ஸம்ஸ்காரம் என்பதன் பொருள் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

கர்மா என்றால் என்ன? கர்மா என்பது காரியம். ஒரு வேஷ்டியை உண்டாக்குவதற்கு எவ்வளவு காரியங்கள் செய்ய வேண்டியிருக்கின்றன! பஞ்செடுத்து, கொட்டை பிரித்து, நூல் நூற்று, தறியில் நெய்து, சாயம் தோய்த்து – என்றிப்படி எத்தனை செய்ய வேண்டியிருக்கிறது? அதைப் போல அநேக காரியங்கள் பண்ணி ஒருவனை ஆத்மவித்தாக்க வேண்டும். குணத்தினாலும் சரீரத்தினாலும் சேர்ந்து, ஒன்றையொன்று பரிசுத்தி பண்ணிக் கொள்ளும் முறையில் கர்மா செய்யவேண்டும். இப்படிப்பட்ட கர்மாவுக்கே ஸம்ஸ்காரம் என்று பெயர்.

ஒரு பதார்த்தத்துக்கு உள்ள தோஷத்தைப் போக்குவது எதுவோ, குணத்தை புகட்டுவது எதுவோ அதுதான் ஸம்ஸ்காரம். உதாரணமாக கேச ஸம்ஸ்காரம் என்பது க்ஷெளரம் [க்ஷவரம்] செய்து கொள்வது, அழுக்கு, பேன் முதலியவைகளை எடுப்பது, தைலம் தேய்ப்பது முதலியவை. ஜீவாத்மாவுக்கு தோஷங்கள் இருக்கின்றன. தோஷத்தை நிவர்த்தி பண்ணி குணத்தை நிரப்ப வேண்டும். சீப்பினால் வாரித் தைலம் தேய்ப்பது போன்றது ஸம்ஸ்காரம். வயலில் சில ஸம்ஸ்காரங்கள் செய்யப்படுகின்றன. முதலில் காயப்போட வேண்டும்; பின்பு உழ வேண்டும்; ஜலம் விட்டுப் பரம்படிக்க வேண்டும். பிறகு விதைக்க வேண்டும்; நாற்றுப்பிடுங்க வேண்டும்; களை பிடுங்க வேண்டும்; ஜலம் பாய்ச்ச வேண்டும்; அதிக ஜலமிருந்தால் மடை திறந்துவிட வேண்டும்; விளைந்த பின் அறுவடை செய்யவேண்டும்; களத்தில் அடிக்க வேண்டும்; பதர் தூற்றவேண்டும், நெல்லைக் கோட்டை கட்டவேண்டும்; பின்பு அந்த நெல் பழகவேண்டும். அப்புறம்தான் அதை உபயோகிக்க வேண்டும். இவ்வளவு காரியங்கள் இருக்கின்றன. பஞ்சு நூலாகி வேஷ்டியாக வேண்டுமென்றால் பல காரியங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. பஞ்சு யந்திர சாலையில் எவ்வளவு காரியங்கள் செய்யப்படுகின்றன? நூல் சிக்கலாகாமல் நெய்ய எத்தனை ஜாக்கிரதையுடன் எவ்வளவு செய்ய வேண்டியிருக்கிறது? நம்முடைய ஆத்மாவானது இந்திரிய சலனங்களால் சிக்கலாக இருக்கிறது. சிக்கலை எடுத்து எப்பொழுதும் ஆனந்தமாக இருக்கச் செய்யவேண்டும். அப்படிச் செய்வதற்கு பல தடைகள் இருக்கின்றன. ஏதோ சில ஸமயங்களில் மட்டும் இப்போது ஆனந்தம் உண்டாகிறது. பல விதமான துக்கம், வலி இருந்தும் இவ்வளவையும் மீறிக் கொண்டு கொஞ்சம் ஆனந்தம் உண்டாகிறதே, இந்த ஆனந்தம் எப்பொழுதும் இருக்குமாறு பண்ண‌வேண்டும். அதற்காக ஜீவனை ப்ரம்ம லோகத்தில் கொண்டு போய் சேர்க்கவேண்டும். அந்த ஈச்வர ஸந்நிதானத்தில் சேர்த்துவிட்டால் அப்புறம் துன்பமே இராது. பிரளயத்துக்கு அப்புறம் ஐக்கியம் உண்டாகும். ஆகையால் அங்கே சேர்க்கத் தயார் பண்ண வேண்டும்.

