மூன்று விதமான லோகங்கள் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

தேவலோகம், மநுஷ்ய லோகம் என்ற இரண்டோடு நரக லோகம் என்று ஒன்றைச் சொல்கிறோம். வஸிக்குமளவும் இன்பமே உள்ளது தேவலோகம்; இன்பமும் துன்பமும் கலந்திருப்பது மநுஷ்ய லோகம். துன்பம் மட்டுமே உள்ள லோகமும் இருந்தாக வேண்டும் அல்லவா? அதுவே நரகம். மஹா பாபம் பண்ணினவன் அடுத்த ஜன்மா நீசமாக எடுப்பதற்கு முன்பு, தன் பாபகர்மாவுக்கு அதிகப்படி தண்டனையாக இந்த நரகத்துக்குப் போகிறான் என்று சாஸ்திரம் சொல்கிறது. அங்கே ரொம்பவும் கஷ்டப்பட்டு அநுபவித்து, அதிகப்படி பாவத்தைக் கழித்தபின் மறுபடி பூலோகத்துக்கு வருகிறான்; மறு ஜன்மா எடுக்கிறான்.

ஸுகதுக்கங்கள் சீதோஷ்ணத்தைப் போல இருக்கின்றன. லோகங்களெல்லாம் தெர்மாமீட்டர் போல இருக்கின்றன. அந்தத் தெர்மாமீட்டரில் கொதிக்கும் இடம் (boiling point) தான் நரக லோகம். ஜில்லென்று உறையும் இடம் (freezing point) ஸ்வர்க்க லோகம். நடுவில் டிகிரிகள் இருக்குமிடம் பூலோகம். இந்த நடு பாகத்திலே உறைகிற டிகிரிக்குக் கிட்டேயிருந்து ஆவியாய்ப் போகிற டிகிரிக்குக் கிட்டே வரை பல டிகிரிகள் இருக்கின்றன. கொதிக்கும் இடத்தில் (boiling point) குளிர்ச்சி இல்லை. உறையும் இடத்தில் (freezing point) உஷ்ணமே இல்லை. இந்த இரண்டுக்கும் நடுவில் பல விதமான டிகிரிகளும் இருக்கின்றன. இந்த மூன்றையும் மூன்று லோகங்களுக்கு உபமானமாகச் சொல்லலாம். மேல் லோகம் ஒரு வகை. அவை இந்திரனிருக்கிற தேவ லோகம், பிரம்மாவின் ஸத்யலோகம், விஷ்ணுவின் வைகுண்டம், பரமேச்வரனின் கைலாஸம் முதலியவைகள். உபநிஷத் இவைகளை ஒன்றாகச் சொல்லும்; பிரம்மலோகம் என்றே சொல்லும். புராணங்கள் பிரித்துச் சொல்லும். கீழே இருப்பது நரகலோகம். மத்தியில் இருப்பது ஸுகம், துக்கம் இரண்டும் கலந்தாங்கட்டியான மிச்ரலோகம் எனப்பட்ட நம்முடைய மண்ணுலகம். இங்கே ஸுகதுக்கங்கள் பலவிதமான விகிதத்தில் கலந்திருக்கின்றன. ஜாஸ்தி ஸுகம்-ஸ்வல்ப துக்கத்திலிருந்து ஜாஸ்தி துக்க‌ம்-ஸ்வல்ப ஸுகம் வரை பல தினுஸான விகிதங்கள்; பல டிகிரிகளைப் போல!

ஆனாலும் நம்முடைய சாஸ்திரப்படி மற்ற லோகங்களைவிட இந்த பூலோகந்தான் உயர்ந்தது! ஏன்? இதிலிருந்து எந்த லோகத்துக்கு வேண்டுமானாலும் போகலாம். மற்ற லோகங்களுக்குப் போனால் இஷ்டப்படி அவ்விடத்தை விட்டுப்போக முடியாது. நரகத்தின் கஷ்டம் தாங்காமல் ஓடி வந்துவிடலாமா என்றால் முடியாது. பாப கர்மா தீருகிற வரை அங்கே இருந்துதான் தீரவேண்டும். தர்மராஜா இவ்வளவு காலம் இருக்கவேண்டுமென்று எழுதி வைத்திருப்பான். அங்கெல்லாம் நாமாக ஒன்றும் செய்ய முடியாது. “ஸ்வர்க்கம் நன்றாயிருக்கிறதே, இன்னம் கொஞ்சம் காலம் அங்கேயே இருக்கலாமே” என்று ஆசைப்பட்டாலும், புண்ய கர்மா தீர்ந்தபின் அங்கே நீடிக்க முடியாது. ‘தொபுகடீர்’ என்று பூலோகத்தில் வந்து விழவேண்டியதுதான். பூமியில் மட்டுமே நமக்கு தனி ஸ்வாதந்திரியம் கொஞ்சம் இருக்கிறது. புண்ணியம் பண்ணலாம். பாபமும் பண்ணலாம். கையினால் பூஜையும் பண்ணலாம், அடிக்கவும் செய்யலாம். நாக்கினால் நாம ஸங்கீர்த்தனம் பண்ணலாம், அல்லது யாரையாவது வையலாம். இரண்டுக்கும் நமக்குச் சக்தி இருக்கிறது. இப்படி ஒவ்வொரு இந்திரியத்துக்கும் இரண்டுவித சக்தியை பகவான் கொடுத்திருக்கிறார்.

