புராண லக்ஷ்யத்துக்கு நடைமுறை வழி : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

புராண புருஷர்கள்தான் நமக்கு ideal (ஆதரிசமானவர்கள், வழிகாட்டிகள்) என்று தெரிகிறது. அவர்களுடைய கதைகளைப் படித்தால் அவர்களுடையது மாதிரியான உயர்ந்த குணங்களைப் பெற வேண்டுமென்ற ஆசை உண்டாகிறது. ஆனாலும் ஆசை உண்டாகிறதே தவிர, அந்த உத்தம குணங்களை சம்பாதித்துக் கொண்டு எந்த சந்தர்ப்பத்திலும் அவற்றிலிருந்து நழுவாமல் இருப்பதென்றால், இது அஸாத்தியமானதாக இருக்கிறது.

காரியம் ஏதாவது பண்ணிக்கொண்டேயிருப்பதுதான் மநுஷ்யனின் இயற்கையாக இருக்கிறது. க்ஷண காலம்கூட மனஸை நிறுத்திவிட்டு இருக்க முடியமாட்டேன் என்கிறது. பகவானும் கீதையில், “மநுஷ்யனானவன் ஒரு நொடியும் சும்மா இல்லாமல் காரியம் பண்ணிக் கொண்டேயிருக்கும் படியாகத்தான் பிரகிருதி (இயற்கை) அவனை ஏவிக்கொண்டிருக்கிறது. அதனால் அவன் இந்தக் காரியங்களைப் பண்ணுகிற சரியான வழியைத் தெரிந்துகொண்டு அப்படியே பண்ணி அதனால்தான் சித்தத்தை சுத்தி செய்து கொண்டு உத்தம குணங்களை ஸம்பாதித்துக் கொண்டு, அப்புறம் காரியங்களை விட்டு, குணங்களைக்கடந்து குணாதீதனாக, ஞானியாக, பிரம்மவித்தாக ஆக வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார்.

நம் மதத்தின்படி நடந்து கொண்டு, பாபங்களைப் போக்கிக் கொண்டு ஆத்மாவை சுத்தப்படுத்திக் கொண்டு சாச்வத ஸெளக்கியமான மோட்சத்தை அடைய வேண்டுமானால் நாம் என்னென்ன காரியங்கள் பண்ண வேண்டும்? பாபம் பண்ணியதால்தானே இந்த ஜன்மா வருகிறது? அதை அலம்பிக்கொள்ள வேண்டும். புதிதாகப் பாபம் பண்ணாமலிருக்கவேண்டும். நம் மனஸை, குணத்தைப் பாபத்தில் போகாதபடி உசத்திக் கொள்ள வேண்டும். இதற்குத்தான் மதம் இருக்கிறது. இப்படி நம் மதப்படி நாம் செய்ய வேண்டியதெல்லாம் என்னென்ன? இது நமக்குத் தெரியவில்லை.

பொதுவாக நாம் இப்போதிருக்கிற நிலைமையில் ஏதோ ராமாயணம், பாகவதம், புராணம் கொஞ்சம் தெரிகிறது. இதில் கதாபாத்திரங்கள் இன்னின்ன மத அநுஷ்டானங்களைச் செய்ததாக அங்கங்கே வருகிறது. ஆனால் அங்கங்கே வருகிறதே யொழிய‌, ஒரே இடத்தில் ஒரே சீராகக் கர்மாக்களை அமைத்துக் கொடுக்கவில்லை (codify பண்ணவில்லை). ஒவ்வொரு அநுஷ்டானத்தையும் எப்படிப் பண்ணுவது என்று procedure -ம் [செய்முறையும்] இந்தப் புராண இதிஹாஸங்களில் சொல்லப்படவில்லை. அதனால் நமக்கு அதைப் பார்த்து அதன்படிப் பண்ணுவது என்பது சரியாக வரவில்லை.

புராண இதிஹாஸங்கள் பக்தியைப் பிரதானமாகச் சொல்கின்றன. ஆனால் நாம் தினமும் அறுபது நாழியும் பக்தி பண்ணிக்கொண்டு, பூஜையும் தியானமும் பண்ணிக்கொண்டு, ஸ்தோத்திரம் சொல்லிக் கொண்டு இருக்க முடியுமா? முடியாதே! குடும்பத்துக்காக நாம் அநேக காரியங்கள் செய்ய வேண்டும். குளிப்பது, சாப்பிடுவது போன்றதைச் செய்யவேண்டும். இது போகவும் மிச்ச நாழி முழுதும் பூஜையிலேயே இருப்பது என்றால் முடியாது. அலுப்புத் தட்டிப் போகும். வேறு ஸத்கர்மாக்கள் நமக்கு வேண்டும். அவற்றை எங்கேயிருந்து தெரிந்து கொள்வது?

