‘நிஷேகாதி ச்மசானாந்தம்’ நாற்பது ஸம்ஸ்காரங்கள் சொல்லப்படுகின்றன. அதாவது, தாயார் வயிற்றில் எந்தத் தினத்தில் தேஹகாரணமான கரு இருக்க ஆரம்பித்ததோ, அந்த நிஷேகம் முதல் தேஹம் அக்கினிக்கு ச்மசானத்தில் [மயானம்] ஆஹூதியாகிற வரைக்கும் நாற்பது கர்மாக்கள் செய்யப்பட வேண்டும். நிஷேகம் அக்கினி ஸாக்ஷியாகச் செய்யப்படுகிறது. கடைசியில் ச்மசான கர்மாவும் அக்னியிலேயே செய்யப்படுகிறது.
வாழ்நாள் பூராவும் அக்னியை அணையாமல் காத்து வரவேண்டும். பிரம்மச்சாரி தினந்தோறும் ஸமிதாதானம் பண்ணி அக்னி காரியம் செய்யவேண்டும். அக்னி ஸாக்ஷியாக விவாஹமான பின் கிருஹஸ்தர்கள் ஒளபாஸனம் என்பதை அக்னியில் செய்யவேண்டும். வானப்பிரஸ்தனுக்கு கக்ஷாக்னி என்று ஒரு அக்னி சொல்லப்பட்டிருக்கிறது. அது காட்டில் செய்வது. ஸந்நியாஸாசிரமத்தில் மட்டும் அக்னியில்லை. ஸந்நியாசியிடம் ஞானாக்கினி இருக்கிறது. அவனுடைய பிரேதத்துக்கும் அக்னி ஸம்ஸ்காரம் கிடையாது. புதைப்பது மரியாதைக்காகச் செய்வது. நியாயமாக அவனுடைய சரீரத்தை நாலாக வெட்டிக் காட்டில் நாலு திக்கிலும் போட்டு விட வேண்டும். அது அங்கே உள்ள பிராணிகளுக்கு ஆஹாரமாகும். ஜனங்களுக்கு உபத்திரவம் இல்லாமல் இருப்பதற்காகக் காட்டில் போடவேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படிச் செய்யாவிட்டால் புதைத்து அதன்மேல் மரம் செடிகளை வைக்க வேண்டும். காட்டில் போட்டால் பிராணிகளுக்கு ஆஹாரம் ஆகிறது. புதைத்தால் மரங்களுக்கு எருவாக ஆகிறது. இப்பொழுது பிருந்தாவனம் கட்டுவது முதலியவை மரியாதையால் செய்பவை. பில்வம், அச்வத்தம் முதலிய பெரிய மரங்களை ஸந்நியாஸியைப் புதைத்த இடத்தில் வைக்க வேண்டும் என்று தான் சொல்லப் பட்டிருக்கிறது.
எல்லா ஜாதியாருக்கும் அக்னி காரியம் உண்டு. விவாஹ காலத்தில் எல்லா வர்ணத்தாரும் ஒளபாஸனம் பண்ண வேண்டும். பிறகு எல்லாரும் அந்த அக்கினியைக் காப்பாற்ற வேண்டும். இப்பொழுது பார்ஸி என்கிற பாரஸீகர்கள்தாம் அக்னியைக் காப்பாற்றி வருகிறார்கள். அவர்களுடைய மத கிரந்தத்திற்கு ‘ஜெண்டவஸ்தா’ என்று பெயர். ‘சந்தோவஸ்தை’ என்ற வேத பாகம் அப்படி வந்திருக்கிறது. ஜொராஸ்த்ரர் என்பவர் அவர்களுடைய ஆசார்யர். அந்தப் பெயர் ஸெளராஷ்ட்ரர் என்பதன் சிதைவுதான். இரான் தேசம் அவர்களுடையது. ஆர்யன் என்பது இரான் என்று மாறிவிட்டது. அவர்கள் அக்னி அணைந்துபோனால் அதிகச் செலவு செய்து பெரிய பிராயசித்தம் பண்ணிக் கொள்ளுகிறார்கள். நம்மிடத்தில் அக்னி காரியம் இந்த நூற்றாண்டு தொடக்கத்திலிருந்து குறைந்து விட்டது. வாழ்க்கை மாறிவிட்டது. சிரத்தை இருந்தால் இந்த உத்தம ஸம்பத்தைக் காத்து வைத்துக் கொண்டிருக்கலாம். சிரத்தை இல்லாததற்கு இந்தக் காலப் படிப்பு ஒரு முக்யமான காரணம்.
இந்த தேஹத்தையும் கடைசியில் ஆஹூதியாக தேவதைகளுக்கு ஹோமம் செய்துவிட வேண்டும். அதற்காகத்தான் பிரேதத்துக்கு நெய்யைத் தடவி அதையும் ஒரு திரவ்யமாக ஹோமம் பண்ணுகிறார்கள். அதுதான் தஹன ஸம்ஸ்காரம்.