ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
திருவாய்மொழி
ஒன்பதாம் பத்து
அறுக்கும் வினை
தூது சென்றவர்கள் மீண்டும் வந்து செய்திகளைச் சொல்லும்வரை ஆழ்வாரால் பொறுத்திருக்கமுடியவில்லை. 'திருநாவாய் சென்று பகவானை அடைவோம், அவனைக் கண்ணாரக் காண்போம், அடிமை செய்வோம்' என்று எண்ணுகிறார். அங்கும் செல்ல இயலவில்லை. இருந்த இடத்திலிருந்தே இவ்வாறு மனோரதத்தைச் செலுத்துகிறார் ஆழ்வார்.
தலைவனது திருநாவாய் செல்லத் தலைவி நினைத்தல்
கலி விருத்தம்
திருநாவாய் அடையும் வகையுண்டோ?
3634. அறுக்கும் வினையா யினஆ கத்தவனை,
நிறுத்தம் மனத்தொன் றியசிந் தையினார்க்கு,
வெறித்தண் மலர்ச்சோ லைகள்சூழ் திருநாவாய்,
குறுக்கும் வகையுண்டு கொலோகொடி யேற்கே?
திருநாவாய் அணுகப்பெறும் நாள் என்றோ?
3635. கொடியே ரிடைக்கோ கனகத் தவள்கேள்வன்,
வடிவேல் தடங்கண் மடப்பின்னை மணாளன்,
நெடியா னுறைசோ லைகள்சூழ திருநாவாய்,
அடியேன் அணுகப் பெறும்நாள் எவைகொலோ!
திருநாவாய்ச் சபையில் புகும் நாள் எந்நாளோ?
3636. 'எவைகொல் அணுகப் பெறுநாள்?' என் றெப்போதும்,
கவையில் மனமின்றிக் கண்ணீர்கள் கலுழ்வன்,
நவையில் திருநா ராணன்சேர் திருநாவாய்,
அவையுள் புகலாவ தோர்நாள் அறியேனே.
கண்ணா எவ்வளவு நாட்கள் காத்திருப்பேன்?
3637. நாளேல் அறியேன் எனக்குள் ளன,நானும்
மீளா அடிமைப் பணிசெய்யப் புகுந்தேன்,
நீளார் மலர்சோ லைகள்சூழ் திருநாவாய்,
வாளேய் தடங்கண் மடப்பின்னை மணாளா
திருநாவாயைக் கண்ணாரக் கண்டு களிப்பது என்றோ?
3638. மணாளன் மலர்மங் கைக்கும்மண் மடந்தைக்கும்,
கண்ணாளன் உலகத் துயிர்தேவர் கட்கெல்லாம்,
விண்ணாளன் விரும்பி யுறையும் திருநாவாய்,
கண்ணாரக் களிக்கின்ற திங்கென்று கொல்கண்டே?
கண்ணா!உனக்கே தொண்டனாகிவிட்டேன்
3639. சண்டே களிக்கின்ற திங்கென்று கொல்கண்கள்,
தொண்டே யுனக்கா யழிந்தேன் துரிசின்றி,
வண்டார் மலர்ச்சோ லைகள்சூழ் திருநாவாய்,
கொண்டே யுறைகின்ற எங்கோ வலர்கோவே!
நம்பீ!அடியான் என்று எனக்கு அருள்
3640. கோவா கியமா வலியை நிலங்கொண்டாய்,
தேவா சுரம்செற் றவனே!திருமாலே,
நாவா யுறைகின்ற என்நா ரணநம்பீ,
'ஆவா அடியா னிவன்'என் றருளாயே.
தேவா!உன்னை என் நெஞ்சத்திருத்தும் அறிவைத் தருக
3641. அருளா தொழிவாய் அருள்செய்து, அடியேனைப்
பொருளாக்கி யுன்பொன் னடிக்கீழ்ப் புகவைப்பாய்,
மருளே யின்றிஉன்னை என்னெஞ்சத் திருத்தும்,
தெருளே தருதென் திருநாவாய் என்தேவே!
அந்தோ!திருநாவாய் அணுகமுடியுமோ?
3642. தேவர் முனிவர்க் கென்றும்காண் டற்கரியன்,
மூவர் முதுல்வன் ஒருமூ வுலகாளி,
தேவன் விரும்பி யுறையும் திருநாவாய்,
யாவர் அணுகப் பெறுவார் இனியந்தோ!
மணிவண்ணா உன்னையே நான் அழைக்கின்றேன்
3643. அந்தோ அணுகப் பெறுநாளென் றெப்போதும்,
சிந்தை கலங்கித் திருமாலென் றழைப்பன்,
கொந்தார் மலர்ச்சோ லைகள்சூழ் திருநாவாய்,
வந்தே யுறைகின்ற எம்மா மணிவண்ணா!
இவற்றைப் படித்தோர் அரசாண்டு மணத்துடன் வாழ்வர்
3644. வண்ணம் மணிமாட நன்னாவாய் உள்ளானை,
திண்ணம் மதிள்தென் குருகூர்ச் சடகோபன்,
பண்ணார் தமிழா யிரத்திப்பத் தும்வல்லார்,
மண்ணாண்டு மணம்கமழ் வர்மல் லிகையே.
நேரிசை வெண்பா
திருநாவாய் செல்ல எண்ணினான் மாறன்
'அறுக்குமிடர்' என்றவன்பால் ஆங்குவிட்ட தூதர்,
மறித்துவரப் பற்றா மனத்தால், - அறப்பதறிச்
செய்யதிரு நாவாயிற் செல்லநினைந் தான்,மாறன்
மையலினாற் செய்வறியா மல்.