செலவில் சாஸ்திரோக்தம் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

வயசு விஷயத்தில் சாஸ்திரோக்தமாகப் பண்ணுவதற்கு முன்னால் பண விஷயத்தில் சாஸ்திரோக்தமாகப் பண்ணுவதற்காவது இப்போதே ஆரம்பித்து விடவேண்டும். முன்னேயே சொன்னாற் போல் சாஸ்திரப்படி விவாஹம் என்பது பணத்தைப் பற்றிய விஷயமில்லை.

வேறொன்றும் சாஸ்திரோக்தமாகப் பண்ண நமக்கு மனஸோ, தைரியமோ இல்லாவிட்டாலும் கலியாணத்தை economic problem -ஆகப் பண்ணாமல் இது ஒன்றையாவது சாஸ்திரப்படி வெகு சிக்கனமாக நடத்தப் பார்க்கலாம்.

விவாஹம் என்பது ஸந்தியாவந்தனம் மாதிரியான செலவில்லாத ஒரு வைதிக கர்மாதான். இதில் நூதன தம்பதிக்கு [புது மணமக்களுக்கு] புது வஸ்திரம் – நூலே போதும் – தங்கத்தில் லேசாக திருமாங்கலியம், ரொம்பவும் நெருங்கின பந்துக்களை மட்டும் அழைத்துச் சாப்பாடு போடுவது, முஹூர்த்த சமயத்தில் ஒரு மங்கள வாத்திய சப்தம் கேட்கப் பண்ணி அதற்காக ஏதோ கொடுப்பது, வாத்தியார் தக்ஷிணை ஆகியவற்றை மட்டுமே செய்தால் போதும். இது பூர்ணமாக சாஸ்திர சம்மதமானதுதான். இப்படிப் பண்ண ஒரு குமாஸ்தாவுக்கும் முடியாமல் போகாது.

பணம் கொழித்தவர்களுங்கூட தடபுடல் பண்ணாமல் இப்படிச் சிக்கனமாகவே பண்ணவேண்டும். ஏனென்றால் அவர்கள் பண்ணுகிற டாம்பிகம் மற்றவர்களுக்கு ஒரு கெட்ட precedent [முன்மாதிரி] ஆகிவிடுகிறது! ஆகையால் கச்சேரி, ஃபீஸ்ட் என்று தாங்கள் செலவிடக் கூடிய இந்தப் பணத்தைக் கொண்டு வசதியில்லாத ஒரு ஏழைப் பெண்ணுக்கு கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும். இப்படிப் பண்ணினால் தண்டச் செலவாகப் போகக்கூடியதை தர்மக் கரென்ஸியாக மாற்றிக் கொண்டதாகும். ஒவ்வொரு பணக்காரரும் தம் பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணுகிறபோதே அதில் செலவைக் கட்டுப்படுத்தி இன்னொரு ஏழைப் பெண் கண்ணைக் கசக்காமல் வழி திறந்து விடலாம். ‘மாஸ்’ உபநயனம் மாதிரியே பல பேருக்கு ஒரு பொது இடத்தில் பொதுச் செலவில் கல்யாணங்கள் நடத்த ஏற்பாடு செய்யலாம். இதனால் அவரவருக்கும் செலவு நிரம்பக் குறையும்.

இப்போதெல்லாம் கல்யாண மண்டபங்களின் வாடகையே பாதிச் செலவை விழுங்கி விடுகிறது என்கிறார்கள். எத்தனை சின்ன கல்யாணமானாலும் இக்கால பிளாட் குடித்தனத்தில் வீட்டிலேயே பண்ண முடியாதுதான். அதனால் தர்மிஷ்டர்கள் ஒன்று சேர்ந்து வசதியில்லாதவர்களுக்காக அங்கங்கே சின்ன சின்ன கல்யாண மண்டபங்கள் கட்டித்தர வேண்டும்.

கல்யாணம் என்றாலே வெட்கப்பட்டுக்கொண்டு ஓடின பெண்கள், அப்புறம் [ கல்யாணம்] ஆகுமா ஆகுமா என்று வாய்விட்டுக் கதறுகிற பரிதாப நிலை ஏற்பட்டு, இப்போது நிலைமை முற்றி கல்யாணமே இல்லாமல் உத்தியோக புருஷியாக ஸ்வயேச்சையாக இருக்கலாமென்று ஏற்பட்டிருக்கிறது. இதனால் நம் பண்பாட்டின் ஜீவநாடியான ஸ்திரீதர்மம் வீணாகி வருகிறது. நடக்கக் கூடாததெல்லாம் ஒவ்வோரிடத்தில் நடந்து விடுகிறது.

