ஸந்தியாவந்தனத்தின் இதர அம்சங்கள் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

தநுர்வேதத்தில் அஸ்திரம், சஸ்திரம் என்று இரண்டு வகை ஆயுதங்கள் சொல்லப் பட்டிருக்கின்றன. சஸ்திரம் என்பதுதான் கம்பு, அம்பு, ஈட்டி, கதை முதலான அசல் ஆயுதங்கள். அஸ்திரம் என்பது இப்படி அசல் ஆயுதமாக இல்லாமல் எந்த ஒரு வஸ்துவையும் மந்திர சக்தியால் ஆயுதமாக ஆக்கி எய்வது. மந்திரத்தைச் சொல்லி ஒரு தர்ப்பையையோ, புல்லையோ ஏவி விட்டால் கூட அது ஆயுதமாகிவிடும். சஸ்திரங்களையும் இப்படி மந்திர பூர்வமாகப் பிரயோகிப்பதுண்டு. மந்திரபூர்வமாக ஒரு பதார்த்தத்தை அஸ்திரமாக்கி ஏவி விட்டால், எதன்மேல் விடுகிறோமோ அது நாசமடையும்.

இரு பிறப்பாளர் என்னும் பிரம்ம-க்ஷத்ரிய- வைசியர்கள் பிரதிதினமும் மூன்று வேளையும் பண்ண வேண்டிய அஸ்திரப் பிரயோகம் ஒன்று இருக்கிறது. அஸுரர்களை, அதாவது லோகத்தைச் சூழ்ந்துள்ள கெட்ட சக்திகளை, நாசம் பண்ணுவதற்காக இந்த அஸ்திரப் பிரயோகம் ஒன்று இருக்கிறது. அஸுரர்களை, அதாவது லோகத்தைச் சூழ்ந்துள்ள கெட்ட சக்திகளை, நாசம் பண்ணுவதற்காக இந்த அஸ்திரப் பிரயோகம் பண்ண வேண்டும். அஸ்திரம் என்றால் ஒன்றை மந்திர பூர்வமாக விட்டு எறிகிறதல்லவா? அந்த அஸ்திரம் எது? எதை விட்டெறிகிறது? ஜனங்களுடைய புத்தியை ஆசிரயித்திருக்கிற அஸுரர்கள் தொலைய வேண்டுமென்று ஜலத்தை விட்டு எறிகிறதுதான் அஸ்திரமாகிறது. இதுதான் ஸந்தியா வந்தன அர்க்யம். ‘பாபம், பொய் முதலியவை தொலைய வேண்டும். ஞான ஸூரியன் பிரகாசிக்க வேண்டும். அது பிரகாசிக்காமல் பண்ணிக் கொண்டு உள்ளே இருக்கிற பிரதிபந்தகங்கள் [இடையூறுகள்] நிவர்த்தியாக வேண்டும்’ என்று அந்த அஸ்திரப் பிரயோகம் பண்ண வேண்டும். ஒவ்வொரு நாளும் மூன்று வேளை பண்ண வேண்டும். எந்தக் காரியம் பண்ணினாலும் பண்ணாவிட்டாலும் மூச்சைப் பிடித்துக் கொண்டு இதைப் பண்ண வேண்டும்.

ஒரு காரியத்தை சிரத்தையாக ஒருவன் பண்ணினால் ‘மூச்சைப் பிடித்துக் கொண்டு பண்ணுகிறான்’ என்று சொல்லுகிறோம். வாஸ்தவத்தில் இந்த அர்க்ய காரியத்தையே மூச்சைப் பிடித்துக் கொண்டு பண்ண வேண்டும்! தினந்தோறும் இதைப்பண்ணி வந்தால் அந்த சத்ருக்கள் நாசமாய்ப் போய் விடுவார்கள். இது பண்ணுவதற்கு முதலில் மூச்சைப் பிடித்துக் கொள்ள வேண்டும். அதாவது ச்வாஸத்தை அடக்க வேண்டும். இப்பொழுது நாம் மூக்கை மட்டும் தான் பிடிக்கிறோம். சாஸ்திரம் ‘நாஸிகாம் (மூக்கை) ஆயம்ய’ என்று சொல்லவில்லை. ‘ப்ராணான் (மூச்சை) ஆயம்ய’ என்றுதான் சொல்லியிருக்கிறது. அதாவது வெறுமே மூக்கைப் பிடிக்காமல் பிராணனையே கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். ‘ப்ராணாயாமம்’ என்பது ‘ப்ராண ஆயாமம்’, அதாவது ‘ச்வாஸக் கட்டுப்பாடு’, ‘ஆயம்ய’ என்றால் ‘கட்டுப்படுத்தி’.

