எங்கானல்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

ஒன்பதாம் பத்து

எங்கானல்

பகவானின் குணங்களை நினைக்க நினைக்க அவனை நேரில் காணவேண்டும் என்ற விருப்பம் ஆழ்வாருக்கு ஏற்படுகிறது. 'உம்முடைய வடிவழகில் ஈடுபட்ட பராங்குசநாயகி உம்மைப் பிரிந்து தரித்திருக்கத் தக்கவளல்லள் என்று சொல்லுங்கள்' எனக் கூறி, திருமூழிக்களத்து எம்பெருமானிடம் நாரை, குருகுரு முதலியவற்றைத் தூது விடுகிறார் ஆழ்வாராகிய

தலைவி.

தலைவி பறவை முதலியவற்றை தூது விடுதல்

நாலடித் தாழிசை

நாரையே!திருமூழிக்காளத்தானிடம் தூது செல்

3623. எங்கானல் அகங்கழிவாய்

இரைதேர்ந்திங் கினிதமரும்,

செங்கால மடநாராய்!

திருமூழிக் களத்துறையும்,

கொங்கார்பூந் துழாய்முடியெங்

குடக்கூத்தர்க் கென்தூதாய்,

நுங்கால்க ளென்தலைமேல்

கெழுமீரோ நுமரோடே.

குருகினங்காள்!எனது நிலையைக் கேட்கமாட்டீர்களா?

3624. நுமரோடும் பிரியாதே

நீரும்நும் சேவலுமாய்,

அமர்காதல் குருகினங்காள்!

அணிமூழிக் களத்துறையும்,

எமராலும் பழிப்புண்டிங்

தென்?தம்மால் இழிப்புண்டு,

தமரோடங் குறைவார்க்குத்

தக்கிலமே!கேளீரே.

அடிகளுக்குத் தக்கவர் ஆகோமோ?

3625. தக்கிலமே கேளீர்கள்

தடம்புனல்வாய் இரைதேரும்

கொக்கினங்காள்!குருகினங்காள்!

குளிர்மூழிக் களத்துரையும்,

செக்கமலத் தலர்போலும்

கண்கைகால் செங்கனிவாய்,

அக்கமலத் திலைபோலும்

திருமேனி யடிகளுக்கே.

மேகங்காள் எனக்குத் தூது சென்றால் என்ன குறை வரும்?

3626. திருமேனி யடிகளுக்குத்

தீவினையேன் விடுதூதாய்,

திருமூழிக் களமென்னும்

செழுநகர்வாய் அணிமுகில்காள்,

திருமேனி யவட்கருளீர்

என்றக்கால், உம்மைத்தன்

திருமேனி யளியகற்றித்

தெளிவிசும்பு கடியுமே?

முகில்காள்!என் தூதுரையைச் சொல்லுங்கள்

3627. தெளிவிசும்பு கடிதோடித்

தீவளைத்து மின்னிலகும்,

ஒ£ ¤முகில்காள்!திருமூழிக்

களத்துறையும் ஒண்சுடர்க்கு,

தெளிவிசும்பு திருநாடாத்

தீவினையேன் மனத்துறையும்,

துளிவார்கட் குழலார்க்கென்

தூதுரைத்தல் செப்புமினே.

வண்டுகாள் பிரானிடம் என் சொற்களைச் சொல்லுங்கள்

3628. தூதுரைத்தல் செப்புமின்கள்

தூமொழிவாய் வண்டினங்காள்,

போதிரைத்து மதுநுகரும்

பொழில்மூழிக் களத்துறையும்,

மாதரைத்தம் மார்வகத்தே

வைத்தார்க்கென் வாய்மாற்றம்,

தூதுரைத்தல் செப்புதிரேல்

சுடர்வளையும் கலையுமே.

குருகுகளே!எம்பெருமானிடம் என் வாய்மொழி கூறுங்கள்

3629. சுடர்வளையும் கலையுங்கொண்

டருவினையேன் தோள்துறந்த,

படர்புகழான் திருமூழிக்

களத்துறையும் பங்கயக்கட்,

சுடர்பவள வாயனைக்கண்

டொருநாளோர் தூய்மாற்றம்,

படர்பொழில்வாய்க் குருகினங்காள்!

எனக்கொன்று பணியீரே.

வண்டுக்கூட்டமே!திருமூழிக்காளத்தானிடம் தூது செல்க

3630. எனக்கொன்று பணியீர்கள்

இரும்பொழில்வாய் இரைதேர்ந்து,

மனக்கின்பம் படமேவும்

வண்டினங்காள்!தும்பிகாள்,

கனக்கொள்திண் மதிள்புடைசூழ்

திருமூழிக் களத்துறையும்

புனக்கொள்கா யாமேனிப்

பூந்துழாய் முடியார்க்கே.

குருகே!பிரான் செயல் தக்கதன்று என்று உரை

3631. பூந்துழாய் முடியார்க்குப்

பொன்னாழிக் கையார்க்கு,

ஏந்துநீ ரிளங்குருகே!

திருமூழிக் களத்தார்க்கு,

ஏந்துபூண் முலைபயந்தென்

இணைமலர்க்கண் ணீர்ததும்ப,

தாம்தம்மைக் கொண்டகல்தல்

தகவன்றென் றுரையீரே.

அன்னங்களே பிரானிடம் எனது நிலை கூறியருள்க

3632. தகவன்றென் றுரையீர்கள்

தடம்புனல்வாய் இரைதேர்ந்து,

மிகவின்பம் படமேவும்

மென்னடைய அன்னங்காள்,

மிகமேனி மெலிவெய்தி

மேகலையும் ஈடழிந்து,என்

அகமேனி யழியாமே

திருமூழிக் களத்தார்க்கே.

இப்பாடல்கள் பிறவி நோயை அறுக்கும்

3633. ஒழிவின்றித் திருமூழிக்

களத்துறையும் ஒண்சுடரை,

ஒழிவில்லா அணிமழலைக்

கிளிமொழியாள் அலற்றியசொல்,

வழுவில்லா வண்குருகூர்ச்

சடகோபன் வாய்ந்துரைத்த,

அழிவில்லா ஆயிரத்திப்

பத்தும்நோய் அறுக்குமே.

நேரிசை வெண்பா

மாறன் தாள்களை நினைத்தால் தீங்குகள் நீங்கும்

'எங்காத லுக்கடிமால் ஏய்ந்த வடிவழகெ'ன்று

அங்காத பற்றாசா ஆங்கவன்பால், - எங்குமுள்ள

புள்ளினத்தைத் தூதாகப் போகவிடும் மாறன்றாள்,

உள்ளினர்க்குத் தீங்கையறுக் கும்.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is உருகுமால்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  அறுக்கும் வினை
Next