ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
திருவாய்மொழி
ஆறாம் பத்து
உலகம் உண்ட
'எம்பெருமான் தன்னை எல்லோரும் வந்தடைந்து ஸேவித்துப் பயன் பெறவேண்டும் என்பதற்காகவே வைகுந்தத்திலிருந்து வந்து திருவேங்கடமலையில் நிற்கிறான்'என்பதை நினைத்து, பிராட்டியை முன்னிட்டுக்கொண்டு, ஆழ்வார் திருவேங்கடமுடையானைச் சரணடைகிறார்.
திருவேங்கடவன் திருவடிகளில் சரண் புகல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
நெடியோய்!உன் பாதம் கூடுமாறு கூறாய்!
3326. உலகம் உண்ட பெருவாயா!
உலப்பில் கீர்த்தி யம்மானே,
நிலவும் சுடர்சூ ழொளிமூர்த்தி!
நெடியாய்!அடியே னாருயிரே,
திலதம் உலகுக் காய்நின்ற
திருவேங் கடத்தெம் பெருமானே,
குலதொல் லடியேன் உன்பாதம்
கூடுமாறு கூறாயே. 1
வேங்கடவா!யான் நின் திருவடி சேர அருள்!
3327. கூறாய் நீறாய் நிலனாகிக்
கொடுவல் லசுரர் குலமெல்லாம்,
சீறா எறியும் திருநேமி
வலவா!தெய்வக் கோமானே,
சேறார் சுனைத்தா மரைசெந்நீ
மலரும் திருவேங் கடத்தானே,
ஆறா அன்பில் அடியேனுன்
அடிசேர் வண்ணம் அருளாயே. 2
அண்ணலே!நின் திருவடி அடைய உதவு
3328. வண்ண மருள்கொள் அணிமேக
வண்ணா!மாய அம்மானே,
எண்ணம் புகுந்து தித்திக்கும்
அமுதே!இமையோர் அதிபதியே,
தெண்ணல் அருவி மணிபொன்முத்
தலைக்கும் திருவேங் கடத்தானே,
அண்ண லே!உன் அடிசேர
அடியேற் காவா வென்னாயே! 3
திருமாலே!நான் நின் திருவடி சேருமாறு செய்
3329. ஆவா வென்னா துலகத்தை
அலைக்கும் அசுரர் வாணாள்மேல்,
தீவாய் வாளி மழைபொழிந்த
சிலையா!திருமா மகள்கேள்வா,
தேவா சுரர்கள் முனிக்கணங்கள்
விரும்பும் திருவேங் கடத்தானே,
பூவார் கழல்கள் அருவினையேன்
பொருந்து மாறு புணராயே. 4
முதல்வா!அடியேன் உனபாதம் சேர்வது என்று?
3330. புணரா நின்ற மரமேழன்
றெய்த வொருவில் வலவாவோ,
புணரேய் நின்ற மரமிரண்டின்
நடுவே போன முதல்வாவோ,
திணரார் மேகம் எனக்களிறு
சேரும் திருவேங் கடத்தானே,
திணரார் சார்ங்கத் துனபாதம்
சேர்வ தடியே னெந்நாளே? 5
திருவேங்கடவனே!உன் அடிமேவுவது எந்நாளோ!
3331. 'எந்நா ளேநாம் மண்ணளந்த
இணைத்தா மரைகள் காண்பதற்ª 'கன்று,
எந்தா ளும்நின் றிமையோர்கள்
ஏத்தி யிறைஞ்சி யினமினமாய்,
மெய்ந்நா மனத்தால் வழிபாடு
செய்யும் திருவேங் கடத்தானே,
மெய்ந்நா னெய்தி யெந்நாளுன்
அடிக்கண் அடியேன் மேவுவதே? 6
அமுதே!இனி நொடிப்பொழுதும் ஆற்றேன்
3332. அடியேன் மேவி யமர்கின்ற
அமுதே!இமையோர் அதிபதியே,
கொடியா அடுபுள் ளுடையானே!
கோலக் கனிவாய்ப் பெருமானே,
செடியார் வினைகள் தீர்மருந்தே!
திருவேங் கடத்தெம் பெருமானே,
நொடியார் பொழுதும் உனபாதம்
காண நோலா தாற்றேனே. 7
வேங்கடத்தானே!அடியேன்பால் வாராய்!
3333. நோலா தாற்றேன் நுனபாதம்
காண வென்று நுண்ணுணர்வில்,
நீலார் கண்டத் தம்மானும்
நிறைநான் முகனு மிந்திரனும்,
சேலேய் கண்ணார் பலர்சூழ
விரும்பும் திருவேங் கடத்தானே,
மாலாய் மயக்கி யடியேன் பால்
வந்தாய் போலே வாராயே. 8
அமுதே!நின் திருவடியை விட்டு அகலமாட்டேன்
3334. வந்தாய் போலே வாராதாய்!
வாரா தாய்போல வருவானே,
செந்தா மரைக்கட் செங்கனிவாய்
நால்தோ ளமுதே!எனதுயிரே,
சிந்தா மணிகள் பகரல்லைப்
பகல்செய் திருவேங் கடத்தானே,
அந்தோ!அடியேன் உன்பாதம்
அகல கில்லேன் இறையுமே. 9
பெருமானே!நின் திருவடி சேர்ந்துவிட்டேன்
3335. 'அகல கில்லேன் இறையும்'என்
றலர்மேல் மங்கை யுறைமார்பா,
நிகரில் புகழாய்!உலகமூன்
றுடையாய்!என்னை ஆள்வானே,
நிகரில் அமரர் முனிக்கணங்கள்
விரும்பும் திருவேங் கடத்தானே,
புகலொன் றில்லா அடியேனுன்
அடிக்கீ ழமர்ந்து புகுந்தேனே. 10
இவற்றைப் பாடுக:வானுலகில் தங்கலாம்
3336. 'அடிக்கீ ழமர்ந்து புகுந்தடியீர்!
வாழ்மின்'என்றென் றருள்கொடுக்கும்
படிக்கே ழில்லாப் பெருமானைப்
பழனக் குருகூர்ச் சடகோபன்,
முடிப்பான் சொன்ன ஆயிரத்துத்
திருவேங் கடத்துக் கிவைபத்தும்,
பிடித்தார் பிடித்தார் வீற்றிருந்து
பெரிய வானுள் நிலாவுவரே. 11
நேரிசை வெண்பா
மனமே!மாறன் அடியினைச் சரணடைய நினை
உலகுயமால் நின்ற யுயர்வேங் கடத்தே,
அலர்மகளை முன்னிட் டவன்றன், - மலரடியே
வன்சரணாய்ச் சேர்ந்த மகிழ்மாறன் றாளிணையே,
உன்சரணாய் நெஞ்சமே! உள். (60)