எந்தக் காரியம் பண்ணினாலும் மனது ஒருமைப்பட வேண்டும். ஜலத்தைக் கொண்டு அஸ்திரப் பிரயோகம் செய்வதற்கும் மனது ஒருமைப்பட வேண்டும். அதற்காகத் தான் மூச்சைப் பிடிக்க வேண்டும். ‘மூச்சைப் பிடித்தால் மனது எப்படி நிற்கும்?’ என்று கேட்கலாம். மனது நிற்கிற பொழுது மூச்சு நிற்பதைப் பார்க்கிறோமே! பெரிய ஆச்சரியம் உண்டாகிறது, பெரிய துன்பம் வருகிறது, பெரிய சந்தோஷம் ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது மனசுலயித்துப் போய் ஏகாந்தமாக நிற்கிறது; ‘ஹா!’ என்று கொஞ்ச நேரம் மூச்சும் நின்றுபோய் விடுகிறது. அப்புறம் வேகமாக ஓடுகிறது. நாமாக அதை நிறுத்தவில்லை; தானாக நிற்கிறது. மனசு ஒன்றிலே நன்றாக ஈடுபட்டவுடன் மூச்சு நின்றுவிடுகிறது. பின்பு பெருமூச்சு விடுகிறோம். எதற்காக? முன்பு விடாத மூச்சையும் சேர்த்து விடுகிறோம். இப்படி மனது ஒருமைப்படுகிற போது மூச்சு நிற்கிறதென்றால் மூச்சை நாமாக நிறுத்தினாலும் மனது ஒருமைப்படும் என்று ஆகிறதல்லவா? இதற்காகத்தான் பிராணாயாமத்தால் மூச்சை இறுக்கி, அப்புறம் அர்க்யம் தருவது.

நாம் அர்க்கியம் விடும்போது சித்த ஐகாக்ரியத்தோடு [மன ஒருமைப்பாட்டோடு] விடவேண்டும். பிராணாயாமம் பண்ணினால் சித்தைக்காக்கிரியம் உண்டாகும். அதை நிறையப்பண்ணுவது யோகத்திற்கு அவசியம். அப்படி நிறையப் பண்ணுவது கஷ்டமானது; உபதேசத்தின்படி செய்ய வேண்டியது. நாம் ஸந்தியாவந்தனத்தில் அதிக பட்சமாக ஒரு இடத்தில் பத்துத் தடவை பண்ணுகிறோம். மூன்று பண்ணு என்றும் சில இடத்தில் இருக்கிறது. சிறு வயதில் உபநயனமான காலம் முதற்கொண்டு கிரமமாக நாம் வேளைக்குப் பத்துப் பிராணாயாமம் பண்ணிக்கொண்டு வந்திருந்தாலே, இத்தனை நாளில் யோகீச்வரராக ஆகியிருப்போம். பண்ணுகிறதைச் சரியாகப் பண்ண வேண்டுமல்லவா? அரை நிமிஷம் ச்வாஸத்தை நிற்கப் பண்ண வேண்டும். அதிகமாக வேண்டாம். பிராணன் நின்றால் மனது நிற்கும். அந்த நிலையில் அர்க்யம் கொடுத்தால் வாஸ்தவமாகக் கெட்ட அஸுர சக்திகள் ஓடிப்போகும். மனஸ் நின்றால் நாம் விடுகிற ஜலம் அஸ்திரமாகும்.

அர்க்கியமாகிய அஸ்திரப் பிரயோகத்தைப் பண்ண வேண்டும். பின்பு காயத்ரீ பண்ணவேண்டும். பிராணாயாமத்தைக் கூடிய வரையில் பண்ணவேண்டும். மூச்சைக் கொஞ்சம் நிறுத்துகிறது, பின்பு விடுகிறது என்ற அளவில் இருந்தாலே போதும். அதிகம் அடக்கவேண்டாம். ஸங்கல்பம், மார்ஜனம், பிராசனம், அர்க்யப்ரதானம், ஜபம், ஸ்தோத்திரம், அபிவாதனம் இவ்வளவும் பரமேச்வரனுடைய அநுக்கிரஹம் பெறுவதற்காகப் பண்ணகிறேனென்று நினைத்துச் செய்யவேண்டும். முதலில் பண்ணும் ஸங்கல்பம் என்பது அதுதான். ஆரம்ப முதல் கடைசி வரையில் பரமேச்வரார்ப்பணம் பண்ணவேண்டும். இவ்வளவுக்கும் பிராணாயாமம் முக்கிய அங்கம். திரிகாலங்களிலும் இதை ஸ்வல்பமாவது பண்ணவேண்டும்.

