பெண்கள் விஷயம் என்ன? : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

நடுவிலே இதர ஜாதியாரின் நலனையும் உத்தேசித்து த்விஜன் – இருபிறப்பாளன் -ஸந்தியாவந்தனம் செய்ய வேண்டும்; ஸ்திரீகளின் க்ஷேமத்தை உத்தேசித்தும் புருஷரே பண்ண வேண்டும் என்றேன்.

இதர ஜாதியாருக்கு – நாலாம் வர்ணத்தாருக்கு – ஏன் இந்த ஸம்ஸ்காரங்கள் இல்லை என்பதையும் முன்பே சொன்னேன். இப்போது ஸ்திரீகள் விஷயத்தையும் கவனிக்க வேண்டும்.

அவர்களுக்கு ஏன் இந்த அநுஷ்டானங்களும், ஸம்ஸ்காரங்களும் இல்லாமல் வைத்திருக்கிறது?

குழந்தை பிறந்தவுடன் புண்யாஹவாசனம், நாமகரணம், பிறகு ஆண்டு நிறைவில் அப்தபூர்த்தி, அன்னப் பிராசனம் முதலானதுகளை நாம் பெண் குழந்தைகளுக்கும் பண்ணினாலும், சௌளம் (குடுமி வைத்தல்) , உபநயனம், பிறகு பிரம்மசரிய ஆச்ரமத்தில் உள்ள விரதங்கள் முதலிய எதுவும் பெண்களுக்கு இல்லை. அப்புறம் கல்யாணம் என்கிற விவாஹ ஸம்ஸ்காரம் மட்டும் அவளுக்கும் இருக்கிறது. அதற்கப்புறம் உள்ள ஸம்ஸ்காரங்கள், யக்ஞம் முதலானவற்றில் கர்த்தாவாக முக்கியமாய் காரியம் பண்ணுவது புருஷன்தான். இவள் பத்தினி ஸ்தானத்தில் கூட நிற்கிறாள். ஒளபாஸனத்தில் மாத்திரம் இவளும் ஹோமம் பண்ணுகிறாள்.

ஏன் இவளை இப்படி வைத்திருக்கிறது?

பிறப்பதற்கு முன்பே செய்யப்படும் நிஷேகம், பும்ஸவனம், ஸீமந்தம் முதலியவைகூட புருஷப் பிரஜையை உத்தேசித்தேதான் செய்யப்படுகின்றன.

அப்படியானால் இக்காலச் சீர்திருத்தக்காரர்கள், ‘பெண் விடுதலைக்காரர்கள்’ சொல்வது போல் ஹிந்து மதத்தில் பெண்களை இழிவு படுத்தி இருட்டில் அடைத்துத்தான் வைத்திருக்கிறதா?

நாலாம் வர்ணத்தாருக்கு ஸம்ஸ்காரங்களில் பல இல்லாததற்கு என்ன காரணம் சொன்னேன்? அவர்களால் நடக்க வேண்டிய லௌகிக காரியங்களுக்கு இவை அவசியமில்லை என்றேன். இந்த ஸம்ஸ்காரங்களால் எப்படிப்பட்ட தேஹ, மன ஸ்திதிகள் ஏற்படுமோ அவை இல்லாமலே அவர்கள் லோக உபகாரமாக ஆற்றப்பட வேண்டிய தங்களது தொழில்களைச் செய்துவிட முடியும். அத்யயனம், யக்ஞம் என்பவற்றில் மற்ற ஜாதியாரும் பொழுதைச் செலவிட்டால் அவர்களால் நடத்தியாக வேண்டிய காரியங்கள் என்ன ஆவது? இதனால்தான் அவர்களுக்கு இவை வேண்டாமென்று வைத்தது. இவை இல்லாமலே, தங்கள் கடமையைச் செய்வதனால் அவர்கள் ஸித்தி பெறுகிறார்கள். “ஸ்வகர்மணா தம் அப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மானவ:” என்று பகவான் (கீதையில்) சொல்லியிருக்கிறார். இந்த விஷயங்களை முன்பே சொன்னேன்.

