ஸம்ஸ்காரங்களின் பெயர்கள் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

ஜீவாத்மாவுக்குப் பரிசுத்தி ஏற்படுவதற்காக நாற்பது ஸம்ஸ்காரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன என்று சொன்னேன். அவை கர்ப்பாதானம், பும்ஸவனம், ஸீமந்தம், ஜாதகர்மா, நாமகரணம், அன்ன ப்ராச‌னம், சௌளம், உபநயனம், குருகுலவாஸத்தில் செய்ய வேண்டிய பிராஜாபத்தியம் முதலிய நாலு வேத விரதங்கள், அது முடிந்ததும் செய்கிற ‘ஸ்நானம்’, பிறகு விவாஹம், அதன்பின் கிருஹஸ்தன் செய்யவேண்டிய ஐந்து நித்ய கர்மாக்களாகிய பஞ்ச மஹா யக்ஞங்கள் ஆக, இதுவரை மொத்தம் பத்தொன்பது; இதோடு கிருஹஸ்தன் செய்ய வேண்டிய பாக யக்ஞங்கள் ஏழும், ஹவிர் யக்ஞங்கள் ஏழும், ஸோம யக்ஞங்கள் ஏழும் ஆக யக்ஞங்கள் இருபத்தொன்றும் ஸம்ஸ்காரங்களே ஆகும். 19+21=40 ஸம்ஸ்காரம்.

அஷ்டகை (அன்வஷ்டகை) , ஸ்தாலீபாகம், பார்வணம், ச்ராவணி, ஆக்ரஹாயணி, சைத்ரி, ஆச்வயுஜி என்ற ஏழும் பாக யக்ஞங்கள். அக்னியாதானம், அக்னிஹோத்ரம், தர்சபூர்ண மாஸம், ஆக்ரயணம், சாதுர்மாஸ்யம், நிரூடபசுபந்தம், ஸெளத்ராமணி என்ற ஏழும் ஹவிர் யக்ஞங்கள். அக்னிஷ்டோமம், அத்யக்னிஷ்டோமம், உக்த்யம், ஷோடசி, வாஜபேயம், அதிராத்ரம், அப்தோர்யாமம் என்னும் ஏழும் ஸோம யக்ஞங்கள்.

நாற்பது ஸம்ஸ்காரங்களில் தினந்தோறும் பண்ண வேண்டியவை சில இருக்கின்றன. சில சில காலங்களில் பண்ணவேண்டியவை சில. ஆயுளில் ஒரு தரம் பண்ண வேண்டியவை சில. இவைகளுக்குள் ஒவ்வொரு கிருஹஸ்தனும் நன்றாகத் தெரிந்துகொண்டு தினமும் செய்யவேண்டிய முக்கியமான ஸம்ஸ்காரங்கள் பஞ்ச மஹா யக்ஞங்கள் என்ற ஐந்து.

மந்திரமில்லாமல் வெறுமே செய்யும் காரியத்தைவிட, மந்திரத்தைச் சொல்லிச் செய்வதே அதிக நன்மை தர வல்லது. இப்படி மந்திரபூர்வமாகக் காரியம் பண்ணுவதே ஸம்ஸ்காரமாகிறது. கிருஹஸ்தன் தினந்தோறும் செய்யவேண்டிய பஞ்சமஹா யக்ஞத்தில் ஸோஷல் சர்வீஸ் (சமூக ஸேவை) என்பது மந்திர பூர்வ ஸம்ஸ்காரமாகிறது.

பஞ்ச மஹா யக்ஞங்கள் – பிரம்ம யக்ஞம், தேவ யக்ஞம், பித்ரு யக்ஞம், மநுஷ்ய யக்ஞம், பூத யக்ஞம் என்பவை. வேதம் ஓதுவது என்ற அத்யயனமே பிரம்ம யக்ஞம், யாகமும் பூஜையும் தேவ யக்ஞம். தர்ப்பணம் பித்ரு யக்ஞம். விருந்தோம்பல் மநுஷ்ய யக்ஞம். ஜீவ ஜந்துக்களுக்கெல்லாம் பலி போடுவது பூத யக்ஞம்*.

இவை போலவே ஒளபாஸனம், அக்னி ஹோத்ரம் இரண்டும் தினசரி செய்வது. ஒளபாஸனம் என்பது நாற்பது ஸம்ஸ்காரத்திலுள்ள ஏழு பாக யக்ஞங்களில் சேராத ஒரு பாக யக்ஞம். அக்னிஹோத்ரம் என்பது ஏழு ஹவிர் யக்ஞங்களில் ஒன்று. தர்ச பூர்ண மாஸம் என்ற இன்னோர் ஹவிர் யக்ஞம் பதினைந்து நாளுக்கு ஒருமுறை செய்வது. மற்ற ஐந்து ஹவிர் யக்ஞங்களையும் ஏழு ஸோம யக்ஞங்களையும் வருஷத்துக்கொரு முறையோ, அல்லது ஆயுஸில் ஒரே ஒரு தடவையாவது செய்யவேண்டும். கஷ்டமான ஸோம யாகங்களை ஜன்மாவில் ஒருமுறை பண்ணினால் போதும் என்று கருணையோடு வைத்திருக்கிறார்கள்.

மாஸம்தோறும் பண்ணவேண்டிய பார்வணீ சிராத்தமும், பிரதமைகளில் செய்யும் ஸ்தாலீபாகமும் தவிர மற்ற ஐந்து பாக யக்ஞங்களும் வருஷத்துக்கு ஒரு முறைதான்.

இதையே வேறு விதமாக வகுத்துச் சொன்னால்: பஞ்ச மஹா யக்ஞம் என்ற ஐந்தும், அக்னி ஹோத்ரமும், ஒளபாஸனமும் ஆக ஏழு தினசரி செய்வது. தர்ச பூர்ண மாஸம் பக்ஷமொருமுறை; ஸ்தாலீபாகமும் பக்ஷமொரு முறை; பார்வணீ மாஸாந்தரம்; நாற்பதில் உள்ள மற்ற யக்ஞங்கள் ஸம்வத்ஸரத்துக்கு் [ஆண்டுக்கு] ஒரு தரமோ, ஜன்மத்தில் ஒரு முறையோ பண்ண வேண்டியவை.

ஒரு போகம் விளையும் நிலங்களில் அறுப்பறுக்கிறது வருஷத்துக்கு ஒரு தரம். முப்போகம் விளைந்தால் நாலு மாஸத்துக்கொரு அறுப்பு. சில பயிருக்கு ஜலம் தினந்தோறும் பாய்ச்சவேண்டும். சிலவற்றுக்கு ஒன்றுவிட்டு ஒரு நாள் பாய்ச்ச வேண்டும். இவைகளெல்லாமே ஸம்ஸ்காரங்கள் தான். ஆனாலும் இவைகளுக்குள் வித்தியாஸம் இருக்கிறது. அவைகளைப் போன்றவைதான் மநுஷ்யனுக்கான ஸம்ஸ்காரங்களும்.


* தெய்வத்தின் குரல்: முதற் பகுதி”யில் “பொதுவான தர்மங்கள்” என்ற பிரிவில் பஞ்ச மஹா யக்ஞங்கள் குறித்த உரைகள் உள்ளன.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is அக்னியின் முக்யத்வம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  பெற்றோர் செய்யும் ஸம்ஸ்காரங்கள்
Next