ஆரா அமுதே

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

ஐந்தாம் பத்து

ஆரா அமுதே

வானமாமலைப் பெருமாளும் ஆழ்வாருக்கு முகம் காட்டவில்லை. 'ஒருவேளை திருக்குடந்தையிலே ஸேவை ஸாதிக்கலாம் என்று பகவான் நினைத்திருக்கக்கூடும்'என்று எண்ணிய ஆழ்வார் திருக்குடந்தையிலே சென்று புகுந்தார்;'கண்ணன் அக்ரூரரோடு உரையாடியதுபோல், பகவானும் நம்மிடம் வருவான்'என்று நினைத்தார். வரவில்லை;வருந்தினார். 'எம்பெருமானே!உன்னைக் காண இன்னும் எத்தனை இடங்களில் தேடிவருவேன்?'என்று தாய் முகம் காணாக் குழந்தை போல் அழைத்துக் கதறுகிறார்.

ஆற்றாமை கூறி ஆழ்வார் அலமருதல்

அறுசீர் ஆசிரிய விருத்தம்

திருக்குடந்தை ஆராவமுதே!நின்னைக் கண்டேன்

3194. ஆரா அமுதே!அடியேன் உடலம்

நின்பால் அன்பாயே,

நீராய் அலைந்து கரைய வுருக்கு

கின்ற நெடுமாலே,

சீரார் செந்நெல் கவரி வீசும்

செழுநீர்த் திருக்குடந்தை,

ஏரார் கோலம் திகழக் கிடந்தாய்!

கண்டேன் எம்மானே! 1

திருக்குடந்தைப் பிரானே!நான் என்ன செய்வேன்?

3195. எம்மா னே!என் வெள்ளை முர்த்தி!

என்னை ஆள்வானே,

எம்மா வுருவும் வேண்டு மாற்றால்

ஆவாய் எழிலேறே,

செம்மா கமலம் செழுநீர் மிசைக்கண்

மலரும் திருக்குடந்தை,

அம்மா மலர்க்கண் வளர்கின் றானே!

என்நான் செய்கேனே! 2

திருக்குடந்தையானே!இறந்த பின்னும் நின் தாளே என் துணை

3196. என்நான் செய்கேன்!யாரே களைகண்?

என்னையென் செய்கின்றாய்?

உன்னால் அல்லால் யாவ ராலும்

ஒன்றும் குறைவேண்டேன்,

கன்னார் மதிள்சூழ் கடந்தைக் கிடந்தாய்!

அடியேன் அருவாணாள்,

சென்னா ளெந்நாள்!அந்நா ளுனதாள்

பிடித்தே செலக்காணே. 3

குடந்தையானே!நின்னைக் காண அழுது தொழுகின்றேன்

3197. செலக்காண் சிற்பார் காணும் அளவும்

செல்லும் கீர்த்தியாய்,

உலப்பி லானே!எல்லா வுலகும்

உடைய ஒருமூர்த்தி,

நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்!

உன்னைக் காண்பான்நான்

அலப்பாய்,ஆகா சத்தை நோக்கி

அழுவன் தொழுவனே. 4

ஆராவமுதே!நான் உன் திருவடி சேரும் வகையை நினை

3198. அழுவன் தொழுவன் ஆடிக் காண்பன்

பாடி அலற்றுவன்,

தழுவல் வினையால் பக்கம் நோக்கி

நாணிக் கவிழ்ந்திருப்பன்,

செழுவொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்!

செந்தா மரைக்கண்ணா,

தொழுவ னேனை யுனதாள் சேரும்

வகையே சூழ்கண்டாய். 5

அமுதே!நான் எவ்வளவு நாள்தான் காத்திருப்பேன்?

3199. சூழ்கண் டாயென் தொல்லை வினையை

அறுத்துன் அடிசேரும்

ஊழ்கண் டிருந்தே, தூரக் குழிதூர்த்

தெனைநாள் அகன்றிருப்பன்?,

வாழ்தொல் புகழார் குடந்தைக் கிடந்தாய்!

வானோர் கோமானே,

யாழி னிசையே!அமுதே!அறிவின்

பயனே!அரியேறே! 6

எந்தாய்!இனிப் பொறுக்கமுடியாது:அடைக்கலம் அருள்

3200. அரியே றே!என் அம்பொற் சுடரே!

செங்கட் கருமுகிலே,

எரியே!பவளக் குன்றே!நாற்றோள்

எந்தாய்!உனதருளே,

பிரியா அடிமை யென்னைக் கொண்டாய்

குடந்தைத் திருமாலே,

தரியே னினியுன் சரணந் தந்தென்

சன்மம் களையாயே. 7

மாயா!என் உயிர் பிரியும்பொழுது நின் திருவடித் துணை வேண்டும்

3201. களைவாய் துன்பம் களையா தொழிவாய்

களைகண் மற்றிலேன்,

வளைவாய் நேமிப் படையாய்!குடந்தைக்

கிடந்த மாமாயா,

தளரா வுடலம் என்ன தாவி

சரிந்து போம்போது,

இளையா துனதாள் ஒருங்கப் பிடித்துப்

போத இசைநீயே. 8

ஆதிமூர்த்தீ!எனக்கு தரிசனம் தா

3202. இசைவித் தென்னை யுன்தாள் இணைக்கீழ்

இருந்தும் அம்மானே,

அசைவில் அமரர் தலைவர் தலைவா!

ஆதிப் பெருமூர்த்தி,

திசைவில் வீசும் செழுமா மணிகள்

சரும் திருக்குடந்தை,

அசைவில் உலகம் பரவக் கிடந்தாய்!

காண வாராயே. 9

மாயா!உன்னடிமையாகிய நான் இன்னமும் துன்புறுவேனோ?

3203. வாரா வருவாய் வருமென் மாயா!

மாயா மூர்த்தியாய்,

ஆரா அமுதாய் அடியேன் ஆவி

அகமே தித்திப்பாய்,

தீரா வினைகள் தீர என்னை

ஆண்டாய்!திருக்குடந்தை

ஊரா, உனக்காட் பட்டும் அடியேன்

இன்னம் உழல்வேனோ? 10

இவற்றைப் படியுங்கள்:ஆசைகள் அகலும்

3204. உழலை யென்பின் பேய்ச்சி முலையூ

டவளை யுயிருண்டான்,

கழல்கள் அவையே சரணாக் கொண்ட

குருகூர்ச் சடகோபன்,

குழவில் மலியச் சொன்ன ஓரா

யிரத்து ளிப்பத்தும்,

மழலை தீர வல்லார் காமர்

மானேய் நோக்கியர்க்கே. 11

நேரிசை வெண்பா

அந்தோ!மாறன் தவித்தானே!

ஆரா அமுதாழ்வார் ஆதரித்த பேறுகளைத்

தாராமை யாலே தளர்ந்துமிகத், - தீராத

ஆசையுடன் ஆற்றாமை பேசி அலமந்தான்,

மாசறுசீர் மாறனெம் மான். (48)

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is நோற்ற நோன்பு
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  மானேய் நோக்கு
Next