‘பால்ய விவாஹம் கூடாது; பெண்கள் ரிதுவான பின்தான் கல்யாணம் பண்ணவேண்டும்’ என்று இந்த நூற்றாண்டு ஆரம்பத்திலேயே நம் மதஸ்தர்களில் ரொம்பவும் செல்வாக்காக இருந்தவர்கள் வாதம் செய்து மகாநாடுகள் நடத்தி resolutions [தீர்மானங்கள்] போட்டிருக்கிறார்கள். இவர்கள் வேதத்தில் நம்பிக்கையில்லாதவர்கள் அல்ல. மாறாக தாங்கள் சொல்வதுதான் வேத ஸம்மதமான விவாஹம், பால்ய விவாஹம் என்பது வேத ஸம்மதமானதில்லை என்று இவர்கள் சொன்னார்கள்.
எம். ரங்காச்சாரியார், சிவஸ்வாமி அய்யர், ஸுந்தரமய்யர், கிருஷ்ணஸ்வாமி அய்யர் மாதிரியான பெரிய புள்ளிகள் இவர்களில் இருந்தார்கள். அப்புறம் ரைட் ஆனரபிள் [வி.எஸ். ஸ்ரீநிவாஸ] சாஸ்திரி இந்த விஷயத்தில் விசேஷமாக வாதம் பண்ணினார்.
நல்ல சாஸ்திர பாண்டித்தியம் பெற்றிருந்தவர்களிலேயே வைஷ்ணவர்கள் காஞ்சிபுரத்திலும், ஸ்மார்த்தர்கள் திருவையாற்றிலும் இரண்டு ஸபைகள் நடத்தி, வேதப் பிரகாரம் பூர்வத்தில் விவாஹ வயசு உயர்வாகத்தான் இருந்தது, ரிதுமதி விவாஹந்தான் நடந்திருக்கிறது என்று அபிப்ராயம் சொன்னார்கள்.
அப்புறம் ஏன் இப்படி பால்ய விவாஹம் வந்தது என்பதற்கும் ஒரு காரணம் சொன்னார்கள். அதாவது: துருக்கர்கள் இந்த தேசத்துக்கு வந்த புதிதில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த கன்யாப் பெண்களைத் தூக்கிக் கொண்டு போய் பலாத்காரம் பண்ணுவது அதிகமாயிருந்ததாம். ஆனால் ஒருத்தன் ‘தொட்ட’தை (பொட்டுக் கட்டினதை) அவர்கள் பலாத்காரம் பண்ணமாட்டார்களாம். அதனாலேயே பெண்கள் குழந்தைகளாக இருக்கும்போதே கல்யாணம் பண்ணிவிடுகிற புது வழக்கத்தை ஆரம்பித்தார்களாம். இப்படி இந்தக் கல்யாணச் சீர்திருத்தக்காரர்கள் சொல்லி, ‘இப்போது நாம் மறுபடி வேதத்தில் இருந்த பிரகாரமே மாற்ற வேண்டும். Pre-puberty marriage [வயசு வரும் முன் கலியாணம்] என்ற அநாகரிகத்தைத் தொலைத்து விடவேண்டும்” என்று வாதம் செய்தார்கள்.
தாங்கள் சொல்வது வாஸ்தவத்தில் சாஸ்திரோக்தமானது என்பதற்கு ஆதரவாக இவர்கள் குறிப்பாக இரண்டு சான்றுகளை காட்டினார்கள். ஒன்று விவாஹ சடங்கிலேயே வருகிற சில வேத மந்திரங்கள். மற்றது நம்முடைய தர்ம சாஸ்திரங்களிலெல்லாம் மிகச் சிறந்ததாக கருதப்படும் மநுஸ்மிருதி.
விவாஹப் பிரயோக மந்திரமான வேத வாக்கியத்தில்* என்ன சொல்லியிருக்கிறது?
இதைச் சொல்லுமுன் இன்னொரு விஷயம் சொல்ல வேண்டும்.
நம் ஒவ்வொரு தேகத்திலும் அங்கங்களுக்குள்ளே அவை ஒவ்வொன்றுக்கும் அதி தேவதையாக ஒரு தேவன் இருக்கிறான். கண்ணில் ஸூரியன், கையில் இந்திரன் என்றிப்படி நமக்குள் ஆத்யாத்மிகமாக தேவ சக்திகள் இருக்கின்றன. இது தவிர ஒவ்வொரு வயோவஸ்தையிலும் (வயசுக்கட்டத்திலும்) ஒவ்வொரு தேவதைக்கும் நம் மேல் ஆதிக்கம் இருக்கிறது. இவ்விதத்திலே ஒரு பெண்ணானவள் பிறந்ததிலிருந்து வஸ்திரம் கட்டிக் கொள்ளத் தெரிகிற வரையில் ‘ஸோமன்’ என்ற தேவதையின் ஆதீனத்தில் இருக்கிறாள். (புருஷர்கள் கட்டிக் கொள்ளும் வேஷ்டிக்கே ‘சோமன்’ என்று பேர் இருக்கிறது!) அதற்கப்புறம் ரிதுவாகும் வரையில் அவள் கந்தர்வனின் ஆதீனத்தில் இருக்கிறாள். வயசு வந்ததிலிருந்து மூன்று வருஷம் அக்னியின் ஆதிக்கத்தில் இருக்கிறாள். ஸோமன் என்றால் சந்திரன். ஸோமன் ஒரு பெண்ணை ஸ்வீகரித்துக் கொண்டிருக்கிற குழந்தைப் பிராயத்தில் அதனிடம் நிலா மாதிரியான குளிர்ச்சி இருக்கிறது. அப்புறம் கந்தர்வன் என்ற உல்லாஸ ஜீவியான, நல்ல ஸுந்தரமான தேவதையிடம் இருக்கிற சிறுமிக்கு லாவண்யம் விசேஷமாக இருக்கிறது. பிறகு அக்னியின் அதிகார காலம் உண்டான போது காமாக்னியை ஏற்படுத்தும் சக்தி உண்டாகிறது. மூன்று தேவதைகளுடைய அதிகாரத்துக்கு இப்படி லௌகிகமாக அர்த்தம் பண்ணுவதுண்டு. இது இருக்கட்டும்.
