ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
திருவாய்மொழி
ஒன்பதாம் பத்து
மையார்
'எம்பெருமான் நம் விஷயத்தில் இப்படி உபே¬க்ஷயாக இருக்கிறானே. முதலை வாய்பட்ட யானையையும், பிரகலாதனையும் காத்ததுபோல் நமக்கு எதிரில் தோன்றி அருள் செய்யவில்லையே' என்று ஆழ்வார் தம்முடைய மகிழ்ச்சியை ஈண்டுப் புலப்படுத்துகிறார்.
ஆழ்வார் பகவானைத் தரிசித்து மகிழ்தல்
கலி விருத்தம்
திருமாலே!என் கண் உன்னைக் காணக் கருதும்
3590. மையார் கருங்கண்ணி கமல மலர்மேல்
செய்யாய், திருமார் வினில்சேர் திருமாலே,
வெய்யார் சுடராழி சுரிசங்க மேந்தும்
கையா, உனைக்காணக் கருதுமென் கண்ணே.
பகவானே!உன்னை நான் கண்டே தீர்வேன்
3591. கண்ணே யுனைக்காணக் கருதி,என் னெஞ்சம்
எண்ணே கொண்ட சிந்தையதாய் நின்றியம்பும்,
விண்ணோர் முனிவர்க் கென்றும்காண் பரியாயை,
நண்ணா தொழியே னென்றுநான் அழைப்பனே.
கோவர்த்தனா!நாய்போல் குழைகின்றேனே!
3592. அழைக்கின்ற வடிநாயேன் நாய்கூழை வாலால்,
குழைக்கின் றதுபோல என்னுள்ளம் குழையும்,
மழைக்கன்று குன்றமெடுத் தாநிரை காத்தாய்,
பிழைக்கின்ற தருளென்று பேதுறு வேனே.
அம்மானே!என் மனம் மறுகுகிறது
3593. உறுவதிது வென்றுனக் காட்பட்டு, நின்கண்
பெறுவ தெதுகொலென்று பேதையேன் நெஞ்சம்,
மறுகல்செய்யும் வானவர் தானவர்க் கென்றும்,
அறிவ தரிய அரியாய அம்மானே!
கண்ணனே கழலிணை காண்பதுதான் என் கருத்து
3594. அரியாய அம்மானை அமரர் பிரானை,
பெரியானைப் பிரமனை முன்படைத் தானை,
வரிவாள் அரவின் அணைப்பள்ளி கொள்கின்ற,
கரியான் கழல்காணக் கருதும் கருத்தே.
ஆதிமூலமே என் நெஞ்சம் உன்னையே நினைக்கிறது
3595. கருத்தே யுனைக்காணக் கருதி,என் னெஞ்சத்
திருத்தாக இருத்தினேன் தேவர்கட் கெல்லாம்
விருத்தா, விளங்கும் சுடர்ச்சோதி யுயரத்
தொருத்தா, உனையுள்ளம் என்னுள்ளம் உகந்தே.
நரசிங்க உருவை என்னுள்ளம் எண்ணுகிறது
3596. உகந்தே யுனையுள்ளு மென்னுள்ளத்து, அகம்பால்
அகந்தான் அமர்ந்தே யிடங்கொண்ட அமலா,
மிகுந்தான வன்மார் வகலம் இருகூறா
நகந்தாய். நரசிங் கமதாய வுருவே!
கண்ணனைக் கண்டு கொண்டேன்
3597. உருவா கியஆறு சமயங்கட் கெல்லாம்,
பொருவாகி நின்றான் அவனெல்லாப் பொருட்கும்,
அருவாகிய ஆதியைத் தேவர்கட் கெல்லாம்,
கருவாகிய கண்ணனைக் கண்டுகொண் டேனே.
கண்ணனைக் கண்டு களித்தேன் பாசுரங்கள் பாடினேன்
3598. கண்டுகொண் டென்கண் ணிணையாரக் களித்து,
பண்டை வினையாயின பற்றோ டறுத்து,
தொண்டர்க் கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்,
அண்டத் தமரர் பெருமான்!அடியேனே.
கருட வாகனனை அடைந்து உய்ந்தேன்
3599. அடியா னிவனென் றெனக்கா ரருள்செய்யும்
நெடியானை, நிறைபுகழ் அஞ்சிறைப் புள்ளின்
கொடியானை, குன்றாமல் உலகம் அளந்த
அடியானை, அடைந்தடி யேனுய்ந்த வாறே.
இவற்றைப் படித்தால் தேவர்களும் உய்வர்
3600. ஆறா மதயானை அடர்த்தவன் றன்னை,
சேறார் வயல்தென் குருகூர்ச் சடகோபன்,
நூறே சொன்னவோ ராயிரத்து ளிப்பத்தும்,
ஏறே தரும்வா னவர்தமின் னுயிர்க்கே.
நேரிசை வெண்பா
மாறன் பேரை ஓதினால் உய்யலாம்
மையார்கண் மாமார்பின் மன்னுந் திருமாலைக்,
கையாழி சங்குடனே காணவெண்ணி, - மெய்யான
காதலுடன் கூப்பிட்டுக் கண்டுகந்த மாறன்பேர்,
ஒதவுய்யு மேயின் னுயிர்.