தினந்தோறும் மூன்று வேளையும் ரோகிஷ்டன் [நோயாளி] கூடப் பிராணாயாமம் பண்ணவேண்டும் என்று சாஸ்திரத்தில் இருப்பதால் உபத்திரவம் கொடுக்கிற அளவுக்கு இதில் ச்வாஸக் கட்டுப்பாடு இல்லை என்று புரியும். இப்படிப் பண்ணினாலே ரோகமும் போய் தீர்க்காயுஸ் உண்டாகும்.

ரிஷயோ தீர்க்க ஸந்த்யத்வாத் தீர்க்கமாயுரவாப்நுயு:|

ப்ரஜ்ஞாம் யசச்ச கீர்த்திம் ச ப்ரஹ்ம வர்சஸமேவ ச||

(மநுஸ்மிருதி, 4-94)

அபிவாதனத்தில் எந்த மஹரிஷியினுடைய ஸந்ததியில் பிறந்திருக்கிறோம் என்று சொல்கிறோமோ அந்த மஹரிஷி முதல் காயத்ரீ ஜபிக்கப்பட்டு வருகிறது. அந்த கோத்திரத்தில் பிறந்ததற்காவது கர்மாநுஷ்டானங்களைச் செய்ய வேண்டியது நமது கடமை. அந்த முதல் ரிஷிக்கு அப்புறம் எவ்வளவோ பேர் ரிஷிகளாக இருந்திருக்கிறார்கள். த்ரயார்ஷேயம், பஞ்சார்ஷேயம், ஏகார்ஷேயம் என்று சொல்கிறோம். அதாவது அந்த அந்த கோத்திரத்தில் ரிஷிகளோ, ஐந்து ரிஷிகளோ, ஒரு ரிஷியோ இருந்திருக்கிறார்கள் என்று இதனால் தெரியவருகிறது. அவர்கள் அப்படி தீர்க்காயுஸ், ஞானம், புகழ், பிரம்மதேஜஸ் முதலியவையுள்ள ரிஷிகளாக ஆனதற்குக் காரணம் அவர்கள் செய்த ஸந்தியாவந்தனம்தான் என்பது நான் சொன்ன [மநு ஸ்மிருதி] ச்லோகத்தின் அர்த்தம்.

தொடர்ச்சியாக வந்த இந்த தாரையை நாம் அறுத்து விடக்கூடாது. பிராணயாமத்தோடு சித்தைக்காக்கிரியத்தோடு மந்திர லோபமில்லாமல் பரமேச்வரார்ப்பணமாக ஸந்தியாவந்தனத்தை நிறுத்தி நிதானமாகப் பண்ணவேண்டும். அர்த்தத்தைத் தெரிந்து கொண்டு பண்ணவேண்டும்.

மனோ-வாக்-காயங்களால் பாபம் பண்ணியிருக்கிறோம். அந்த மூன்றாலும் செய்யும் கர்மாக்களால் அந்தப் பாபத்தைப் போக்கிக் கொள்ளவேண்டுமென்று முன்பு சொல்லியிருக்கிறேன். ஸந்தியாவந்தனத்தில், வாக்கினால் மந்திரம் சொல்லுகிறோம்; காயத்ரீ ஜபத்தை மனதினால் தியானித்துப் பண்ணுகிறோம்; மார்ஜனம் (புரோக்ஷித்துக் கொள்வது) முதலியவைகளால் காயசுத்தி உண்டாகிறது.

அது மட்டுமில்லாமல் கர்மயோகம், பக்தியோகம், ஞானயோகம் மூன்றும் சேர்ந்ததாகவும் ஸந்தியாவந்தனம் இருக்கிறது.

ஸந்தியாவந்தனம் பண்ண அவரவர்கள் தங்கள் தங்களுக்கென்று பாத்திரம் வைத்துக்கொள்ளவேண்டும். ஸந்தியா வந்தனத்தை அவஸரமாகப் பண்ணக்கூடாது என்பது முக்கியம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is காயத்ரீ மந்திர மகிமை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  பெண்கள் விஷயம் என்ன?
Next