தர்ம சாஸ்திரங்களிலிருந்துதான்.

பதினாலு வித்யைகளில் புராணத்துக்கப்புறம் கடைசியாக வருவது இந்த தர்ம சாஸ்திரமே.

புராண புருஷர்கள் நமக்கு லக்ஷ்யத்தைக் காட்டுகிறார்கள். அந்த லக்ஷ்யத்தை அடைவதற்கு வழி என்ன என்றால் கர்மாநுஷ்டானத்தில் தான் ஆரம்பிக்க வேண்டும். இப்படி நாம் நடைமுறையில், practical -ஆகச் செய்ய வேண்டியதையெல்லாம் சொல்வது தர்ம சாஸ்திரம். நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்று வேதத்தில் அங்கங்கே உதிரியாகச் சொல்லியிருக்கிறவற்றையெல்லாம் நன்றாக வகைப் படுத்தி விவரமாகச் சொல்கிற வேத உபாங்கம் இது.

குடும்பக் காரியம், சொந்தக் காரியம், குளிப்பது, சாப்பிடுவது முதற்கொண்டு எல்லாவற்றையும் ஒரு நிர்ணயப்படி, நியதிப்படி செய்யவேண்டும். வேத தர்மத்தில் மநுஷ்ய வாழ்வின் ஸகல அம்சங்களையும் ஆத்மாபிவிருத்திக்கு அநுகூலமாக ஆக்கி விதிகள் போட்டிருக்கிறது. இப்படிப் படுத்துக் கொண்டால் சிரேயஸ், இப்படி ட்ரெஸ் பண்ணிக்கொண்டால் அது ஆத்மாவுக்கு நல்லது, இப்படி வீடு கட்டினால்தான் அநுஷ்டானத்துக்கு ஸாதகமாக இருக்கும் என்பதாக வாழ்க்கையில் எல்லா விஷயங்களையும் மதத்தோடு அது சம்பந்தப்படுத்தி விடுகிறது. லௌகிக வாழ்க்கை (secular life), மத வாழ்க்கை (religious life) என்று அது இரண்டாகப் பிரிக்கவில்லை. லௌகிகம் கூட மதத்தில் கொண்டு சேர்க்கும்படியாகவே வேத தர்மம் அமைந்திருக்கிறது. எந்தக் கர்மாவைப் பண்ணினாலும் அதை மந்திர பூர்வமாகச் செய்யும்படிப் பண்ணி ஆத்மாபிவிருத்திக்கு அங்கமாக ஆக்கிவிடுகிறது. லௌகிகத்தையும் ஆத்மிகத்தையும் சேர்த்துக் கொடுப்பது போலவே, தனி மநுஷ்யன் தன் சிரேயஸுக்காக ( individual salvation)காகப் பண்ண வேண்டியதிலேயே ஸமூக வாழ்க்கையின் ஒழுங்கும், லோக க்ஷேமமும் (general welfare -ம்) சேரும்படியாக இணைத்துக் கொடுத்திருக்கிறது.

இப்போது நாம் தெரிந்து கொண்டிருக்கிற புராணங்களிலுள்ள பக்தி வேதத்திலே இருக்கிறது. ஆனால் அதோடுகூட ஏகப்பட்ட கர்மாவும் இருக்கிறது. பக்தியையே பூஜை என்ற கர்மாவாகப் பண்ணும்போது அதற்கும் நிறைய விதிகள் இருக்கின்றன. பூஜையோடு கூட அநேக யாகங்கள், சிராத்தம், தர்ப்பணம் எல்லாம் வேத தர்மத்துக்கு வெகு முக்யமாக இருக்கின்றன.

வேதத்தில் இத்தனையும் இருக்கின்றன. ஆனால் ஒரே இடத்தில் எல்லாவற்றையும் முறைப்படுத்தி (Codify -பண்ணி) கொடுத்திருக்கவில்லை. ஒவ்வொரு கர்மாவுக்கும் procedure விரித்துச் சொல்லி இருக்கவில்லை.