இந்த ஸ்வாதந்திரியம் மற்ற லோகங்களில்லை. அவைகளெல்லாம் போக பூமிகள். மாடாகப் பிறந்தால் புண்ணியம் பண்ணமுடியுமா? தேவர்களும் அந்த மாட்டைப் போன்றவர்கள்தான்! மாட்டுக்குப் பாபமும் இல்லை; புண்ணியமும் இல்லை. இந்த பூலோகத்தில் மநுஷ்யராகப் பிறந்த நாம் மட்டுமே கர்மாநுஷ்டானம் பண்ணி நல்ல கதியடையலாம். தேவ லோகத்தில் அது முடியாது. கிருஷி [உழவு] பண்ணுகிற பண்ணை ஸ்தானம் நம் உலகம்தான். பாக்கியெல்லாம் இங்கே நாம் உற்பத்தி பண்ணுவதன் பலனை சாப்பிடுகிற ஹோட்டல் ஸ்தானம்! உற்பத்தி ஸ்தானம் அல்ல! அங்கே பலன்களை அநுபவிக்கலாம். எவ்வளவு புண்ணிய பாபம் பண்ணியிருக்கின்றோமோ அவ்வளவு பலன்களை அநுபவிக்கலாம். அதனால் அவைகளுக்கு போக பூமியென்ற பெயர் ஏற்பட்டது. நம் லோகமே கர்ம பூமி. பண்ணுகிற சக்தி இங்கேதான் உண்டு. இங்கும் சுதந்திர மனஸால் யோசித்துப் பண்ணுவது மநுஷ்ய ஜன்மத்திற்குத்தான் உண்டு. மற்றவைகளெல்லாம் ‘இன்ஸ்டிங்க்ட்’ [உள்ளுணர்ச்சி] படிச் செய்கிற ஜீவராசிகளே. கர்மாவைப் பண்ண மற்ற லோகங்களிலிருப்பவர்க்கு அதிகாரம் இல்லை.

மநுஷ்யன் செய்கிற கர்மா, அவனுடைய குணம் ஆக இரண்டும் சேர்ந்து ஜீவனை மற்ற லோகங்களுக்கு அழைத்துக் கொண்டு போகின்றன. வேலை செய்து குணத்தை நல்லதாக ஆக்கிக் கொண்டு பரலோகத்திற்கப் போவதற்கு இந்தக் கர்ம பூமியைத் தவிர இதர பூமிகளில் ஸாத்தியமில்லை.

ஒரு கர்மாவைச் செய்ய வேண்டுமென்றால் அதற்குக் கால, தேசக் கட்டுப்பாடு உண்டு. சிராத்தம் அர்த்த ராத்திரியில் பண்ணலாமா? கூடாது. அதற்கு ஏற்பட்ட காலம் உண்டு. அப்படியே அந்தக் கர்மா செய்யவேண்டிய தேசம் ஒன்று இருக்கிறது. அந்தக் கர்மாவைப் புண்ணிய பூமியில்தான் பண்ண வேண்டும். முக்கியமாக பாரத வர்ஷத்தில் வைதிக கர்மாக்கள் பண்ணப்பட வேண்டும். இந்த தேசத்திலும் சில‌ காலங்கள் நிஷித்தமானவை; சில இடங்கள் நிஷித்தமானவை. பரிசுத்த இடத்தில் பரிசுத்த காலத்தில் கர்மாக்களைப் பண்ணவேண்டும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is தேவலோகம் அல்லது ஆத்ம ஞானத்துக்கு வழி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  ஸம்ஸ்காரம் என்பதன் பொருள்
Next