உபநயன காலம்

உபநயன காலம்

உபநயனம், குருகுலவாஸம் இவற்றைப் பற்றிச் சொன்னேன். உபநயனம் செய்யவேண்டிய காலம் பிராம்மணனுக்கு கர்ப்பத்தைக் கூட்டி எட்டாவது வயசாகும்;அதாவது பிறந்து ஏழு வயஸு இரண்டு மாஸம் ஆனவுடன் பண்ண வேண்டும். க்ஷத்ரியர்கள் பண்ணிரண்டு வயது வரை உபநயனம் செய்யலாம். யது வம்சத்தில் பிறந்த கிருஷ்ண பரமாத்மாவுக்கு அப்படித்தான் செய்திருக்கிறது. வைச்யர்கள் பதினாறு வயசு வரை உபநயனம் பண்ணலாம்.

பிராம்மணர்களுக்கும்கூட எட்டு வயசு lower limit (கீழ் வரம்பு) , பதினாறு வயசு upper limit (உச்ச வரம்பு) என்று சாஸ்திரங்கள், போனால் போகிறதென்று

அவகாசம் கொடுத்திருக்கின்றன. பதினாறு வயசுக்கு அப்புறம் பூணூல் போடாமல் ஒரு பிராம்மணப் பிள்ளையை வைத்திருப்பது மஹத்தான தோஷமாகும்.

ஒருவனுக்கு இப்படி வயசுக் காலம் சொல்லியிருப்பதோடு, உபநயன ஸம்ஸ்காரம் என்பதைச் செய்வதற்கே உத்தராயணம்தான் உரிய காலம் என்றும் ஸ¨ரியன் பூமியின் வடக்குப் பாதியில் ஸஞ்சரிக்கிற ஆறுமாஸத்திலேயே உபநயனம் செய்யவேண்டும். உபநயனம் மட்டுமின்றி விவாஹமும் இந்த ஆறுமாஸத்தில்தான் செய்யலாம். இதிலும் வஸந்த காலம் (சித்திரை, வைகாசி) தான் விவாஹத்துக்கு ரொம்பவும் எடுத்தது. அதே மாதிரி 'மாசிப் பூணூல் பாசி படரும்'என்பதாக மாசி மாதத்தில் பூணூல் போடுவதை விசேஷமானதாகச் சொல்லியிருக்கிறது. தக்ஷிணாயனத்தில் (ஆடியிலிருந்து மார்கழி முடிய) இவற்றைச்

செய்வது செய்வது சாஸ்திர ஸம்மதமல்ல. இப்போது இவற்றுக்கு எவ்வளவு காலம் கடத்தலாமோ அவ்வளவு டிலே செய்துவிட்டு கடைசியிலே மார்கழி மாஸம் ஒன்று தவிர வேறு எப்போது வேண்டுமானாலும் பண்ணலாம் என்று பண்ணுகிறார்கள். பலனும் அதற்கேற்ற மாதிரிதான் இருக்கிறது. கலியாணம் என்று ஏதோ ஒன்று பண்ணியிருக்கிறார்களே என்று திருப்திப்பட்டு அதை வேண்டுமானாலும் தக்ஷிணாயனத்தில் அநுமதிக்கலாம். (கூடாதுதான். ஆனால் தொலைகிறது என்று விடலாம்.) உபநயனத்தை ஒருகாலம் தக்ஷிணாயனத்தில் அநுமதிப்பதற்கில்லை. ஏற்கெனவே தக்ஷிணாயனத்தில் உபநயனம் பண்ணியிருந்தால்கூட மறுபடி உத்தராயணத்தில் ஒரு தரும் பண்ணுங்கள் என்றுதான் சொல்வேன். கலியாணம், பூணூல் இரண்டையுமே பணம் சம்பந்தப்பட்ட காரியங்களாக்கி விட்டு இரண்டு செலவும் ஒன்றாகப் போகட்டுமே என்பதால் தங்கள் பெண்களின் கல்யாணத்துக்காகப் பிள்ளையின் பூணூலை தள்ளிப் போடுகிற வழக்கம் அதிகமிருப்பதால் இதைச் சொல்ல நேர்ந்தது.

ஐந்து வயஸிலேயே உபநயனம் செய்யும் ஒரு வழக்கமும் உண்டு. 'அது காம்யோபநயனம்'எனப்படும். 'காம்யம்'என்றால் ஒரு இஷ்டத்தை உத்தேசித்தது என்று அர்த்தம். குழந்தை விசேஷ அபிவிருத்தி அடைய வேண்டுமென்று ஆசைப்பட்டால் இப்படி செய்யாததால் தோஷமில்லை. ஏனென்றால் மந்திரங்கள் நன்றாக ஸ்பஷ்டமாக உச்சரிக்க வருகிற காலத்தில், ஸம்ஸ்க்ருத ஞானம் இரண்டு வருஷமாவது ஏற்பட்டானதற்கு ஏற்பட்டானதற்குப் பிறகு உபநயனம் பண்ணுவதே போதும். (இப்போது முப்பது, முப்பத்தைந்து வயசுக்குக் கல்யாணமாகிறபோது பூணூலும் போடுவது என்று வந்திருக்கும் தசையில் நான் 'ஐந்து வயசில் பண்ண வேண்டுமென்றில்லை, எட்டில் பண்ணினாலே போதும் என்று சொல்வது எனக்கே ஹாஸ்யமாகத்தான் இருக்கிறது!ஹாஸ்யம் என்று சொன்னாலும் வைதிகப் பிரக்ஞை இருந்தால் வயிறு எரியவேண்டும்!)

பகவத்பாதாளுக்கு ஐந்தாவது வயதிலேயே உபநயனமாகச் சொல்லியிருக்கிறது. பால்யத்திலே அலாதி புத்திசாலித்தனமும், தெய்வ பக்தியும் தெரிந்து, வாக்கு ஸ்பஷ்டமிருந்தால் இப்படிச் செய்யலாம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is நைஷ்டிக பிரம்மசரியம்;இல்லற வாழ்க்கை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  உபநயன உதாரண புருஷர்கள்
Next