இதற்குத்தான் நாற்பது ஸம்ஸ்காரங்களையும் எட்டு ஆத்ம குணங்களையும் ரிஷிகள் சொல்லியிருக்கிறார்கள்.

ஆத்ம குணம், ஆத்மாவை ஸம்ஸ்காரங்களால் சுத்தி பண்ணிக் கொள்வது என்றெல்லாம் சொல்கிறபோது ஆத்மா என்பது த்வைதிகள் சொல்கிற, அதாவது பரமாத்மாவுக்கு வேறாக இருக்கிறாற்போலத் தெரிகிற, ஜீவாத்மாவைத்தான். வாஸ்தவத்தில் இருப்பது ஒரே ஆத்மாதான்; ஜீவ ஆத்மா, பரம ஆத்மா என்ற பேதமே இல்லை. இந்த ஆத்மா நித்ய சுத்தமானது. ஆகையால் அதை ஸம்ஸ்காரத்தால் சுத்தி பண்ணுவது என்பதே தப்பு. அது நிர்குணமான வஸ்து. அதனால் ஆத்ம குணம் என்பதும் தப்பு. ஆனாலும் அந்த நிர்குண வஸ்து மாயையோ, கீயையோ எதையோ ஒன்றை வைத்துக் கொண்டு நம் எல்லார் மாதிரியும் ஆகி, நமக்கு ‘அதுவே தான் நாம்’ என்பது துளிக்கூடத் தெரியாமல்தானே நடைமுறையில் பண்ணி இருக்கிறது? இப்படி த்வைதமாக பேத லெவலில் இருக்கிற ஜீவனைத்தான் இங்கே ஆத்மா என்று சொல்லியிருக்கிறது. இது அழுக்குப் பிடித்ததுதான். அதனால் ஸம்ஸ்காரம் பண்ணி இதை சுத்தமாக்க வேண்டும். இது துர்க்குணம் பிடித்தது. அதனால் எட்டு ஆத்ம குணங்களை அப்பியஸித்து இதை நல்ல குணமுள்ளதாக்க வேண்டும். அப்புறம் ஸம்ஸ்காரம் முதலான காரியங்களும் போய்விடும் குணங்களும் – உயர்ந்த ஸத்வ குணமும் கூட – போய்விடும். ஜீவாத்ம பரமாத்ம பேதமில்லாத அகண்ட ஏக ஆத்ம அநுபவம் அப்போதுதான் ஸித்திக்கும். அதை அடைவதற்காகவே இப்போது காரியமும் (ஸம்ஸ்காரமும்) , குணமும் வேண்டும். இப்படி அஷ்ட குணங்கள்.

நமக்கு லட்சியமாக உள்ள புராண புருஷர்களின் உத்தம குணங்களை நேரே அப்படியே எடுத்துக் கொண்டு அநுஸரிக்கலாம் என்றால், அதற்கு முடியாமல் ஆசாபாசங்கள், துவேஷங்கள், பயம், மனஸின் மற்ற கிருத்ரிமங்கள் எல்லாம் இடைஞ்சல் செய்கின்றன. நமக்கு நிறைய கர்மாக்களைக் கொடுத்து, அதோடு, ‘இப்படித்தான் உட்கார வேண்டும். இப்படித்தான் டிரெஸ் பண்ணிக் கொள்ள வேண்டும்’ என்றெல்லாம் ஒரு கட்டுப்பாட்டுக்கு அடங்கும்படி பண்ணினால்தான் மனஸ் தடித்தனமாகக் கண்டபடி போகாமல் இருக்கிறது. தடித்தனம், அஹங்காரம் குறைய குறையத்தான் ஆசை, துவேஷம் பயம், துக்கம் முதலானவைகளை அடக்கிக் கொண்டு உத்தம குணங்களிலிருந்து நழுவாமல் இருக்க முடிகிறது. ஸம்ஸ்காரங்களும் ஸத்குணங்களும் ஒன்றோடொன்று சேர்த்து வருகின்றன.

ஐடியலாக இருக்கிற புராண புருஷர்களின் குணங்களை – கதையாகக் கேட்டு, நாமும் அப்படி இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்ட குணங்களை – நாம் யதார்த்தத்தில் பெறுவதற்கு ஸம்ஸ்காரங்கள் ஸஹாயம் செய்கின்றன.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is மூன்றுவிதமான லோகங்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  அஷ்ட குணங்கள்
Next