இவையும் அவையும்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

முதற்பத்து

இவையும் அவையும்

குழந்தைக்குத் தாய் உணவிட்டு வளர்ப்பதுபோல், பகவானும் அடியார்களுக்குத் தன்னை அநுபவிக்கும் இன்பத்தைச் சிறிது சிறிதாகவே தருகிறான். நம்மாழ்வாரின் திருமுடியிலே வந்து அமரவேண்டும் என்று எண்ணயி பகவான், ஆழ்வாரின் சுற்றுப் பக்கத்தில் நின்றான், அருகில் வந்தான், கூடி நின்றான், இடுப்பில் அமர்ந்தான், மார்பில் இருந்தான், தோள் மீது உட்கார்ந்தான், நாவில் புகுந்து, கண்ணுள்ளும் நெற்றியுள்ளும் நின்று, திருமுடியில் வந்து நிலையாக அமர்ந்தான். இக் கருத்தையே இப்பகுதி கூறுகிறது.

அறுசீர் ஆசிரிய விருத்தம்

கண்ணன் என் சுற்றுப் பக்கத்தில் உள்ளான்

2763. இவையும் அவையும் உவையும்

இவரும் அவரும் உவரும்,

அவையும் யவரும்தன் னுள்ளே

ஆகியும ஆக்கியும் காக்கும்,

அவையுள் தனிமுத லெம்மான்

கண்ண பிரானென் னமுதம்,

சுவையன் திருவின் மணாளன்

என்னுடைச் சூழலு ளானே.

கண்ணன் என் அருகில் வந்தான்

2764. சூழல் பலபல வல்லான்

தொல்லையங் காலத் துலகை

கேழலொன் றாகியி டந்த

கேசவ னென்னுடை யம்மான்,

வேழ மருப்பைய சித்தான்

விண்ணவர்க் கெண்ணல் அரியான்

ஆழ நெடுங்கடல் சேர்ந்தான்

அவனென் னருகலி லானே.

என்னோடு கூடி நின்றான் கண்ணன்

2765. அருகலி லாய பெருஞ்சீர்

அமரர்கள் ஆதி முதல்வன்,

கருகிய நீலநன் மேனி

வண்ணன்செந் தாமரைக் கண்ணன்,

பொருசிறைப் புள்ளுவந் தேறும்

பூமக ளார்தனிக் கேள்வன்,

ஒருகதி யின்சுவை தந்திட்

டொழிவில னென்னோ டுடனே.

என் இடுப்பில் அமர்ந்தான் கண்ணன்

2766. உடனமர் காதல் மகளிர்

திருமகள் மண்மகள் ஆயர்

மடமகள், என்றிவர் மூவர்

ஆளும் உலகமும் மூன்றே,

உடனவை யக்க விழுங்கி

ஆலிலைச் சேர்ந்தவ னெம்மான்,

கடல்மலி மாயப் பெருமான்

கண்ணனென் ஒக்கலை யானே.

என் நெஞ்சில் புகுந்தான் கண்ணன்

2767. ஒக்கலை வைத்து முலைப்பால்

உண்ணென்று தந்திட, வாங்கி,

செக்கஞ் செகவன் றவள்பால்

உயிர்செக வுண்ட பெருமான்,

நக்க பிரானோ டயனும்

இந்திர னும்முத லாக,

ஒக்கவும் தோற்றிய ஈசன்

மாயனென் னெஞ்சினு ளானே.

என் தோள்களில் தங்கினான் கண்ணன்

2768. மாயனென் னெஞ்சி னுள்ளான்

மற்றும் யவர்க்கும் அதுவே,

காயமும் சீவனும் தானே

காலு மெரியும் அவனே,

சேயன் அணியன் யவர்க்கும்

சிந்தைக்கும் கோசர மல்லன்,

தூயன் துயக்கன் மயக்கன்

என்னுடைத் தோளினை யானே.

என் நாவில் வந்து அமர்ந்தான் கண்ணன்

2769. தோளிணை மேலும்நன் மார்பின்

மேலும் சுடர்முடி மேலும்

தாளிணை மேலும் புனைந்த

தண்ணந் துழாயுடை யம்மான்,

கேளிணை யன்றுமி லாதான்

கிளரும் சுடரொளி மூர்த்தி,

நாளணைந் தொன்று மகலான்,

என்னுடை நாவினு ளானே.

என் கண்ணுள் நின்றான் கண்ணன்

2770. நாவினுள் நின்று மலரும்

ஞானக் கலைகளுக் கெல்லாம்,

ஆவியும் ஆக்கையும் தானே

அழிப்போ டளிப்பவன் தானே,

பூவியில் நால்தடந் தோளன்

பொருபடை யாழிசங் கேந்தும்,

காவிநன் மேனிக் கமலக்

கண்ணனென் கண்ணினு ளானே.

என் நெற்றியில் இருந்தான் கண்ணன்

2771. கமலக் கண்ணனென் கண்ணினுள்ளான்

காண்பன் அவன்கண்க ளாலே,

அமலங்க ளாக விழிக்கும்

ஐம்புல னுமவன் மூர்த்தி,

கமலத் தயன்நம்பி தன்னைக்

கண்ணுத லானொடும் தோற்றி,

அமலத் தெய்வத்தோ டுலகம்

ஆக்கியென் நெற்றியு ளானே.

என் உச்சியில் நிலையாக அமர்ந்தான் கண்ணன்

2772. நெற்றியுள் நின்றென்னை யாளும்

நிரைமலர்ப் பாதங்கள் சூடி,

கற்றைத் துழாய்முடிக் கோலக்

கண்ண பிரானைத் தொழுவார்,

ஒற்றைப் பிறையணிந் தானும்

நான்முக னும்இந் திரனும்,

மற்றை யமரரு மெல்லாம்

வந்தென துச்சியு ளானே.

இவற்றைப் பாடினால் கண்ணனடி சேரலாம்

2773. உச்சியுள் ளேநிற்கும் தேவ

தேவற்குக் கண்ண பிராற்கு,

இச்சையுள் செல்ல வுணர்த்தி

வண்குரு கூர்ச்சட கோபன்,

இச்சொன்ன ஆயி ரத்துள்

இவையுமோர் பத்தெம்பி ராற்கு,

நிச்சலும் விண்ணப்பம் செய்ய

நீள்கழல் சென்னி பொருமே.

நேரிசை வெண்பா

இவற்றைப் பாடுக திருமால் திருவடி கிட்டும்

இவையறிந்தோர் தம்மளவி லீசனுவந் தாற்ற

அவயவங்க டோறு மணையும் - சுவையதனைப்

பெற்றார்வத் தால்மாறன் பேசினசொற் பேசமால்,

பொற்றாள்நஞ் சென்னி பொரும்.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is ஓடும்புள்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  பெருமாநீள்படை
Next