ஓராயிரமாய்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

ஒன்பதாம் பத்து

ஓராயிரமாய்

'எம்பெருமானிடம் ஒன்று வேண்டுவதற்கும் நமக்கு என்ன தகுதி இருக்கிறது? உலகிலுள்ள எல்லாப் பொருள்களினுடைய யோகக்ஷேமங்களும் அவனுடையதாகவன்றோ இருக்கின்றன!' என்று நன்கு உணர்ந்த ஆழ்வார், நாராயணன் என்ற சொல்லுக்கு எல்லையான அவனுடைய சீல குணத்தை ஈண்டுப் பாடுகிறார்.

பகவானின் சீலத்தில் ஆழ்வார் ஈடுபட்டுரைத்தல்

கலி விருத்தம்

நம்முடைய பிரானே நாரணன்

3579. ஓரா யிரமாய் உலகேழ் அளிக்கும்

பேரா யிரம்கொண் டதோர்பீ டுடையன்

காரா யினகா ளநன்மே னியினன்,

நாரா யணன்நங் கள்பிரான் அவனே.

எல்லாம் நாராயணனே என்று அறிந்தோம்

3580. அவனே அகல்ஞா லம்படைத் திடந்தான்,

அவனே யஃதுண் டுமிழ்ந்தான் அளந்தான்,

அவனே யவனும் அவனும் அவனும்,

அவனே மற்றெல்லா மும்அறிந் தனமே.

நோய்களைத் தீர்க்கும் மருந்து நாராயணனே

3581. அறிந்தன வேத அரும்பொருள் நூல்கள்,

அறிந்தன கொள்க அரும்பொருள் ஆதல்,

அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி,

அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே.

மனமே கண்ணனை மறந்துவிடாதே

3582. மருந்தே நாங்கள் போகம கிழ்ச்சிக்கென்று,

பெருந்தே வர்குழாங் கள்பிதற் றும்பிரான்

கருந்தேவ னெம்மான் கண்ணன் விண்ணுலகம்

தரும்தே வனைச்சோ ரேல்கண்டாய் மனமே!

மனமே கண்ணனைத்தான் அடையவேண்டும் மறவாதே

3583. மனமே!உன்னைவல் வினையேன் இரந்து,

கனமே சொல்லினேன் இதுசோ ரேல்கண்டாய்,

புனமே வியபூந் தண்டுழாய் அலங்கல்,

இனமே துமிலா னையடை வதுமே.

நாராயணனைச் சிந்தித்தே என் மனம் உடைகிறது

3584. அடைவ தும்அணி யார்மலர் மங்கைதோள்,

மிடைவ தும்அசு ரர்க்குவெம் போர்களே,

கடைவ தும்கட லுள்அமுது, என்மனம்

உடைவ தும்அவற் கேயருங் காகவே.

வைகுந்தம் காண்பதற்கே என் மனம் எண்ணுகின்றது

3585. ஆகம் சேர்நர சிங்கம தாகி,ஓர்

ஆகம் வள்ளுகி ரால்பிளந் தானுறை,

மாக வைகுந்தம் காண்பதற்கு, என்மனம்

ஏக மெண்ணும் இராப்பக லின்றியே.

தேவர்கள் வேங்கடத்தையே தொழுவர்

3586. இன்றிப் போக இருவினை யும்கெடுத்து,

ஒன்றி யாக்கை புகாமையுய் யக்கொள்வான்,

நின்ற வேங்கடம் நீணிலத் துள்ளது,

சென்று தேவர்கள் கைதொழு வார்களே.

பாம்பணையானே!உன் தாள்களைத் தழுவும் விதம் அறியேனே!

3587. தொழுது மாமலர் நீர்சுடர் தூபம்கொண்டு,

எழுது மென்னும் இதுமிகை யாதலில்,

பழுதில் தொல்புகழ்ப் பாம்பணைப் பள்ளியாய்,

தழுவு மாற்றி யேனுன தாள்களே.

நாராயணா!உன் சீலத்தை எப்படிப் புகழ்வேன்?

3588. தாள தாமரை யானுன துந்தியான்,

வாள்கொள் நீள்மழு வாளியுன் ஆகத்தான்,

ஆள ராய்த்தொழு வாரும் அமரர்கள்,

நாளும் என்புகழ் கோவுன சீலமே?

இவற்றைப் படித்தால் வைகுந்தப் பதவி கிடைக்கும்

3589. சீல மெல்லையி லானடி மேல்,அணி

கோல நீள்குரு கூர்ச்சட கோபன்சொல்,

மாலை யாயிரத் துள்ளிவை பத்தினின்

பாலர், வைகுந்த மேறுதல் பான்மைய.

நேரிசை வெண்பா

மாறன் அருளே மன இருளை நீக்கும்

'ஓராநீ §ர் வேண்டினவை யுள்ளதெல்லாஞ் செய்கின்றேன்,

நாரா யணன்றோ நான்?'என்று, - பேருறவைக்

காட்டவவன் சீலத்திற் கால்தாழ்ந்த மாறனருள்,

மாட்டிவிடும் நம்மனத்து மை.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is பண்டைநாளாலே
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  மையார்
Next