ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
திருவாய்மொழி
எட்டாம் பத்து
கண்கள் சிவந்து
பகவான் ஆழ்வரோடு கலந்தான். 'ஆழ்வார் தம்மைச் சிறியேன் என்று கூறிக்கொண்டு தம்முடைய தாழ்மையைக் கூறிக் கொள்ளத் தொடங்கிவிட்டார். இதை முற்றவிடாமல் இப்போதே களைந்திடவேண்டும்' என்று எண்ணினான். தம் தாழ்மைக்கு எதைக் காரணமாக ஆழ்வார் நினைக்கிறாரோ அந்த ஆத்மாவின் பெருமையை உணர்த்தி அருளுகிறான். அந்நிலையை உரைக்கிறார் ஆழ்வார்.
ஆத்மாவின் உயர்வை அறிந்த ஆழ்வாரின் உரை
அறுசீர் ஆசிரிய விருத்தம்
சாரங்கன் அடியேன் மனத்தில் உள்ளான்
3524. கண்கள் சிவந்து பெரியவாய்
வாயும் சிவந்து கனிந்து,உள்ளே
வெண்பல் இலகு சுடரிலகு
விலகு மகர குண்டலத்தன்,
கொண்டல் வண்ணன் சுடர்முடியன்
நான்கு தோளன் குனிசார்ங்கன்,
ஒண்சங் கதைவா ளாழியான்
ஒருவன் அடியே னுள்ளானே.
ஆத்மாவில் இருக்கும் பரன் உடலிலும் உள்ளான்
3525. அடியே னுள்ளான் உடலுள்ளான்
அண்டத் தகத்தான் புறத்துள்ளான்,
படியே யிதுவென் றுரைக்கலாம்
படியன் அல்லன் பரம்பரன்,
கடிசேர் நாற்றத் துள்ளாலை
இன்பத் துன்பக் கழிநேர்மை,
ஒடியா இன்பப் பெருமையோன்
உணர்வி லும்ப ரொருவனே.
கண்ணனை என் உணர்வில் இருத்தினேன்
3526. உணர்வி லும்ப ரொருவனை
அவன தருளா லுறல்பொருட்டு,என்
உணர்வி னுள்ளே யிருத்தினேன்
அதுவும் அவன தின்னருளே,
உணர்வும் உயிரும் உடம்பும்மற்
றுலப்பி லனவும் பழுதேயாம்,
உணர்வைப் பெறவூர்ந் திறவேறி
யானும் தானா யழிந்தானே.
கண்ணன் என்னுள் கலந்துவிட்டாமை உணர்ந்தேன்
3527. யானும் தானா யழிந்தானை
யாதும் யவர்க்கும் முன்னோனை,
தானும் சிவனும் பிரமனும்
ஆகிப் பணைத்த தனிமுதலை,
தேனும் பாலமூ கன்னலும்
அமுதும் ஆகித் தித்தித்து,என்
ஊனி லுயிரி லுணர்வினில்
நின்ற வொன்றை யுணர்ந்தேனே
கண்ணனின் உண்மைத் தன்மையை அறிதல் அரிது
3528. நின்ற ஒன்றை யுணர்ந்தேனுக்
கதனுள் நேர்மை அதுவிதுவென்று,
ஒன்றும் ஒருவர்க் குணரலாகா
துணர்ந்து மேலும் காண்பரிது
சென்று சென்று பரம்பரமாய்
யாது மின்றித் தேய்ந்தற்று,
நன்று தீதென் றறிவரிதாய்
நன்றாய் ஞானம் கடந்ததே.
பாசமும் பற்றும் அகன்றால் மோட்சம் கிட்டும்.
3529. நன்றாய் ஞானம் கடந்துபோய்
நல்லிந் திரிய மெல்லாமீர்த்து,
ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாழ்
உலப்பி லதனை யுணர்ந்துணர்ந்து,
சென்றாங் கின்ப துன்பங்கள்
செற்றுக் களைந்து பசையற்றால்,
அன்றே யப்போ தேவீடு
அதுவே வீடு வீடாமே.
பற்றினை விடுதலே வீடு பேற்றின்பம்
3530. அதுவே வீடு வீடுபேற்
றின்பந் தானும் அதுதேறி,
எதுவே தானும் பற்றின்றி
யாது மிலிக ளாகிற்கில்,
அதுவே வீடு வீடுபேற்
றின்பந் தானும் அதுதேறாது,
'எதுவே வீடே தின்பம்?'என்
றெய்த்தா ரெய்த்தா ரெய்த்தாரே.
உயிர் பிரியும்பொழுதுகூடக் கண்ணனையே எண்ணுக
3531. எய்த்தா ரெய்த்தா ரெய்த்தாரென்
றில்லத் தாரும் புறத்தாரும்
மொய்த்து,ஆங் கலறி முயங்கத்தாம்
போகும் போது,உன் மத்தர்போல்
பித்தே யேறி யனுராகம்
பொழியும் போதெம் பெம்மானோ
டொத்தே சென்று,அங் குளம்கூடக்
கூடிற் றாகில் நல்லறைப்பே.
யாவும் கண்ணனின் ஸ்வரூபமே
3532. கூடிற் றாகில் நல்லுறைப்புக்
கூடா மையைக் கூடினால்,
ஆடல் பறவை யுயர்கொடியெம்
ஆய னாவ ததுவதுவே,
வீடைப் பண்ணி யருபரிசே
எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய்,
ஓடித் திரியும் யோகிகளும்
உளரு மில்லை யல்லரே.
கண்ணனைக் கலந்தமையால் தெருளும் மருளும் மாய்த்தோம்
3533. உளரும் இல்லை யல்லராய்
உளரா யில்லை யாகியே,
உளரெம் மொருவர் அவர்வந்தென்
உள்ளத் துள்ளே யுறைகின்றார்
வளரும் பிறையும் தேய்பிறையும்
போல அசைவும் ஆக்கமும்,
வளரும் சுடரும் இருளும்போல்
தெருளும் மருளும் மாய்த்தோமே.
இப்பாடல்களால் கண்ணன் கழலிணை கிட்டும்
3534. தெருளும் மருளும் மாய்த்துத்தன்
திருந்து செம்பொற் கழலடிக்கீழ்
அருளி யிருத்தும் அம்மானும்
அயனாம் சிவனாம்,திருமாலால்
அருளப் பட்ட சடகோபன்
ஓரா யிரத்து ளிப்பத்தால்,
அருளி யடிக்கீ ழிருத்தும்நம்
அண்ணல் கருமா ணிக்கமே.
நேரிசை வெண்பா
ஆருயிரின் ஏற்றம் உரைத்தவன் மாறன்
கண்ணிறைய வந்து கலந்தமால் இக்கலவி,
திண்ணிலையா வேணுமெனச் சிந்தித்துத், - தண்ணிதெனும்
ஆருயிரி னேற்றம் அதுகாட்ட ஆய்ந்துரைத்தான்,
காரிமா றன்றன் கருத்து.