ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
திருவாய்மொழி
ஒன்பதாம் பத்து
இன்னுயிர்ச்சேவல்
பகவானோடு கலந்து பிரிந்த ஒரு பிராட்டி தன் ஆற்றாமையைத் தரித்துக்கொள்ள ஒரு பூஞ்சோலைக்குப் புறப்பட்டாள். அங்கிருந்த குயில் மயில் பகவானின் பேச்சையும், வடிவையும் நினைவூட்டின. எம்பெருமானால் ஏவப்பட்டே இவை தம்மைத் துன்புறுத்துகின்றன என்று எண்ணிய அப்பிராட்டி, 'நீங்கள் இவ்வளவு முயற்சி செய்யவேண்டுமோ? என் உயிரை நானே போக்கிக் கொள்கிறேன்' என்று கூறும் வாயலரிக பகவானின் குணங்களை நினைத்துத் தளர்கிறாள். ஆழ்வாராகிய தலைவி, பகவானாகிய தலைவனை நினைவுகூர்ந்து தளர்தலை இப்பகுதி கூறுகிறது.
தலைவனை நினைவூட்டும் பொருள்களால் தலைவி தளர்தல்
கலி நிலைத்துறை
குயில்களே கண்ணன் வரக் கூவமாட்டீர்களா?
3601. இன்னுயிர்ச் சேவலும் நீரும்
கூவிக்கொண்டுஇங் கெத்தனை,
என்னுயிர் நோவ மிழற்றேன்
மின்குயில் பேடைகாள்,
என்னயிர்க் கண்ண பிரானை
நீர்வரக் கூவுகிலீர்,
என்னுயிர் கூவிக் கொடுப்பார்க்கும்
இத்தனை வேண்டுமோ?
அன்றில்களே கோவிந்தனை அழையுங்கள்
3602. இத்தனை வேண்டுவ தன்றந்தோ!
அன்றில் பேடைகாள்,
எத்தனை நீரும் நுஞ்சே
வலும்கரைந் தேங்குதிர்,
வித்தகன் கோவிந்தன் மெய்ய
னல்ல னொருவர்க்கும்,
அத்தனை யாமினி யென்னு
யிரவன் கையதே.
அன்றில்காள்!என் உயிர் கோவிந்தன் கையில் உள்ளது
3603. அவன்கைய தேயென தாருயிர்
அன்றில் பேடைகாள்,
எவம்சொல்லி நீர்குடைந் தாடு
திர்புடை சூழவே,
தவம்செய் தில்லா வினையாட்டி
யேனுயி ரிங்குண்டோ,
எவம்சொல்லி நிற்றும்நும் ஏங்கு
கூக்கரல் கேட்டுமே.
கோழிகாள் என் உடலும் உயிரும் தத்தளிக்கின்றன
3604. கூக்குரல் கேட்டும்நங் கண்ணன்
மாயன் வெளிப்படான்,
மேற்கிளை கொள்ளேன்மின் நீரும்
சேவலும் கோழிகாள்,
வாக்கும் மனமும் கரும
மும்நமக் காங்கதே,
ஆக்கையு மாவியும் அந்தரம்
நின்று ழலுமே.
நாகணவாய் பறவைகளே குழறாதீர்கள்
3605. அந்தரம் நின்றுழல் கின்ற
யானுடைப் பூவைகாள்,
நுந்திரத் தேது மிடையில்
லைகுழ றேன்மினோ,
இந்திர ஞாலங்கள் காட்டியிவ்
வேழுல கும்கொண்ட,
நந்திரு மார்பன் நம்மாவி
யுண்ணநன் கெண்ணினான்.
கிளிகளே!காகுத்தன் என்னைக் கூடிப் பிரிந்தானே!
3606. நன்கெண்ணி நான்வ ளர்த்த
சிறுகிளிப் பைதலே,
இன்குரல் நீமிழற் றேலென்
னாருயிர்க் காகுத்தன்,
நின்செய்ய வாயக்கும் வாயன்கண்
ணன்கை காலினன்,
நின்பசுஞ் சாம நிறத்தன்
கூட்டுண்டு நீங்கினான்.
மேகங்காள்!உங்கள் வடிவம் என் உயிருக்கு இயமன்
3607. கூட்டுண்டு நீங்கிய கோலத்
தாமரைக் கட்செவ்வாய்,
வாட்டமி லென்கரு மாணிக்கம்
கண்ணன் மாயன்போல்,
கோட்டிய வில்லொடு மின்னும்
மேகக் குழாங்கள்காள்,
காட்டேன் மின்நும் முருஎன்
னுயிர்க்கது காலனே.
குயில்களே!கண்ணன் நாமம் குழறிக்கொல்கிறீர்களே!
3608. உயிர்க்கது காலனென் றும்மை
யானிரந் தேற்கு,நீர்
குயிற்பைதல் காள்!கண்ணன் நாம
மேகுழ றிக்கொன்றீர்,
தயிர்ப்ப ழஞ்சோற் றொடுபா
லடிசிலும் தந்து,சொல்
பயிற்றிய நல்வள மூட்டினீர்
பண்புடை யீரே!
வண்டுகளே!தும்பிகளே!உங்கள் ரீங்காரம் துன்புறுத்துகின்றன
3609. பண்புடை வண்டொடு தும்பிகாள்
பண்மிழற் றேன்மின்,
புண்புரை வேல்கொடு குத்தாலொக்
கும்நும இன்குரல்,
தண்பெரு நீர்த்தடந் தாமரை
மலர்ந்தா லொக்கும்
கண்பெருங் கண்ணன், நம்மாவி
யுண்டெழ நண்ணினான்.
நாரைகாள்!நான் கண்ணனைக் கூடிவிட்டேன்
3610. எழநண்ணி நாமும் நம்வான
நாடனோ டொன்றினோம்,
பழனநன் னாரைக் குழாங்கள்
காள்!பயின் றென்னினி,
இழைநல்ல வாக்கை யும்பைய
வேபுயக் கற்றது,
தழைநல்ல இன்பம் தலைப்பெய்
தெங்கும் தழைக்கவே.
இவற்றைப் படித்தோர் உருகுவர்
3611. இன்பம் தலைப்பெய் தெங்கும்
தழைத்தபல் லூழிக்கு,
தண்புக ழேத்தத் தனக்கருள்
செய்த மாயனை,
தென்குரு கூர்ச்சட கோபன்சொல்
லாயிரத் துள்ளிவை,
ஒன்பதோ டொன்றுக் கும்மூ
வுலகு முருகுமே.
நேரிசை வெண்பா
மாறன் அருளை நினைத்தால் உள்ளம் உருகும்
'இன்னுயிர்மால் தோற்றினதிங் கென்னெஞ்சில்' என்று, கண்ணால்
அன்றவனைக் காணவெண்ணி ஆண்பெண்ணாய்ப், பின்னையவன்
தன்னைநினை விப்பவற்றால் தான்தளர்ந்த மாறனருள்,
உன்னுமவர்க் குள்ளமுரு கும்.