ஸ்மிருதிகளும், துணை நூல்களும் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

மநு, பராசரர், யாக்ஞவல்கியர், கௌதமர், ஹாரீதர், யமன், விஷ்ணு, சங்கர், லிகிதர், பிருஹஸ்பதி, தக்ஷன், அங்கிரஸ், பிரசேதர், ஸம்வர்த்தர், அசனஸ், அத்ரி, ஆபஸ்தம்பர், சாதாதபர் என்றிப்படிப் பதினெட்டு மஹரிஷிகள் தங்களுடைய அதிமாநுஷ்ய சக்தியால் வேதங்களை முழுக்கத் தெரிந்து கொண்டு அதிலிருந்து தொகுத்து தர்ம சாஸ்திரங்களைத் தந்திருக்கிறார்கள். இவை மநு ஸ்மிருதி, பராசர ஸ்மிருதி, யாக்ஞவல்கிய ஸ்மிருதி என்று அவரவர் பெயரால் வழங்குகின்றன. இவற்றைப் பார்த்தால் போதும், வாழ்க்கையில் செய்யவேண்டிய ஸகல அநுஷ்டானங்களையும் தர்மங்களையும் தெரிந்து கொண்டு விடலாம்.

18 ஸ்மிருதிகளைத் தவிர, உப ஸ்மிருதிகள் என்று 18 துணை நூல்கள் இருக்கின்றன*.

ஸ்ரீமத் பகவத் கீதையையும் ஸ்மிருதிகளோடு சேர்த்துச் சொல்கிற வழக்கம் உண்டு. நேராக வேத மந்திரங்களாக உள்ள ‘ச்ருதி’யாக இல்லாமலும் நம் மதத்துக்கு ஆதாரமாயிருப்பதால் அதை ‘ஸ்மிருதி’ப் பிரமாணமாகச் சொல்கிறார்கள்.

இப்படி அநேகம் ஸ்மிருதிகள் இருப்பதால் இவற்றிலும் ஒன்றிலிருப்பது இன்னொன்றில் இல்லாமல் இருக்கலாம். சில சில காரியங்கள் ஒன்றுக்கொன்று வித்யாஸப்படலாம். அதனால் என்னென்ன செய்ய வேண்டும் என்பதில் இன்னமும் கொஞ்சம் ஸந்தேஹம் ஏற்படுகிறது. இந்த ஸந்தேகத்தையும் போக்குவதாக ‘தர்ம சாஸ்திர நிபந்தன’ங்கள் என்று சில புஸ்தகங்கள் இருக்கின்றன.

சில ஸ்மிருதிகள் ஒரு சில விஷயங்களோடு நின்று விடுகிறது; பூர்ண உபதேசம் செய்யவில்லை. வழக்கத்தில் தலைமுறை தலைமுறையாக வந்துவிட்ட விஷயங்கள் எல்லோருக்கும் தெரிந்தேயிருக்கும் என்று நினைத்துவிட்ட மாதிரி, சில ஸ்மிருதிகளில் ஸந்தியாவந்தனப் பிரயோகமே இல்லை; சிலவற்றில் சிராத்த விஷயமில்லை; தீட்டு-துடக்கு ஸமாசாரங்களைச் சொல்லும் ஆசௌசாதிகள் சிலதில் இல்லை. “இப்படி மூச்சுவிடு! இப்படிச் சாப்பிடு” என்று புஸ்தகத்தில் எழுதி வைத்தா சொல்லிக் கொடுக்க வேண்டும்? அந்த மாதிரிதான் இவையும் என்று அந்த ஸ்மிருதி கர்த்தாக்கள் நினைத்திருப்பார்களோ என்னவோ?

இம்மாதிரி எந்த விஷயத்தையுமே ‘தன்னால் தெரிந்திருக்கும்’ என்று நினைத்து விட்டுவிடாமல், ஸகலத்தையும் எழுதி வைத்திருப்பது நிபந்தன கிரந்தங்களில்தான். ஸ்மிருதிகளில் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பவைகளையும் இவையே வியவஸ்தை செய்து, இதிது இப்படியிப்படித்தான் என்று நிர்ணயம் செய்கின்றன. சில பெரியவர்கள் எல்லா ஸ்மிருதிகளையும் பார்த்து, ஒன்றோடொன்று பொருத்தி ஆராய்ச்சி செய்து, முடிவாக இன்னின்ன செய்யவேண்டும் என்று தீர்மானித்து, ஐயம் திரிபற இந்த நிபந்தனங்களை எழுதி வைத்திருக்கிறார்கள்.

இப்படி நம் தேசத்தில் ஒவ்வொரு பிரதேசத்தில் ஒவ்வொரு நிபந்தன கிரந்தத்தை அநுஸரிக்கிறார்கள். வடக்கே இருப்பவர்கள் காசிநாத உபாத்யாயர் எழுதிய நிபந்தனத்தைப் பின்பற்றுகிறார்கள். மேற்கே மஹாராஷ்டிரத்தில் ‘மிதாக்ஷரி’ என்ற நிபந்தனம் அநுஸரிக்கப்படுகிறது. அதற்குச் சட்டத்துக்கு ஸமதையான ஸ்தானம் இருப்பதாகக் கோர்ட்டுகளே அங்கீகரித்திருக்கின்றன. கமலாகர பட்டர் எழுதிய ‘நிர்ணய ஸிந்து’ என்ற நிபந்தனமும் அங்கு வழங்குகிறது. மஹாராஷ்ட்ரத்திலுள்ள பைதானில் மந்த்ரியாக இருந்த ஹேமாத்ரி என்பவர் எல்லா தர்ம சாஸ்திரங்களையும் சேர்த்து ஒரு பெரிய ‘டைஜஸ்’டாக ‘சதுர்வர்க்க சிந்தாமணி’ என்று எழுதியிருக்கிறார். இங்கே தக்ஷிணத்தில் நாம் வைத்யநாத தீக்ஷிதர் எழுதிய “வைத்யநாத தீக்ஷிதீயம்” என்ற புஸ்தகத்தைப் பின்பற்றிச் செய்கிறோம். கிருஹஸ்தர்களுக்கு இவை முக்யமாக இருக்கின்றன. ஸந்நியாஸிகள் தாங்கள் செய்ய வேண்டியது என்ன, செய்யக்கூடாதது என்ன என்பதை ‘விச்வேச்வர ஸம்ஹிதை’ என்ற நூலைப் பார்த்து தெரிந்து கொள்கிறார்கள்.


* உப ஸ்மிருதிகளைச் செய்த பதினெண்மர்: ஜாபாலி, நாசிகேதஸ், ஸ்கந்தர், லெளகாக்ஷி, காச்யபர், வியாசர், ஸநத்குமாரர், சந்தனு, ஜனகர், வியாக்ரர், காத்யாயனர், ஜாதூகர்ண்யர், கபிஞ்ஜலர், போதாயனர், காணாதர், விச்வாமித்ரர், பைடீனஸர், கோபிலர்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is புராண லக்ஷியத்துக்கு நடைமுறை வழி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  வைத்யநாத தீக்ஷிதீயம்
Next