“வேதோ (அ) கிலோ தர்ம மூலம்” என்று மநு சொல்கிறபடி வேதந்தான் நாம் என்னென்ன செய்யவேண்டும் என்ற நெறிகளுக்கும் காரியங்களுக்கும் மூலமாக, வேராக, ஊற்றாக இருக்கிறது.

ஆத்ம க்ஷேமத்துக்காக நாம் என்ன செய்ய வேண்டுமோ அதிலேயே லோக க்ஷேமத்தையும் பயனாக ஏற்படுத்தித் தருவது வேதம். இந்த இரண்டும் ஏற்பட எது உதவுகிறதோ அதுதான் ‘தர்மம்’ என்பது. அந்த தர்ம மூலமாக வேதம் இருப்பது வாஸ்தவம்தான். வேதோ (அ)கிலோ தர்ம மூலம்.

ஆனால் வேதங்களைப் பார்த்தால் ஒரு கிரமமாக, திட்டவட்டமாக நாம் செய்ய வேண்டியவற்றுக்கு ‘லிஸ்ட்’ இல்லையே! இப்படி இப்படி செய்ய வேண்டுமென்ற விரிவான விளக்கமும் இல்லையே! அனந்தமான வேதத்தில் நமக்குக் கிடைத்திருப்பதே கொஞ்சந்தான். நமக்குக் கிடைத்திருக்கிற வேத வாக்கியங்களைப் பார்த்தாலும் அவற்றில் அநேகத்துக்கு அர்த்தங்கூட முழுக்கத் தெரிய மாட்டேன் என்கிறதே!

இப்படி இருக்கிற வேதங்களிலிருந்துதான் கல்பம் என்கிற ஆறாவது வேதாங்கத்தில் உள்ள தர்ம ஸூத்ரங்களும் க்ருஹ்ய ஸூத்ரங்களும் ச்ரெளத ஸூத்ரங்களும் ஒருத்தன் பண்ண வேண்டிய கர்மாக்களைத் திரட்டி ஒழுங்குபடுத்திக் கொடுத்திருக்கின்றன. ஆனால் இதுவும் சுருக்கமாகத்தான் இருக்கும். எல்லா அம்சங்களையும் ஒரே இடத்தில் சொல்வதாகவும் இராது. இவையும் விரிவான- guide ஆக இல்லை. இவற்றை சந்தேகத்துக்கு இடமில்லாமல் விரித்துச் சொல்கிறவைதான் தர்ம சாஸ்திரங்கள்.

தர்ம ஸூத்ர‌ங்கள் (ஆபஸ்தம்பர், கௌதமர் முதலானவர்கள் செய்தவை) சின்னச் சின்ன வாசகங்களாக ஸூத்ர‌ லக்ஷணப்படி இருக்கும். ஸூத்ர‌ம் என்றால் ரத்னச் சுருக்கமாகத்தான் இருக்க வேண்டும். தர்ம சாஸ்திரங்கள் என்கிற ஸ்மிருதிகள் (மநு, யாக்ஞவல்கியர், பராசரர் முதலானவர்கள் செய்தவை) ச்லோக ரூபத்தில் விரிவாக இருக்கும்.

ஆனால் எல்லாவற்றிற்கும் பொதுவான ஆதாரம் வேதந்தான். நாம் என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்பதற்கு வேதத்தின் ஆக்ஞைகளைத்தான் மேற்கொண்டு, அதன்படி நடக்க வேண்டும். வேதக் கட்டளைகளை ஓர‌ள‌வுக்கு முறைப்படுத்திச் சொல்கிற கல்பத்தை நன்றாக அலசி விஸ்தாரம் பண்ணுவதே தர்ம சாஸ்திரம். யக்ஞ பூமி நிர்மாணம், க்ருஹ நிர்மாணம் போன்றவற்றையே கல்பம் அதிகம் சொல்கிறதென்றால் மநுஷ்யனுக்கு ஸகல விதத்திலுமான நடத்தைமுறையையும் (code of conduct) விவரமாகச் சொல்வது தர்ம சாஸ்திரம்.

