மாலை நண்ணி

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

ஒன்பதாம் பத்து

மாலை நண்ணி

பகவானைப் பெறவேண்டும் என்கிற மனோரதம் ஆழ்வாருடைய திருவுள்ளத்தில் இருப்பதைப் பகவான் அறிந்தான், 'ஆழ்வீர் என்னை அடையவில்லையே என்று நீர் ஏன் கவலையுறுகிறீர் உம்மையடையாமல் குறைபடுகிறவன் நானே உமக்காகவே பரமபதத்தை விட்டுத் திருக்கண்ணபுரத்திற்கு வந்து இருக்கிறேன், இந்த சரீரத்தின் முடிவில் உம்முடைய விருப்பத்தை

நிறைவேற்றுவோம்' என்று கூறி ஆறுதலளித்தான், ஆழ்வாரும் ஆறுதலடைந்து அதைச் சொல்லி மகிழ்கிறார்,

திருக்கண்ணப்புரத்தை அடையுமாறு உபதேசித்தல்

கலி விருத்தம்

திருக்கண்ணபுரத்தானைத் தொழுதெழுமின்

3656. மாலைநண் ணித்தொழு தெழுமினோ வினைகெட,

காலைமா லைகம லமலர் இட்டுநீர்,

வேலைமோ தும்மதிள் சூழ்திருக் கணபுரத்து,

ஆலின்மே லால்அமர்ந் தான் அடி யிணைகளே,

தொண்டர்களே திருகண்ணபுரத்தானை மலரிட்டு இறைஞ்சுமின்

3657. கள்ளவி ழும்மலர் இட்டுநீ ரிறைஞ்சுமின்,

நள்ளிசே ரும்வயல் சூழ்கிடங் கின்புடை,

வெள்ளியேய்ந் தமதிள் சூழ்திருக் கணபுரம்

உள்ளி,நா ளும்தொழு தெழுமினோ தொண்டரே

கண்ணனை இறைஞ்சினால் துயர் நீங்கும்

3658. தொண்டர்நுந் தந்துயர் போகநீர் ஏகமாய்,

விண்டுவா டாமலர் இட்டுநீ ரிறைஞ்சுமின்,

வண்டுபா டும்பொழில் சூழ்திருக் கணபுரத்

தண்டவா ணன்,அம ரர்பெரு மானையே.

கண்ணனை இறைஞ்சிச் சரண் புகுக

3659. மானைநோக் கிமடப் பின்னைதன் கேள்வனை,

தேனைவா டாமலர் இட்டுநீர் ரிறைஞ்சுமின்,

வானையுந் தும்மதிள் சூழ்திருக் கணுபுரம்,

தானயந் தபெரு மான்சர ணாகும்.

கண்ணனைச் சரணடைந்தால் வைகுந்தம் கிடைக்கும்

3660. சரணமா கும்தன தாளடைந் தார்க்கெலாம்,

மரணமா னால்வைகுந் தம்கொடுக் கும்பிரான்,

அரணமைந் தமதிள் சூழ்திருக் கணபுரத்

தரணியா ளன்.தன தன்பர்க்கன் பாகுமே.

மெய்யர்க்கு மெய்யன் திருக்கண்ணபுரத்தான்

3661. அன்பனா கும்தன தாளடைந் தார்க்கெலாம்,

செம்பொனா கத்தவு ணனுடல் கீண்டவன்,

நன்பொனேய்ந் தமதிள் சூழ்திருக் கணபுரத்

தன்பன்,நா ளும்தன மெய்யர்க்கு மெய்யனே.

கண்ணபுரத்து ஐயன் பக்தர்கட்கு அருகிருப்பான்

3662. மெய்யனா கும்விரும் பித்தொழு வார்க்கெலாம்,

பொய்யனா கும்புற மேதொழு வார்க்கெலாம்,

செய்யில்வா ளையுக ளும்திருக் கணபுரத்

தையன்,ஆ கத்தணைப் பார்கட் கணியனே.

கணபுரத்தானைப் பணிக. பிணியும் பிறவியும் கெடும்

3663. அணியனா கும்தன தாளடைந் தார்க்கெலாம்,

பிணியும் சாரா பிறவி கெடுத்தாளும்,

மணிபொனேய்ந் தமதிள் சூழ்திருக் கணபுரம்

பணிமின்,நா ளும்பர மேட்டிதன் பாதமே.

திருக்கண்ணபுரத்தானை அடைந்தால் துன்பம் இல்லை

3664. பாதநா ளும்பணி யத்தணி யும்பிணி,

ஏதம்சா ராஎனக் கேலினி யென்குறை?,

வேதநா வர்விரும் பும்திருக் கணபுரத்

தாதியா னை,அடைந் தார்க்கல்லல் இல்லையே.

திருக்கணபுரம் என்றால் துயர் ஒழியும்

3665. இல்லையல் லலெனக் கேலினி யென்குறை?,

அல்லிமா தர்அம ரும்திரு மார்பினன்,

கல்லிலேய்ந் தமதிள் சூழ்திருக் கணபுரம்

சொல்ல.நா ளும்துயர் பாடுசா ராவே.

இவற்றைப் பாடிப் பணிக பற்று நீங்கும்

3666. பாடுசா ராவினை பற்றற வேண்டுவீர்,

மாடநீ டுகுரு கூர்ச்சட கோபன்சொல்,

பாடலா னதமிழ் ஆயிரத்து ளிப்பத்தும்

பாடியா டிப்,பணி மினவன் தாள்களே.

நேரிசை வெண்பா

மாறன் திருவடிகளையே சேர்வேன்

'மாலுமது வாஞ்சைமுற்றும் மன்னுமுடம் பின்முடிவில்

சாலநண்ணிச் செய்வன்' எனத் தானுகந்து-'மேலவனைச்

சீரார் கணபுரத்தே சேரும்'எனுஞ் சீர்மாறன்,

தாரானோ நந்தமக்குத் தாள்?

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is மல்லிகை கமழ்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  தாள தாமரை
Next