தமிழ்நாட்டில் தர்ம சாஸ்திரம் என்றால் வைத்யநாத தீக்ஷிதீயம்தான்.
கொஞ்சம் பாஷாஞானம் இருந்தாலும் இதுபோன்ற தர்ம சாஸ்திரத்தைப் படித்துப் புரிந்துகொண்டு விடலாம். வேத அத்யயனம் பண்ணினால்கூட மந்திரத்துக்கு அர்த்தம் தெரியாத மாதிரி, இது கஷ்டம் இல்லை. வைத்யநாத தீக்ஷிதீயத்தைப் பெரியவர்கள் நன்றாகத் தமிழிலேயே மொழி பெயர்த்து அச்சுப் போட்டிருக்கிறார்கள்.
வைத்யநாத தீஷிதர் எழுதிய புஸ்தகமாதலால் இதற்கு இப்படிப் பெயர் சொல்கிறோம். அவர் இந்நூலுக்கு, வைத்த பெயர் “ஸ்ம்ருதி முக்தாபல நிபந்தன க்ரந்தம்” என்பது.
இந்தப் பரம உபகாரமான நூலை எழுதிய வைத்யநாத தீக்ஷிதரைப் பற்றி நமக்குக் கொஞ்சமே தெரிய வந்திருக்கிறது. இருநூறு வருஷங்களுக்கு முன்பு அவர் இருந்திருக்க வேண்டும். நாச்சியார் கோவிலுக்கு ஸமீபத்திலுள்ள கண்டிரமாணிக்கத்தைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது. எழுதியதோடு மட்டுமில்லாமல் அவரே ஸகல கர்மங்களையும், தர்மங்களையும் அநுஷ்டித்துக் காட்டினார்; பெரிய யாகங்கள் செய்தார் என்று அறிகிறோம்.
மேதாதிதி, விக்ஞானேச்வரர், ஹேமாத்ரி முதலியவர்களின் உயர்ந்த நிபந்தன கிரந்தங்களையும்விட வைத்யநாத தீக்ஷிதீயமே சிரேஷ்டமானதாகக் கருதப்படுகிறது. ஒரு விஷயங்கூட விட்டுப் போகாமல் இதில் வர்ண (ஜாதி) தர்மம், (பிரம்மசர்யம் முதலான) ஆச்ரம தர்மம், ஆசௌசம், சிராத்தம், பிராயச்சித்தம், ஸ்த்ரீ தர்மம், தாயபாகம், திரவிய சுத்தி முதலான ஸகலத்தையும் பூர்ணமாகச் சொல்லியிருக்கிறது.
தர்ம சாஸ்திரம் பூர்விகமான பிதுரார்ஜித சொத்தை எப்படி யாருக்கு விநியோகிக்க வேண்டும் என்பதைக்கூட வரையறுக்கிறது. Hindu Code Bill முதலானவை சுதந்திர இந்தியாவில் கொண்டுவரப்பட்டபோது சில பேர் சாஸ்திரப்படிதான் சொத்துரிமை தரவேண்டும் என்று வாதம் செய்தார்கள். இந்த விஷயந்தான் தாயபாகம் என்பது. (மருமக்கத்தாயம் என்றே மலையாளத்தில் மாமன்- மருமான் வழியாகச் சொத்து விநியோகமாவதைச் சொல்கிறார்களல்லவா? ‘தாயாதி’ என்ற பெயரும் ‘தாய’ த்திலிருந்து வந்ததே.)
நிபந்தன கிரந்தங்களில் தீக்ஷிதீயமே கடைசியில் வந்த தாகையால் முந்தைய எல்லா தர்ம சாஸ்திர நூல்களையும் அலசி, ஆராய்ந்து, எல்லா விஷயங்களையும் கொடுக்கிறது. இதற்கு முந்தி தோழப்பர் செய்த நிபந்தனந்தான் தக்ஷிணத்தில் ஓரளவுக்கு நல்ல பிரசாரத்திலிருந்தது.
தீக்ஷிதீயம் தோன்றியதிலிருந்தே ஸ்மார்த்த வைஷ்ணவ பேதமில்லாமல் இருவரும் அதை ஆதாரமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ச்ருதியான வேதத்தையும், அதன் விளக்கமாய் பூர்வத்திலேயே தோன்றிய கல்ப ஸூத்ர, தர்ம ஸூத்ர, ச்ரௌத-க்ருஹ்ய ஸூத்ரங்களையும், ஸ்மிருதிகளையும் போல, பிற்பாடு தோன்றிய நிபந்தன கிரந்தங்களை எல்லாரும் ஏற்கும்படியான முறையில் எழுதுவது ஸுலபமல்ல. தீக்ஷிதர் பக்ஷபாதமே யில்லாமல் விசால மனஸோடு, நடு நிலைமையிலிருந்து கொண்டு மீமாம்ஸா சாஸ்திரத்தின் அர்த்த நிர்ணய முறையையே பின்பற்றிப் பூர்வ சாஸ்திரங்களைத் தொகுத்து, அவற்றில் பரஸ்பர விரோதமுள்ள பாகங்களில் முடிவாக ஒரு தீர்மானத்துக்கு வந்திருப்பதால்தான் தீக்ஷிதீயம் தென்தேசத்தில் பிரமாண நூலின் ஸ்தானத்தைப் பெற்றது. ஒன்றுக்கொன்று ஸ்மிருதிகள் முரணாயிருக்கும் சில இடங்களில், “அவரவர் இவற்றை தேசாசாரப்படி செய்து கொள்ளட்டும்; தங்கள் குல பூர்விகர்கள் எப்படிப் பண்ணினார்களோ அப்படிப் பண்ணட்டும்” என்று பெருந்தன்மையோடு சொல்லி விட்டு விடுவார்.