பிறவித்துயர்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

முதற்பத்து

பிறவித்துயர்

பகவானை அடைந்து பெற்ற இன்பங்களை ஆழ்வார் கூறுகிறார். தன்னைப் பூசிப்பார்க்குத் திருமால் இனியவன்.

கலி விருத்தம்

கைவல்யார்த்திகளும் ஈசனைப் போற்றுவர்

2741. பிறவித் துயரற ஞானத்துள் நின்று,

துறவிச் சுடர்விளக் கம்தலைப் பெய்வார்,

அறவனை யாழிப் படையந் தணனை,

மறவியை யின்றி மனத்துவைப் பாரே.

கண்ணனே நம்மை எந்நாளும் காக்கும் மருந்து

2742. வைப்பாம் மருந்தாம் அடியரை, வல்வினைத்

துப்பாம் புலனைந்தும் துஞ்சக் கொடானவன்,

எப்பால் யவர்க்கும் நலத்தா லுயர்ந்துயர்ந்து,

அப்பா லவனெங்க ளாயர் கொழுந்தே.

கண்ணனை வழிபட்டேன், என் மயக்கம் தீர்ந்தேன்

2743. ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும்

மாயப் பிரானயென் மாணிக்கச் சோதியை,

தூய அமுதைப் பருகிப் பருகி, என்

மாயப் பிறவி மயர்வறுத்தேனே.

ஆதிமூலத்தை நான் விடமாட்டேன்

2744. மயர்வற என்மனத்தே மன்னினான் றன்னை,

உயர்வினை யேதரும் ஒண்சுடர்க் கற்றையை,

அயர்வில் அமரர்க்ள ஆதிக் கொழுந்தை, என்

'இயைவினை யென்சொல்லி யான்விடு வேனோ?

கண்ணனை யான் விடுவேனோ?

2745. விடுவே னோவென் விளக்கைஎன் னாவியை,

நடுவே வந்துய்யக் கொள்கின்ற நாதனை,

தொடுவே செய்திள ஆய்ச்சியர் கண்ணினுள்,

விடவே செய்து விழிக்கும் பிரானையே?

திருத்துழாயான் என் உள்ளத்தில் இருக்கிறான்.

2746. பிரான்பெ ருநிலங் கீண்டவன், பின்னும்

விராய்ம லர்த்துழாய் வேய்ந்த முடியன்,

மராமர மெய்த மாயவன், என்னுள்

இரானெனில் பின்னை யானொட்டு வேனோ?

மாயவன் என் உயிரோடு கலந்து விட்டான்

2747. யானொட்டி யென்னுள் இருத்துவ மென்றிலன்,

தானொட்டி வந்தென் தனிநெஞ்சை வஞ்சித்து,

ஊனொட்டி நின்றென் உயிரில் கலந்து, இயல்

வானொட்டு மோஇனி யென்னை நெகிழ்க்கவே?

கண்ணனால் என் நெஞ்சைவிட்டுப் பிரிய இயலாது

2748. என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன்னெஞ்சந்

தன்னை, அகல்விக்கத் தானும்கில் லானினி,

பின்னை நெடும்பணைத் தோள்மகிழ் பீடுடை,

முன்னை யமரர் முழுமுத லானே.

கண்ணன் என்னை இனிப் பிரிய வழியில்லை

2749. அமரர் முழுமுத லாகிய ஆதியை,

அமரர்க் கமுதீந்த ஆயர் கொழுந்தை,

அமர அழும்பத் துழவியென் னாவி,

அமரத் தழுவிற் றினிய கலுமோ?

பகலும் இரவும் கண்ணனையே பாடுவோம்

2750. அகலில் அகலும் அணுகில் அணுகும்,

புகலு மரியன் பொருவல்ல னெம்மான்,

நிகரில் அவன்புகழ் பாடி யிளைப்பிலம்,

பகலு மிரவும் படிந்து குடைந்தே.

நோய்களை ஓட்டும் பாடல்கள் இவை

2751. குடைந்துவண் டுண்ணும் துழாய்முடி யானை,

அடைந்த தென்குரு கூர்ச்சட, கோபன்,

மிடைந்த சொல்தொடை, யாயிரத் திப்பத்து,

உடைந்து நோய்களை யோடு விக்குமே.

நேரிசை வெண்பா

மனமே!திருமால் திருவடிகளையே துணையாகக்கொள்

பிறவியற்று நீள்விசும்பிற் பேரின்ப முய்க்கும்

திறமளிக்குஞ் சீலத் திருமால்,-அறவினியன்

பற்றுமவர்க் கென்று பகர்மாறன் பாதமே,

உற்றதுணை யென்றுளமே!ஓடு.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is பரிவதில்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  ஓடும்புள்
Next