ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
திருவாய்மொழி
பத்தாம் பத்து
தாள தாமரை
தம் வாழ்நாளின் முடிவு நெருங்கிவிட்டது என்று தாமே முடிவு செய்துகொண்ட ஆழ்வார். திருநாட்டுப் பயணத்திற்குத் தயாராக இருக்கவேண்டும் என்று தீர்மானித்து, முந்துற முன்னம் திருமோகூர்க் காளமேகப் பெருமாளை வழித்துணையாகப் பற்றுகிறார்,
பரமபதம் அடையக் கருதிய ஆழ்வார் திருமோகூர் பெருமானைச் சரனடைதல்
கலி நிலைத்துறை
காளமேகமே கதி
3667. தாள தாமரைத் தடமணி
வயற்றிரு மோகூர்,
நாளும் மேவிநன் கமர்ந்துநின்
றசுரரைத் தகர்க்கும்,
தோளும் நான்குடைச் சுரிகுழல்
கமலக்கண் கனிவாய்,
காள மேகத்தை யன்றிமற்
றொன்றிலம் கதியே.
காளமேகத்தின் திருவடிகளே துணை
3668. இலங்கதி மற்றொன் றெம்மைக்கும்
ஈன்தண் டுழாயின்,
அலங்கலங் கண்ணி ஆயிரம்
பேருடை அம்மான்,
நலங்கொள் நான்மறை வாணர்கள்
வாழ்திரு மோகூர்,
நலங்க ழலவன் அடிநிழல்
தடமின்றி யாமே.
துன்பம் நீங்க மோகூர் அடைவோம்
3669. 'அன்றி யாமொரு புகலிடம்
இலம்' என்றென் றலற்றி,
நின்று நான்முகன் அரனொடு
தேவர்கள் நாட,
வென்றிம் மூவுல களித்துழல்
வான்திரு மோகூர்,
நன்று நாமினி நணுகுதும்
நமதிடர் கெடவே.
தொண்டர்காள்!மோகூரான் திருவடி துதிப்போம்
3670. இடர்கெட எம்மைப் போந்தளி
யாய்'என்றென் றேத்தி,
சுடர்கொள் சோதியைத் தேவரும்
முனிவரும் தொடர,
படர்கொள் பாம்பணைப் பள்ளிகொள்
வான்திரு மோகூர்,
இடர்கெ டவடி பரவுதும்
தொண்டீர்!வம்மினே,
மோகூர்க் கோயிலை வலம் செய்து கூத்தாடுவோம்
3671. தொண்டீர்!வம்மின்நம் சுடரொளி
யருதனி முதல்வன்,
அண்ட மூவுல களந்தவன்
அணிதிரு மோகூர்,
எண்டி சையும்ஈன் கரும்பொடு
பெருஞ்செந்நெல் விளைய,
கொண்ட கோயிலை வலஞ்செய்திங்
காடுதும் கூத்தே.
திருமோகூரானின் திருவடிகளே காவல்
3672. கூத்தன் கோவலன் குதற்றுவல்
லசுரர்கள் கூற்றம்,
ஏத்தும் நங்கட்கும் அமரர்க்கும்
முனிவர்க்கும் இன்பன்,
வாய்த்த தண்பணை வளவயல்
சூழ்திரு மோகூர்
ஆத்தன், தாமரை யடியன்றி
மற்றிலம் அரணே
3673. மற்றி லம்அரண் வான்பெரும்
பாழ்தனி முதலா,
சுற்று நீர்படைத் ததன் வழித்
தொன்முனி முதலா,
முற்றும் தேவரோ டுலகுசெய்
வான்திரு மோகூர்,
சுற்றி நாம்வலஞ் செய்யநம்
துயர்கெடும் கடிதே.
மோகூர்ப் பெருமானைத் தொழுமின்
3674. துயர்கெ டும்கடி தடைந்துவந்
தடியவர் தொழுமின்,
உயர்கொள் கோலையண் தடமணி
யளிதிரு மோகூர்,
பெயர்கள் ஆயிர முடையவல்
லரக்கர்புக் கழுந்த,
தயர தன்பெற்ற மரதக
மணித்தடத் தினையே.
மோகூரை நெருங்கிவிட்டோம் பாதுகாவல் கிடைத்துவிட்டது
3675. மணித்த டத்தடி மலர்க்கண்கள்
பவளச் செவ்வாய்,
அணிககொள் நால்தடந் தோள்தெய்வம்
அசுரரை யென்றும்,
துணிக்கும் வல்லரட் டனுறை
பொழில்திரு மோகூர்,
நணித்து நம்முடை நல்லரண்
நாமடைந் தனமே.
பக்தர்களே மோகூரானையே துதியுங்கள்
3676. 'நாம டைந்தநல் லரண்நமக்
ª 'கன்றுநல் லமரர்,
தீமை செய்யும்வல் லசுரரை
யஞ்சிச்சென் றடைந்தால்,
காம ரூபங்கொண் டெழுந்தளிப்
பான்திரு மோகூர்,
நாம மேநவின் றெண்ணுமின்
ஏத்துமின் நமர்காள்!
இவற்றைப் பாடுக துன்பம் நீங்கும்
3677. 'ஏத்து மின்நமர் காள்!' என்று
தான்குட மாடு
கூத்த னை,குரு கூர்ச்சட
கோபன்குற் றேவல்
வாய்த்த ஆயிரத் துள்ளிவை
வண்திரு மோகூர்க்கு,
ஈத்த பத்திவை யேத்தவல்
லார்க்கிடர் கெடுமே.
நேரிசை வெண்பா
மாறன் திருநாமம் கூறினால் துன்பம் ஒழியும்
தாளடைந்தோர் தங்கட்குத் தானே வழித்துணையாம்,
காளமே கத்தைக் கதியாக்கி,-மீளுதலாம்
ஏதமிலா விண்ணுலகி லேகவெண்ணும் மாறனென,
கேதமுள்ள தெல்லாம் கெடும்.