பொதுவான சமூகத்தில் இப்படிக் காரியங்கள் பிரித்திருப்பதை முன்னிட்டே ஸம்ஸ்கார வித்யாஸம் ஏற்பட்டிருக்கிற மாதிரித்தான், ஒவ்வொரு வீட்டிலும் புருஷர்களுக்கும் பெண்களுக்கும் இடையே வித்யாஸம் வைத்திருக்கிறது. ஒரு வீடு என்றிருந்தால் சமையல், வீட்டைச் சுத்தம் பண்ணுவது, குழந்தைகளை வளர்ப்பது என்றிப்படி பல காரியங்கள் இருக்கின்றன. ஸ்வாபாவிகமான [இயற்கையான] குணங்களால் பெண்களே இவற்றுக்கு ஏற்றவர்களாக இருக்கின்றனர். இவர்களும் புருஷர்களின் அநுஷ்டானங்களில் இறங்கிவிட்டால் இவர்கள் செய்ய வேண்டிய காரியம் என்ன ஆவது? இவர்களுடைய சித்தசுத்திக்குப் பதி சுசுரூஷை, கிருஹ ரக்ஷணை இதுகளே போதும் என்னும் போது புருஷனின் அநுஷ்டானங்களை இவர்களுக்கும் வைத்து வீட்டுக் காரியங்களை ஏன் கெடுக்க வேண்டும்?

ஆகவே disparity, discrimination [ஏற்றத்தாழ்வு, வித்யாஸப் படுத்துதல்] என்று இக்காலத்துச் சீர்த்திருத்தக்காரர்கள் வைகிறதெல்லாம் வாஸ்தவத்தில் ஒருத்தர் செய்கிறதையே இன்னொருத்தரும் அநாவசியமாக duplicate பண்ணாமல், ஒழுங்காக வீட்டுக் காரியமும், நாட்டுக் காரியமும் நடக்கும்படி division of labour [தொழிற் பங்கீடு] பண்ணிக் கொண்டது தான்; எவரையும் மட்டம்தட்ட அல்ல.

மந்திரங்களை ரக்ஷிக்க வேண்டிய சரீரங்களை அதற்குரிய யோக்கியதை பெறும்படியாகப் பண்ணுவதற்காகவே ஏற்பட்ட ஸம்ஸ்காரங்கள் பல இருக்கின்றன. இவற்றை இந்த மந்திர ரக்ஷணை என்ற காரியமில்லாத மற்ற சரீரிகளுக்கு எதற்கு வைக்கவேண்டும்? உடைந்து போகிற க்ளாஸ் ஸாமான்களைப் பார்ஸலில் அனுப்ப வேண்டுமானால் அதற்கு சில விசேஷ பாதுகாப்புப் பண்ணுகிறார்கள். கூட்ஸில் மண்ணெண்ணைய், பெட்ரோல் முதலியவற்றை அனுப்பும்போது அதற்குத் தனி ஜாக்கிரதைகள் பண்ணுகிறார்கள். மற்ற ஸாமான்களுக்கு இப்படிப் பண்ணவில்லை என்பதால் அவற்றை மட்டம் தட்டுகிறார்கள் என்று ஆகுமா? இந்நாளில் ரேடியேஷனை [கதிரியகத்தை] உத்தேசித்து, ஸ்பேஸுக்கு [வானவெளிக்கு] ப் போகிறவனை முன்னும் பின்னும் ஐஸொலேட் செய்து [பிரித்து வைத்து] ரொம்பவும் ஜாக்கிரதை பண்ணவில்லையா? இதே மாதிரி, இதைவிடவும் மந்திரங்களுக்கு ரேடியேஷன் உண்டு என்று புரிந்து கொண்டால் பிராம்மணனைப் பிரித்து ஸம்ஸ்காரங்களை வைத்ததன் நியாயம் புரியும்.

லோக க்ஷேமார்த்தம் மந்திரத்தை ரக்ஷிக்க வேண்டிய ஒரு பிராம்மண புருஷ சரீரம் உருவாக வேண்டுமானால் அது கர்ப்பத்தில் வைக்கப் படுவதிலிருந்து சில பரிசுத்திகளைப் பண்ண வேண்டியிருக்கிறது. பும்ஸவனம், ஸீமந்தம் முதலியன இதற்குத்தான். பிறந்த பிறகும் இப்படியே.

அவரவரும் ரைட், ரைட் (உரிமை, உரிமை) என்று பறக்காமல், நல்ல தியாக புத்தியோடு, அடக்கத்தோடு லோக க்ஷேமத்துக்கான காரியங்களெல்லாம் வகையாக வகுத்துத் தரப்பட வேண்டும் என்பதையே கவனித்தால், சாஸ்திரங்கள் சில ஜாதியாருக்கோ, ஸ்திரீகளுக்கோ பக்ஷபாதம் பண்ணவேயில்லை என்பது புரியும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is ஸந்தியாவந்தனத்தின் இதர அம்சங்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  பெண்களின் உயர்ந்த ஸ்தானம்
Next