இதிலே வயிற்றெரிச்சல் என்னவென்றால், இந்தத் தப்புக்களைத் திருத்தல் வேண்டும் என்ற வேகம் யாருக்கும் வராதது மட்டுமில்லை; ‘ஸைகாலஜி’, அது இது என்று சொல்லிக் கொண்டு இந்தத் தப்புக்களையே விஸ்தாரம் பண்ணி, அவற்றுக்கு ஸமாதானமும் சொல்லி, கதைகள் எழுதி, ஸினிமாக்கள் எடுத்து, இதனாலேயே இதை நன்றாக அபிவிருத்தியும் பண்ணி வருகிறார்கள்! கேட்டால் (கேட்பதற்கே ஆளில்லை!) ‘எழுத்து ஸ்வதந்திரம், கல்பனை ஸ்வதந்திரம், கலா ஸ்வதந்திரம்’ என்பார்கள். சாஸ்திரத்தைத் தவிர எல்லாவற்றுக்கும் குடியரசு யுகத்தில் ஸ்வதந்திரம் ஏற்பட்டிருக்கிறது!

விவாஹம் சாஸ்திரப்படிப் பொருளாதார விஷயமில்லை என்பதில் ஆரம்பித்தேன்.

‘எல்லாம் ஸரி! ஆனால் சாஸ்திரத்தில் நாலு நாள் கல்யாணம் சொல்லியிருக்கிறதே! நாலு நாள் விருந்துச் சாப்பாடு, சத்திர வாடகை என்றால் செலவாகுமே!’ என்கலாம்.

நாலு நாள் கல்யாணத்தைப் பற்றிச் சொல்கிறேன்: சாஸ்திரத்தில் தாரித்திரியம் உண்டாக்குவதற்காக கர்மாநுஷ்டானங்கள் சொல்லப்படவில்லை. விவாஹம் பண்ணுகிறது ஒரு நாள்தான். அப்புறம் மூன்று நாள் மாப்பிள்ளை தன் சொந்த வீட்டில் பிரம்மசரிய தீக்ஷையோடு இருக்கவேண்டும். அந்தக் காலத்தில் மேளம் வேண்டாம். நலுங்கு வேண்டாம். மாற்ற விரும்புகிறவர்கள் இப்படி மாற்றலாம். இதுதான் வாஸ்தவமான சீர்திருத்தம் (reform) பிள்ளையகத்துக்காரர் இதைச் செய்யலாம். “ஒருநாள் கல்யாணம் உங்கள் அகத்தில் செய்வேன். பாக்கி மூன்று நாள் எங்கள் அகத்தில் செலவில்லாமல் பண்ணுவேன்” என்று சொல்லிவிடலாம். கல்யாணம் ஆன மறுநாள் கிருஹஸ்தன் ஒளபாஸனாக்னியைத் தன் வீட்டிற்குக் கொண்டு வர வேண்டும். அப்படி ஒளபாஸன குண்டத்தை எடுத்துக் கொண்டு வரும் போதும், வண்டியில் வைக்கும் போதும், நுகத்தடியில் மாடுகளைப் பூட்டும்போதும், வழியில் வைக்கும் போதும், மறுபடியும் வண்டியில் வைக்கும்போதும் சொல்ல வேண்டிய மந்திரங்கள் இருக்கின்றன. இப்பொழுது மந்திரோக்தமாகவே மோட்டாரிலோ, ரயிலிலிலோ வைத்துக் கொண்டு வரலாம். அதனால் ஒரு தோஷமும் இல்லை. அந்த நாளில் பக்கத்து ஊர்களிலேயே சம்பந்தம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அதனால் ஒளபாஸன குண்டத்தை கொண்டு போவது ஸெளகரியமாக இருந்தது. அல்லது நாலு நாள் கலியாணத்தை இன்னொரு விதம் பண்ணலாம். இப்பொழுது கலியாணம் நடத்துகிற இடத்திலேயே பிள்ளையகம் என்று ஒன்று வைத்துக் கொள்கிறோமே, அங்கேயோ, வாடகை அதிகமானால் யாராவது உறவினர் வீட்டிலோ மூன்று நாளும் பண்ணவேண்டியதைப் பண்ணலாம். யாரையும் சாப்பிடச் சொல்லவேண்டாம். ஸம்பந்திக்குக்கூடச் சாப்பாடு போட வேண்டாம். உபாத்தியாயருக்கு மட்டும் ஸம்பாவனை பண்ணினால் போதும். ஒரு நாளில் எல்லாவற்றையும் முடித்துவிடுவது சாஸ்திர சம்மதம் இல்லை.

