முனிதிர்,

தக்ககீர்த்தித் திருக்கு றுங்குடி

நம்பியை நான்கண்டபின்,

தொக்கசோதித் தொண்டை வாயும்

நீண்ட புருவங்களும்,

தக்கதாமரைக் கண்ணும் பாவியே

னாவியின் மேலனவே. 5

நம்பியின் அவயங்கள் என் நெஞ்சில் நிறைந்தன

3166. மேலும் வன்பழி நங்குடிக்கிவ

ளென்றன்னை காணக்கொடாள்

சோலைசூழ் தண்திருக் குறுங்குடி

நம்பியை நான்கண்டபின்,

கோலநீள் கொடிமூக்கும் தாமரைக்

கண்ணும் கனிவாயும்,

நீலமேனியும் நான்கு தோளுமென்

னெஞ்சம் நிறைந்தனவே. 6

நம்பியின் திருவாழியும் மேனியும் நெஞ்சில் நிலைத்தன

3167. நிறைந்த வன்பழி நங்குடிக்கிவள்

என்றன்னை காணக்கொடாள்

சிறந்தகீர்த்தித் திருக்கு றுங்குடி

நம்பியை நான்கண்டபின்,

நிறைந்தசோதி வெள்ளஞ் சூழ்ந்த

நீண்டபொன் மேனியடும்

நிறைந்தென் னுள்ளே நின்றொழிந்தான்

நேமியங் கையுளதே. 7

குறுங்குடி நம்பியின் உரு என்முன் நிற்கின்றது

3168. கையுள்நன் முகம்வைக்கும் நையுமென்

றன்னைய ரும்முனிதிர்,

மைகொள் மாடத் திருக்குறுங்குடி

நம்பியை நான்கண்டபின்,

செய்யதாமரைக் கண்ணு மல்குலும்

சிற்றிடை யும்வடிவும்,

மொய்யநீள்குழல் தாழ்ந்த தோள்களும்

பாவியேன் முன்னிற்குமே. 8

நம்பி என் மனத்தை விடுத்து அகலமாட்டான்

3169. முன்னின் றாயென்று தோழிமார்களும்

அன்னைய ரும்முனிதிர்,

மன்னு மாடத் திருக்குறுங்குடி

நம்பியை நான்கண்டபின்,

சென்னி நீண்முடி யாதியாய

வுலப்பி லணிகலத்தன்,

கன்னல் பாலமு தாகிவந்தென்

னெஞ்சம் கழியானே. 9

நம்பி என் மனத்தில் நிறைந்ததை யாராலும் அறியமுடியாது

3170. கழியமிக்கதோர் காதல ளிவளென்

றன்னை காணக்கொடாள்,

வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி

நம்பியை நான்கண்டபின்,

குழுமித் தேவர்கு ழாங்கள்தொழச்

சோதிவெள் ளத்தினுள்ளே,

எழுவதோ ருருவென் னெஞ்சுள்ளெழு

மார்க்கு மறிவரிதே. 10

இவற்றைப் படித்தோரே வைஷ்ணவர்

3171. அறிவரிய பிரானை யாழியங்

கையனை யேயலற்றி,

நறியநன் மலர்நாடி நன்குருகூர்ச்

சடகோபன் சொன்ன,

குறிகொளா யிரத்துள் ளிவைபத்தும்

திருக்குறுங் குடியதன்மேல்

அறியக் கற்றுவல்லார் வைட்டணவ

ராழ்கடல் ஞாலத்துள்ளே. 11

நேரிசை வெண்பா

மாறனைக் கருதினால் இன்பக் கடலில் ஆழலாம்

'எங்ஙனே நீர்முனிவ தென்னையினி? நம்பியழகு,

இங்ஙனே தோன்றுகின்ற தென்முன்'என, - அங்ஙன்

உருவெளிப் பாடா வுரைத்ததமிழ் மாறன்,

கருதுமலர்க் கின்பக் கடல். (45)

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is ஊரெல்லாம்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  கடல்
Next