ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
திருவாய்மொழி
எட்டாம் பத்து
மாயக்கூத்தா
பகவானின் வடிவழகினை நெஞ்சினால் அநுபவிக்கும் ஆழ்வார், 'வடிவழகைக் கண்ணால் கண்டு அவனை அணைந்து வாழ வேண்டும்' என்ற பெருவிடாய் கொள்கிறார், 'என் விடாய் எல்லாம் தீரும்படி காண வாராயே' என்றழைக்கிறார். ஆனால், பகவான் வரவில்லை. இப்படியே துன்புற்று முடிந்து போகப் போகிறோம் என்று நினைத்து அரற்றுகிறார் ஆழ்வார்.
ஆர்வம் மிகுதியால் ஆழ்வார் அழுது புலம்பல்
அறுசீர் ஆசிரிய விருத்தம்
கண்ணா!ஒரு நாளாவது நான் காண வா
3491. மாயக் கூத்தா!வாமனா!
வினையேன் கண்ணா!கண்கைகால்,
தூய செய்ய மலர்களாச்
சோதிச் செவ்வாய் முகிழதா,
சாயல் சாமத் திருமேனி
தணபா சடையா, தாமரைநீள்
வாசத் தடம்போல் வருவானே!
ஒருநாள் காண வாராயே.
என்மீது இரங்கி ஒரு நாளாவது தரிசனம் தா
3492. 'காண வாராய்' என்றென்று
கண்ணும் வாயும் துவர்ந்து,அடியேன்
நாணி நன்னாட் டலமந்தால்
இரங்கி யருநாள் நீயந்தோ,
காண வாராய் கருநாயி
றுதிக்கும் கருமா மாணிக்க,
நாணல் மலைபோல் சுடர்ச்சோதி
முடிசேர் சென்னி யம்மானே
கண்ணா அழுகிறேனே ஒரு முறையாவது காட்சி தா
3493. 'முடிசேர் சென்னி யம்மா!நின்
மொய்பூந் தாமத் தண்டுழாய்,
கடிசேர் கண்ணிப் பெருமானே!'
என்றென் றேங்கி யழுதக்கால்,
படிசேர் மகரக் குழைகளும்
பவள வாயும் நால்தோளும்,
துடிநே ரிடையும் அமைந்ததோர்
தூநீர் முகில்போல் தோன்றாயே.
எந்தாய்!நின் திருக்கோலம் என் மனத்தில் நிறைந்தது
3494. தூநீர் முகில்போல் தோன்றும்நின்
சுடர்கொள் வடிவும் கனிவாயும்,
தேநீர்க் கமலக் கண்களும்
வந்தென் சிந்தை நிறைந்தவா,
மாநீர் வெள்ளி மலைதன்மேல்
வண்கார் நீல முகீல்போல,
தூநீர்க் கடலுள் துயில்வானே
எந்தாய் சொல்ல மாட்டேனே.
கண்ணா!நின் பேரொளிதான் என்னே!
3495. சொல்ல மாட்டேன் அடியேனுன்
துளங்கு சோதித் திருப்பாதம்,
எல்லை யில்சீ ரிளஞாயி
றிரண்டு போலென் னுள்ளவா!,
அல்லல் என்னும் இருள்சேர்தற்
குபாயம் என்னே?. ஆழிசூழ்
மல்லல் ஞால முழுதுண்ட
மாநீர்க் கொண்டல் வண்ணனே!'
கண்ணா!உன் திருவடி காண ஒரு நாளாவது வா
3496. 'கொண்டல் வண்ணா!குடக்கூத்தா
வினையேன் கண்ணா!கண்ணா,என்
அண்ட வாணா' என்றென்னை
ஆளக் கூப்பிட் டழைத்தக்கால்,
விண்டன் மேல்தான் மண்மேல்தான்
விரிநீர்க் கடல்தான் மற்றுத்தான்,
தொண்ட னேனுன் கழல்காண
ஒருநாள் வந்து தோன்றாயே.
அம்மானை அடியேனைக் கூவிப் பணிகொள்
3497. வந்து தோன்றா யன்றேலுன்
வையம் தாய மலரடிக்கீழ்,
முந்தி வந்து யான்நிற்ப
முகப்பே கூவிப் பணிகொள்ளாய்,
செந்தண் கமலக் கண்கைகால்
சிவந்த வாயோர் கருநாயிறு,
அந்த மில்லாக் கதிர்பரப்பி
அலர்ந்த தொக்கும் அம்மானே
கண்ணா!நீ எனக்குக் காட்சி தருவதுதான் தக்கது
3498. ஒக்கும் அம்மா னுருவமென்
றுள்ளம் குழைந்து நாணாளும்,
தொக்க மேகப் பல்குழாங்கள்
காணுந் தோறும் தொலைவன்நான்,
தக்க ஐவர் தமக்காயன்
றீரைம் பதின்மர் தாள்சாய,
புக்க நல்தேர்த் தனிப்பாகா!
வாராய் இதுவோ பொருத்தமே?
கண்ணா!உன் எண்ணம்தான் என்ன?
3499. 'இதுவோ பொருத்தம் மின்னாழிப்
படையாய்!ஏறும் இருஞ்சிறைப்புள்,
அதுவே கொடியா வுயர்த்தானே!'
என்றென் றேங்கி யழுதக்கால்,
எதுவே யாகக் கருதுங்கொல்
இம்மா ஞாலம் பொறைதீர்ப்பான்,
மதுவார் சோலை யுத்தர
மதுரைப் பிறந்த மாயனே?
எங்கும் நிறைந்தவனே உன்னை எங்கே காண்பேன்?
3500. பிறந்த மாயா!பாரதம்
பொருத மாயா!நீயின்னே,
சிறந்த கால்தீ நீர்வான்மண்
பிறவு மாய பெருமானே,
கறந்த பாலுள் நெய்யேபோல்
இவற்று ளெங்கும் கண்டுகொள்,
இறந்து நின்ற பெருமாயா!
உன்னை எங்கே காண்கேனே?
இவற்றைப் பாடுக பெருமகழிச்சி அடையலாம்
3501. 'எங்கே காண்கேன் ஈன்துழாய்
அம்மான் றன்னை யான்?' என்றென்று
அங்கே தாழ்ந்த சொற்களால்
அந்தண் குருகூர்ச் சடகோபன்,
செங்கேழ் சொன்ன வாயிரத்துள்
இவையும் பத்தும் வல்லார்கள்,
இங்கே காண இப்பிறப்பே
மகிழ்வர் எல்லியும் காலையே.
நேரிசை வெண்பா
சடகோபனுடன் இரண்டறக் கலந்துவிடுக
மாயன் வடிவழகைக் காணாத வல்விடா
யாய்,அதற விஞ்சி அழுதலற்றும் - தூயபுகழ்
உற்றசட கோபனைநாம் ஒன்றிநிற்கும் போதுபகல்,
அற்றபொழு தானதெல்லி யாம்.