ஆழியெழ

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

ஏழாம் பத்து

ஆழியெழ

பராங்குசநாயகி திருப்பேர்நகருக்குச் செல்லமுடியாமல் வலிமையற்றிருந்தார். பகவான் தன் செயல்களை எல்லாம் காட்டி வெற்றிகளைக் கூறி அவருக்கு வலிமையுண்டாக்க எண்ணினான்;'பக்தா!என் வெற்றிச் செயல்களைச் சொல்லிக் கொண்டு தரித்து இரு'என்றான். எம்பெருமான் செய்த செயல்களை ஆழ்வார் ஒவ்வொன்றாக ஈண்டுக் கூறுகிறார்.

எம்பெருமானின் வெற்றிகளைக் கூறல்

கலி விருத்தம்

அப்பன் உலகளந்த பான்மை என்னே!

3370. ஆழி யெழச்சங்கும் வில்லு மெழ,திசை

வாழி யெழத்தண்டும் வாளு மெழ,அண்டம்

மோழை யெழமுடி பாத மெழ,அப்பன்

ஊழி யெழவுல கங்கொண்ட வாறே. 1

அப்பன் கடல் கடைந்த செயல் என்னே!

3371. ஆறு மலைக்கெதிர்ந் தோடு மொலி,அர

வூறு கலாய்மலை தேய்க்கு மொலி,கடல்

மாறு கழன்றழைக் கின்ற வொலி,அப்பன்

சாறு படவமு தங்கொண்ட நான்றே. 2

அப்பன் வராகமாய் நிலத்தைப் பெயர்த்தெடுத்த பான்மை

3372. நான்றில வேழ்மண்ணும் தானத்த,வே,பின்னும்

நான்றில வேழ்மலை தானத்த வே,பின்னும்

நான்றில வேழ்கடல் தானத்த வே,அப்பன்

ஊன்றி யிடந்தெயிற் றில்கொண்ட நாளே. 3

அப்பன் உலகுண்ட பான்மை பிரமாதம்

3373. நாளு மெழநில நீரு மெழ,விண்ணும்

கோளு மெழஎரி காலு மெழ,மலை

தாளு மெழச்சுடர் தானு மெழ,அப்பன்

ஊளி யெழவுல கமுண்ட வூணே. 4

கண்ணன் பாரதப் போர் நடத்திய செயல் போற்றத்தக்கது

3374. ஊணுடை மல்லர் ததர்ந்த வொலி,மன்னர்

ஆணுடைச் சேனை நடுங்கு மொலி,விண்ணுள்

ஏணுடைத் தேவர் வெளிப்பட்ட வொலி,அப்பன்

காணுடைப் பாரதம் கையறை போழ்தே. 5

சிங்கப்பிரானின் செயல் வியக்கத்தக்கது

3375. போழ்து மெலிந்தபுன் செக்கரில்,வான்திசை

சூழு மெழுந்துதி ரப்புன லா,மலை

கீழ்து பிளந்தசிங் கமொத்த தால்,அப்பன்

ஆழ்துயர் செய்தசு ரரைக்கொல்லு மாறே. 6

இராமனாய் இலங்கை செற்ற செயல் இணையற்றது

3376. மாறு நிரைத்திரைக் கும்சரங் கள்,இன

நூறு பிணம்மலை போல்புர ள,கடல்

ஆறு மடுத்துதி ரப்புன லா,அப்பன்

நீறு படவிலங் கைசெற்ற நேரே. 7

கண்ணன் வாணனைக் கொன்றமை அற்புதம்

3377. நேர்சரிந் தான்கொடிக் கோழிகொண் டான்,பின்னும்

நேர்சரிந் தானெரி யுமன லோன்,பின்னும்

நேர்சரிந் தான்முக்கண் மூர்த்திகண் டீர்,அப்பன்

நேர்சரி வாணன்திண் டோள்கொண்ட அன்றே. 8

அப்பன் உலகைப் படைத்த செயல் ஆச்சரியமானது

3378. அன்றுமண் நீரெரி கால்விண் மலைமுதல்,

அன்று சுடரிரண் டும்பிற வும்,பின்னும்

அன்று மழையுயிர் தேவும்மற் றும்,அப்பன்

அன்று முதலுல கம்செய் ததுமே. 9

கண்ணன் மலையைக் குடையாகப் பிடித்தானே!

3379. மேய்நிரை கீழ்புக மாபுர ள,சுனை

வாய்நிறை நீர்பிளி றிச்சொரி ய,இன

ஆநிரை பாடியங் கேயடுங் க,அப்பன்

தீமழை காத்துக் குன்ற மெடுத்தானே. 10

இவற்றைப் படித்தோர்க்கு வெற்றிகள் கிடைக்கும்

3380. குன்ற மெடுத்த பிரானடி யாரொடும்,

ஒன்றிநின் றசட கோப னுரைசெயல்,

நன்றி புனைந்தஒ ராயிரத் துள்ளிவை,

வென்றி தரும்பத்தும் மேவிக்கற் பார்க்கே. 11

நேரிசை வெண்பா

மாறன் பாடல்களே நல்ல பாடல்கள்

ஆழிவண்ணன் றன்விசய மானவைமுற் றுங்காட்டி,

'வாழிதனால்!'என்று மகிழ்ந்துநிற்க, - ஊழிலவை

தன்னையின்று போற்கண்டு தானுரைத்த மாறன்சொல்,

பன்னுவரே நல்லதுகற் பார். (64)

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is வெள்ளைச் சுரிசங்கு
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  கற்பார்
Next