ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
திருவாய்மொழி
ஏழாம் பத்து
கற்பார்
பகவானின் வெற்றிச் செயல்களையும், மற்றும் சில சரித்திரங்களையும் பேசி அநுபவித்த ஆழ்வார், 'பகவானின் கல்யாணகுணங்களை அநுபவியாமல் மக்கள் வேறு செயல்களில் மனத்தைச் செலுத்தி வீண்பொழுது போக்குகிறார்களே!இப்படியும் இருக்கலாமா?' என்று வியந்து, மனம் நொந்துப் பேசுகிறார் இப்பகுதியில்.
எம்பிரானுக்கு அடிமையாகாதோரைப் பார்த்து இரங்குதல்
3381. கற்பார் இராம பிரானையல்
லால்மற்றும் கற்பரோ?,
புற்பா முதலாப் புல்லெறும்
பாதியன் றின்றியே,
நற்பால் அயோத்தியில் வாழும்
சராசரம் முற்றவும்,
நற்பாலுக் குய்த்தனன் நான்முக
னார்பெற்ற நாட்டுளே.
நாரணனுக்கே அடிமையாகுங்கள்
3382. நாட்டில் பிறந்தவர் நாரணற்
காளன்றி யாவரோ ,
நாட்டில் பிறந்த படாதன
பட்டு மனிசர்க்கா,
நாட்டை நலியும் அரக்கரை
நாடித் தடிந்திட்டு,
நாட்டை யளித்துய்யச் செய்து
நடந்தமை கேட்டுமே?
கேசவன் புகழையே கேட்கவேண்டும்
3383. கேட்பார்கள் கேசவன் கீர்த்தியல்
லால்மற்றும் கேட்பரோ,
கேட்பார் செவிசுடு கீழ்மை
வசுவுக ளேவையும்,
சேட்பால் பழம்பகை வன்சிசு
பாலன், திருவடி
தாட்பால் அடைந்த தன்மை
யறிவாரை யறிந்துமே?
எம்பெருமானுக்கு அன்றி மற்றவர்க்குஆளாவரோ!
3384. தன்மை யறிபவர் தாம்அவற்
காளன்றி யாவரோ,
பன்மைப் படர்பொருள் ஆதுமில்
பாழ்நெடுங் காலத்து,
நன்மைப் புனல்பண்ணிநான்முக
னைப்பண்ணி, தன்னுள்ளே
தொன்மை மயக்கிய தோற்றிய
சூழல்கள் சிந்தித்தே?
மாயன் திருவடிகளையே கருதுங்கள்
3385. சூழல்கள் சிந்திக்கில் மாயன்
கழலன்றிச் சூழ்வரோ,
ஆழப் பெரும்புனல் தன்னுள்
அழுந்திய ஞாலத்தை,
தாழப் படாமல்தன் பாலொரு
கோட்டிடைத் தான்கொண்ட,
கேழல் திருவுரு வாயிற்றுக்
கேட்டும் உணர்ந்துமே?
வாமனனுக்கே ஆளாகுங்கள்
3386. கேட்டும் உணர்ந்தவர் கேசவற்
காளன்றி யாவரோ,
வாட்டமி லாவண்கை மாவலி
வாதிக்க வாதிப்புண்டு,
ஈட்டங்கொள் தேவர்கள் சென்றிரந்
தார்க்கிடர் நீக்கிய,
கோட்டங்கை வாமன னாயச்செய்த
கூத்துகள் கண்டுமே?
கண்ணனுக்கே அடிமையாகுக
3387. கண்டும் தெளிந்தும்கற் றார்கண்ணற்
காளன்றி யாவரோ,
வண்டுண் மலர்த்தொங்கல் மார்க்கண்
டேயனுக்கு வாழுநாள்
இண்டைச் சடைமுடி யீச
னுடன்கொண்டு சாச்சொல்ல,
கொண்டுடங்குத் தன்னொடும் கொண்டுடன்
சென்ற துணர்ந்துமே?
பகவானின் திருக்குணங்களையே சொல்லவேண்டும்
3338. செல்ல வுணர்ந்தவர் செல்வன்றன்
சீரன்றிக் கற்பரோ,
எல்லை யிலாத பெருந்தவத்
தால்பல செய்மிறை,
அல்லல் அமரரைச் செய்யும்
இரணிய னாகத்தை,
மல்லல் அரியுரு வாய்ச்செய்த
மாயம் அறிந்துமே?
கண்ணபிரானுக்கே யாவரும் அடிமையாகவேண்டும்
3389. மாயம் அறிபவர் மாயவற்
காளன்றி யாவரோ,
தாயம் செறுமொரு நூற்றுவர்
மங்கவோ ரைவர்க்காய்,
தேச மறியவோர் சாரதி
யாய்ச்சென்ற சேனையை
நாசம்செய் திட்டு, நடந்தநல்
வார்த்தை யறிந்துமே?
மாயவற்கு ஆளாதலே தெளிந்தோர் செயல்
3390. வார்த்தை யறிபவர் மாயவற்
காளன்றி யாவரோ,
போர்த்த பிறப்பொடு நோயடு
மூப்பொடு இறப்பிவை
நீக்கித்தன் தாளின்கீழ்ச்
சேர்த்து,அவன் செய்யும் சேமத்தை
யெண்ணித் தெளிவுற்றே?
இவற்றைப் படித்தால் சிந்தை தெளிவுறும்
3391. தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்
கின்பக் கதிசெய்யும்,
தெளிவுற்ற கண்ணனைத் தென்குரு
கூர்ச்சட கோபன்சொல்,
தெளிவுற்ற ஆயிரத் துள்ளிவை
பத்தும்வல் லாரவர்,
தெளிவுற்ற சிந்தையர் பாமரு
மூவுல கத்துள்ளே.
நேரிசை வெண்பா
மாறன் பாடல்களே இனியவை
கற்றோர் கருதும் விசயங்க ளுக்கெல்லாம்,
பற்றாம் விபவகுணப் பண்புகளை, - உற்றுணர்ந்து
மண்ணிலுள்ளோர் தம்மிழவை வாய்ந்துரைத்த மாறன் சொல்,
பண்ணிலினி தானதமிழ்ப் பா.