ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
திருவாய்மொழி
எட்டாம் பத்து
எல்லியும்
உண்மையில் ஆழ்வாரைப் பெறவேண்டும் என்ற பெருவிடாய் பகவானுக்கே இருந்தது. ஆழ்வாருக்கே உதவவில்லையே என்ற வருத்தம் அவனுக்கு இருந்தது. 'திடீரென்று எதிரில் வந்தால், பெருமகிழ்வு கொண்டிருக்கும் ஆழ்வாருக்கு ஏதேனும்
தீங்கு நேரிடும் என்று அவன் நினைத்தான். ஆழ்வாரது மகிழ்ச்சி வெள்ளத்தின் வேகத்தைச் சிறிது சிறிதாகக் கட்டுப்படுத்தி, அவரோடு பரிமாறவேண்டும் என்றும் முடிவு செய்தான். அதனால் திருக்கடித்தானத்தில் (மலைநாட்டுத் திருப்பதிகளில் ஒன்று) வந்து எழுந்தருளி இருந்தான். பகவானின் ஆசையை நினைத்து ஆழ்வார் இனியராய் அதைச் சொல்லியநுபவிக்கிறார்.
தமக்கு அருள் செய்ததற்காக எம்பெருமான்
திருக்கடித்தானத்தில் இருந்த பான்மையைக் கூறல்
கலி விருத்தம்
நமக்கு அருளும் அப்பன் ஊர் திருக்கடித்தானம்
3502. எல்லியும் காலையும் தன்னை நினைந்தெழ,
நல்ல அருள்கள் நமக்கேதந் தருள்செய்வான்,
அல்லியந் தண்ணந் துழாய்முடி யப்பனூர்,
செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே.
என் மனத்தில் உறைபவன் திருக்கடித்தானத்தான்
3503. திருக்கடித் தானமும் என்னுடைச் சிந்தையும்,
ஒருக்கடுத் துள்ளே உறையும் பிரான்கண்டீர்,
செருக்கடுத் தன்று திகைத்த அரக்கரை,
உருக்கெட வாளி பொழிந்த ஒருவனே.
நினைக்குந்தோறும் தித்திப்பவன் திருக்கடித்தானத்தான்
3504. ஒருவ ரிருவரோர் மூவ ரெனநின்று,
உருவு கரந்துள் ளுந்தோறும் தித்திப்பான்,
திருவமர் மார்வன் திருக்கடித் தானத்தை,
மருவி யுறைகின்ற மாயப் பிரானே.
என்னெஞ்சத்தில் தங்குபவன் மாயனே
3505. மாயப் பிரானென வல்வினை மாய்ந்தற,
நேயத்தி னால்நெஞ்சம் நாடு குடிகொண்டான்,
தேசத் தமரர் திருக்கடித் தானத்தை,
வாசப் பொழில்மன்னு கோயில்கொண் டானே.
குடக்கூத்தன் கோயில் திருக்கடித்தானம்
3506. கோயில்கொண் டான்றன் திருக்கடித் தானத்தை,
கோயில்கொண் டானத னோடுமென் னெஞ்சகம்,
கோயில்கொள் தெய்வமெல் லாம்தொழ, வைகுந்தம்
கோயில்கொண் டகுடக் கூத்தவம் மானே.
திருக்கடித்தானம் நினைந்தால் துன்பம் நீங்கும்
3507. கூத்தவம் மான்கொடி யேனிடர் முற்றவும்
மாய்த்தவம் மான்மது சூதவம் மானுறை,
பூத்த பொழில்தண் திருக்கடித் தானத்தை,
ஏத்தநில் லாகுறிக் கொண்மின் இடரே.
தேவர்கள் நணுகும் இடம் திருக்கடித்தானம்
3508. கொண்மின் இடர்கெட வுள்ளத்துக் கோவிந்தன்,
மண்விண் முழுதும் அளந்தவொண் டாமரை,
மண்ணவர் தாம்தொழ வானவர் தாம்வந்து,
நண்ணு திருக்கடித் தான நகரே.
என் நெஞ்சும் திருக்கடித்தானமும் அவன் பதி
3509. தான நகர்கள் தலைசிறந் தெங்கெங்கும்,
வானிந் நிலம்கடல் முற்றுமெம் மாயற்கே,
ஆன விடத்துமென் னெஞ்சும் திருக்கடித்
தான நகரும், தனதாயப் பதியே.
திருக்கடித்தானத்தான் அற்புதன்
3510. தாயப் பதிகள் தலைசிறந் தெங்கெங்கும்,
மாயத்தி னால்மன்னி வீற்றிருந் தானுறை,
தேயத் தமரர் திருக்கடித் தானத்துள்,
ஆயர்க் கதிபதி அற்புதன் தானே.
கற்பகச் சோலையே திருக்கடித்தானம்
3511. அற்புதன் நாரா யணன்அரி வாமனன்,
நிற்பது மேவி யிருப்பதென் னெஞ்சகம்,
நற்புகழ் வேதியர் நான்மறை நின்றதிர்,
கற்பகச் சோலைத் திருக்கடித் தானமே.
இப்பாடல்கள் நம்மை வைகுந்தத்தில் இருத்தும்
3512. சோலைத் திருக்கடித் தானத் துறைதிரு
மாலை, மதிள்குரு கூர்ச்சட கோபன்சொல்,
பாலோ டமுதன்ன ஆயிரத் திப்பத்தும்,
மேலவை குந்தத் திருத்தும் வியந்தே.
நேரிசை வெண்பா
மாலைக் கண்டு பாடியவன் மாறன்
'எல்லி பகல்நடந்த இந்தவிடாய் தீருகைக்கு,
மெல்லவந்து தான்கலக்க வேணும்'என, - நல்லவர்கள்
மன்னுகடித் தானத்தே மாலிருக்க மாறன்கண்டு,
இந்நிலையைச் சொன்னான் இருந்து.