சீர்திருத்தக்காரர்கள் சான்று காட்டும் வேத மந்திரங்களின் அர்த்தம் என்ன? வரன் எனப்படும் கல்யாணப்பிள்ளை வதூ எனப்படும் கல்யாணப் பெண்ணைப் பார்த்து சொல்லும் இந்த வேத வாக்கியங்களுக்கு அர்த்தம் என்ன என்றால், “முதலில் ஸோமன் உன்னை அடைந்தான்; இரண்டாவதாக கந்தர்வன் அடைந்தான்; மூன்றாவதாக அக்னி உனக்கு அதிபதி ஆனான். மநுஷ்ய வர்க்கத்தைச் சேர்ந்த நான் நான்காமவனாக உன்னை ஆளுவதற்கு வந்திருக்கிறேன். உன்னை ஸோமன் கந்தர்வனிடம் கொடுத்தான்; கந்தர்வன் அக்னியிடம் கொடுத்தான்; அக்னி என்னிடம் இப்போது கொடுத்திருக்கிறான்” என்று அர்த்தம்.
விவாஹத்தின் போதே சொல்லப்படுகிற மந்திரத்தில் இப்படி வருவதால் கல்யாணப் பெண்ணானவள் ரிதுமதியாகி அக்னியின் ஆதினத்தில் மூன்று வருஷம் இருந்த பிறகுதான் அவளை ஒருத்தன் கல்யாணம் பண்ணிக் கொள்கிறான் என்றுதானே அர்த்தம் ஆகிறது?
இதைச் சொல்லித்தான் சீர்திருத்தக்காரர்கள், “நாங்கள் ஒன்றும் சாஸ்திர விரோதமான reform (சீர்திருத்தம்) கொண்டு வரவில்லை. ஆதியிலிருந்த சாஸ்திரத்துக்கு விரோதமாகத் துருக்க ராஜ்யத்தில் ஏற்பட்ட வழக்கத்தை மாற்றிப் பழையபடி சாஸ்திரோக்தமாகப் பண்ண வேண்டும் என்றுதான் சொல்கிறோம். வேத வாக்கியத்தைவிட பெரிய பிரமாணம் இருப்பதாக எந்த ஸநாதனியும் சொல்ல முடியாதே! அதைத்தான் நாங்கள் ‘அதாரிடி’யாகக் காட்டுகிறோம் என்று சொன்னார்கள்.
இதோடு மநுஸ்மிருதியிலிருந்து இவர்கள் ஒன்றை மேற்கோள் காட்டினார்கள்.
த்ரீணி வர்ஷாண்யுதீக்ஷேத குமாரீ ரிதுமதீ ஸதீ |
ஊர்த்வம் து காலாத் ஏதஸ்மாத் விந்தேத ஸத்ருசம் பதிம்||
இதற்கு அர்த்தம், “வயசுக்கு வந்த பெண் அதற்கப்புறம் மூன்று வருஷம் வரன் தேடி வருகிறானா என்று காத்திருந்து பார்க்கவேண்டும். வராவிட்டால் அதன்பின் அவளே பதியைத் தேடிக் கொள்ளலாம்” என்பது. இங்கே post-puberty marriage (ரிதுமதி ஆனபின்பே விவாஹம்) என்றுதானே தெரிகிறது? அது மட்டுமில்லை. “பெரியவர்கள் பார்த்துத்தான் பண்ணி வைக்க வேண்டும் என்றுகூட இல்லாமல் ஒரு பெண் தானே ஸ்வயேச்சையாக புருஷனைத் தேடிக்கொள்கிறதை அநுமதிக்கிற அளவுக்கு அவ்வளவு ‘மாடர்னாக’ மநுதர்மம் இருக்கிறது. நடுவாந்திரத்தில் வந்த வைதிகக் குடுக்கைகளும், மடிஸஞ்சிகளுந்தான் எல்லாவற்றையும் மாற்றிக் காட்டுமிராண்டித்தனமாகச் செய்துவிட்டார்கள்” என்று சீர்திருத்தக்காரர்கள் சொன்னார்கள்.
“வேத மந்திரங்கள், தர்ம சாஸ்திர ச்லோகம் இவற்றின் அர்த்தத்தைப் பார்த்தால் அவர்கள் சொல்வது சரிதானே? இதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள், ஸ்வாமிகளே!” என்று கேட்டால், பதில் சொல்கிறேன்.
*ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர:|
த்ருதியோ அக்னிஷ்டே பதி: துரியஸ்தே மநுஷ்யஜா:||
ஸோமோ ததத் கந்தர்வாய கந்தர்வோ ததத் அக்னயே|
ரயிம் ச புத்ராம் சாதாத் அக்னிர் மஹ்யம் அதோ இமாம்||
[ரிக் X.85.40-41]