உபநயன உதாரண புருஷர்கள் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

இரண்டு தெய்வக்குழந்தைகள் மநுஷ்ய ரூபத்தில் அவதாரம் பண்ணினபோது உபநயன ஸம்ஸ்கார விசேஷத்தாலேயே தங்கள் அவதார காரியத்தைப் பண்ணிக் காட்டின என்று நான் நினைப்பது வழக்கம். வேத மதம் நலிவடைந்தபோது அதை புத்துயிர் கொடுத்து ஸ்தாபித்த சங்கரரும் ஞானஸம்பந்தரும்தான் அந்த குழந்தைகள். ஸம்பந்த மூர்த்தி ஸ்வாமிகளுக்கு பால்யத்திலேயே உபநயனமானதைப் பெரிய புராணத்தில் சொல்லியிருக்கிறது. “நான்மறை ஞான ஸம்பந்தன்” என்று அவரே வர்ணித்துக் கொண்டிருப்பதிலிருந்து நாலு வேதங்களையும் அவர் அத்யயனம் பண்ணினார் என்று தெரிகிறது. ஆசாரியாளுக்கும், ஞானஸம்பந்தருக்கும் ஒரு தரம் கேட்டாலே பாடமாய் விடும். ‘ஏக ஸந்தக்ராஹி’கள். அதனால் ஓரிரு வருஷங்களுக்குள் அத்யயனம் பூர்த்தி பண்ணிவிட்டார்கள். கற்றுக்கொள்ளாமலே, தாங்களாக ஸகல வித்தைகளையும் தெரிந்து கொள்ளக் கூடியவர், அந்த இருவரும். ஒருவர் [சங்கரர்] பரமேச்வர அவதாரம்; மற்றவர் [ஸம்பந்தர்] ஸுப்ரமண்யரின் அவதாரம். அப்படியிருந்தும் அவர்கள் உபநயன ஸம்ஸ்காரமாகி, காயத்ரீ மந்திர உபதேசம் பெற்ற பின்பே அவதார காரியத்தை விசேஷமாகச் செய்து காட்டினார்கள் என்றால், இது அந்த ஸம்ஸ்காரத்தின் அவசியத்தை ஸாதாரண மநுஷ்யர்களான நமக்கு அழுத்தமாகத் தெரிவிப்பதற்குத்தான்.

ராஜசூடாமணி தீக்ஷிதரென்று ஒரு கவி இருந்தார். அவர், “காயத்ரீ என்னை அடையுமுன்பே ஸரஸ்வதி என்னிடம் வந்து விட்டாள்” என்று ஒரு ச்லோகத்தில் சொல்லியிருக்கிறார். காயத்ரீ உபதேசம் பெறுகிற எட்டாவது வயசுக்கு முன்பே அவர் கவிபாட ஆரம்பித்து விட்டார். அதைத்தான் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்! ஞான ஸம்பந்தரும் மூன்றாம் வயசிலேயே ‘தோடுடைய செவியன்’ என்று பாடினவர்தான். அப்போதே அற்புதங்களைச் செய்ய ஆரம்பித்து விட்டார். ஆனாலும் பூணூல் போட்டுக் கொண்டு காயத்ரீ உபதேசம் வாங்கிக் கொண்டார்; அந்த பலத்தினாலேயே மேற்கொண்டு பெரிய பெரிய காரியங்களைப் பண்ணி வைதிக தர்மத்தை நிலைநாட்டினதாகக் காண்பித்தார் – என்பதிலிருந்து நமக்கெல்லாம் உபநயன ஸம்ஸ்காரத்திலும், அதற்கப்புறம் காயத்ரீ ஜபம் செய்வதிலும் கண்ணைத் திறந்து விட்டிருக்கிறார் என்று தெரிகிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is உபநயன காலம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  வயசு நிர்ணயத்துக்குக் காரணம்
Next