“நான் இந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் இந்தக் காரியத்தைச் செய்வது சரியா, தப்பா என்று வேதத்தில் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லையே! ‘அநந்தா வை வேதா:’ என்றபடி வேதம் அளவு கடந்ததாக அல்லவா இருக்கிறது? இவற்றில் பெரும்பாலானவை இப்போது மறைந்தே போய் விட்டன. அதனால் எங்கே இந்தக் காரியத்தை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லையே! இவை எல்லாவற்றையும் படித்தவர்கள் யாரும் இருப்பதாகவும் தெரியவில்லையே? என்ன செய்வது?” என்று கேள்வி.

ஸமுத்திரம் மாதிரி விரிந்து கிடக்கிற வேதங்களிலிருந்து நமக்கு வேண்டிய காரியங்களைப் பொறுக்கி எடுப்பது அஸாத்யம்தான்.

“இப்படி செய் என்று வேதத்தில் இதைப்பற்றிச் சொல்லியிருப்பது தெரிந்தால் வேத வாக்கியப்படியே செய்து விடுவேன். அது தெரியாதபோது என்ன செய்வது?”

இதற்கு மநு பதில் சொல்கிறார்: “சரி, அப்படியானால் ஒன்று சொல்கிறேன். அந்த வேதங்களை எல்லாம் நன்கு அறிந்திருந்த மஹரிஷிகள் ஸ்ம்ருதிகள் என்று செய்திருக்கிறார்கள். அதில் என்ன சொல்லியிருக்கிறது என்று பார்” என்கிறார். ஸ்ம்ருதி என்பதே தர்ம சாஸ்திரம்.

வேதோகிலோ தர்மமூலம்| தத்விதாம் ச ஸ்ம்ருதிசீலே|

“ஸ்ம்ருதி” என்றால் நினைவுக் குறிப்பு; விஸ்ம்ருதி என்றால் பைத்தியம். “வேதத்துக்கு ஸ்ம்ருதி இருக்கிறதே! அதாவது, நினைவுக் குறிப்பு (notes) இருக்கிறதே! வேதங்களையெல்லாம் நன்றாக உணர்ந்த மஹரிஷிகள் அவற்றிலுள்ள தர்மங்களையும், கர்மங்களையும் ஒரே இடத்தில் தொகுத்து முறைப்படுத்திக் குறிப்பாக எழுதி வைத்தவையே இவை. இந்த ஸ்மிருதிகளில் நமக்கு நன்றாக அர்த்தம் புரிகிற பாஷைகளில் எழுதப்பட்டவை. அவற்றைப் பார். நீ என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது, எப்படிச் செய்ய வேண்டும் என்பவையெல்லாம் அவற்றில் ஸவிஸ்தாரமாகச் சொல்லியிருக்கிறது” என்கிறார் மநு. “தர்ம சாஸ்திரம்” என்று சொல்வது இந்த ஸ்ம்ருதிகளைத்தான்.

வேதம் சொல்லும் காரியங்களை, அநுஷ்டானங்களை எப்படிப் பண்ண வேண்டும் என்று வேதாங்கங்களில் ஆறாவதாக உள்ள ‘கல்பம்’ சொல்கிறது. கல்பத்தில் அடங்கும் க்ருஹ்ய ஸூத்ர‌ங்களும், ச்ரௌத ஸூத்ர‌ங்களும், தர்ம ஸூத்ர‌ங்களும் வேள்வி முதலானவற்றின் செய்முறையைச் சொல்கின்றன. இதையே ஒரு ஜீவன் கருவாக மாதாவின் கர்ப்பத்தில் உருவாவதிலிருந்து, அது பிறந்து வளர்ந்து, கலியாணம் பண்ணிக்கொண்டு, குடும்பம் நடத்தி, கடைசியில் சிதையில் வைத்து தகனம் செய்யப்படும் வரையில் இப்படியிப்படிச் செய்ய வேண்டும் என்று அடியிலிருந்து நுனி வரையில் நுணுக்கமாகச் சொல்பவையே ஸ்ம்ருதிகள். தினந்தினமும் எழுந்திருந்ததிலிருந்து தூங்குகிற வரையில் ஒருத்தன் என்னென்ன செய்ய வேண்டும், எப்படி யெப்படிச் செய்ய வேண்டும் என்று அது routine போட்டுக் கொடுத்து விடுகிறது.

ஸ்மிருதியைப் பார்த்து விட்டால் போதும். நம் மதப்படி நாம் செய்ய வேண்டியதெல்லாம் என்ன என்பது பூர்ணமாகத் தெரிந்துவிடும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is காத்துத்தருவது நம் கடமை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  ஸ்மிருதிகளும், துணை நூல்களும்
Next