விவாஹத்துக்கு ஸம்வத்ஸர தீக்ஷை, அதாவது விவாஹமாகி ஒரு வருஷம் பிரம்மசரிய நியமம்; பிறகே சாந்தி கல்யாணம் – என்கிற நிலைமை பிற்பாடு மாறி, நாலு நாலாவது இப்படி நியமத்தோடு இருப்பதாக ஏற்பட்டது. கழுதை கட்டெறும்பாகத் தேய்ந்து அப்புறம் கட்டெறும்பும் இல்லை என்று இப்போது நடப்பதுபோல் ஒரே நாளோடு தீர்த்து விடக்கூடாது. மூன்று நாள் ஒளபாஸனம் நிச்சயம் செய்ய வேண்டும். தெலுங்கர்கள் கல்யாணத்தில் வதூ-வரர்கள் [மணமக்கள்] வெள்ளை நூல் வஸ்திரத்தை மஞ்சளில் நனைத்துக் கட்டிக் கொள்ளுகிறார்கள். அது சிக்கனமாக இருக்கிறது. எத்தனை தனிகரானாலும் அதைத்தான் கட்டிக் கொள்ள வேண்டுமென்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். உத்தர தேசத்திலும் ஸாதாரணமாக ஸாமான்ய வஸ்திரங்களைத்தான் பெண்கள் கட்டிக் கொள்ளுகிறார்கள். இங்கே நாமும் அப்படிச் செய்ய ஆரம்பிக்கலாம்.

பிரவேச ஹோமம் என்று விவாஹ காலத்தில் ஒன்று செய்வதுண்டு. இது வரன் தன் வீட்டில் பிரவேசிப்பதற்குப் பண்ணுவது. விவாஹாக்கினியை எடுத்துக் கொண்டுபோய் ஒளபாஸன ஹோமத்தைத் தன்னுடைய வீட்டில் அவன் பண்ண வேண்டும். அங்கே பண்ணுவதற்குத்தான் ஒளபாஸனம் என்று பெயர். ஸெளகர்யத்தை உத்தேசித்தும் சாஸ்திர சம்மதமாகவும் நான் முன்னே சொன்னபடி பிள்ளையகத்தார் வந்து தங்கும் ஜாகையிலே செய்யலாம். கோவிலுக்குப் போய் ஒரு-நாள்-கல்யாணம் பண்ணிவிட்டு வந்து விடுவது என்பது தப்பான காரியம். பார்ட்டி, ரேஸ் என்று செலவழிக்கிற பணக்காரர்களும் நாலு நாள் ஒரு சாஸ்திரோக்த சடங்கு செய்யப் பிடிக்காததாலே இப்போதெல்லாம் கோயிலில் போய் தாலிகட்டி ஒரு வேளையோடு முடிக்கிறார்கள். பணக்காரர்கள் அப்படிச் செய்ய ஆரம்பித்தால் ஏழைகளும் பின்பற்றிக் கெட்டுப்போவார்கள். நான் சொல்வதை அநுஸரித்தால் நாலு நாள் பண்ணுவதில் செலவு இல்லை.

பெண் ரிதுமதியான பின் விவாஹம், அதுவும் ஒரு நாள் கலியாணம், மறுநாளே அவளை [புக்கத்துக்கு] அழைத்துப் போவது என்பதில் ஏற்பட்டிருக்கிற இன்னொரு விபரீதந்தான் விவாஹத்தன்றே சாந்தி கல்யாணம் பண்ணுவது.

விவாஹமானவன் திரிராத்திர தீக்ஷையோடு இருக்க வேண்டுமென்பது அத்யாவசியம். அதாவது மூன்று நாட்களும் பூர்ண பிரம்மசரிய நியமத்தை அநுஷ்டிக்க வேண்டும். பிரம்மசரியம் எட்டு விதம். எப்போதுமே பிரம்மசரியம் இருக்க முடியாதவனும் சிற்சில தினங்களில் அந்த நியமத்துடன் இருக்கும்படியாக இந்த எட்டு விதிக்கப்பட்டிருக்கின்றன. அதமபக்ஷமாக, கல்யாணமான முதல் மூன்று தினங்கள் இப்படி இருக்க வேண்டும். இதுவும் போய், அன்றே நிஷேகம் என்பது மஹாதோஷம்.

மறுபடி மறுபடி சம்பந்திகளைக் கூப்பிடுவது, சாப்பாடுக்குச் செலவழிப்பது, மேளத்துக்குச் செலவழிப்பது என்றில்லாமல் ஒன்றாக பண்ணிவிடலாமே என்று இப்படிப் பட்ட தோஷத்தைச் செய்கிறார்கள். சாஸ்திரத்தில் இல்லாத தடபுடல்களைக் கொண்டு வந்து விட்டு, அப்புறம் இவைகளைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகப் பெண்ணின் கல்யாணம் வரையில் [அவளுடைய ஸஹோதரனான] பிள்ளையின் பூணூலை ஒத்திப் போடுவது, கல்யாணத்தன்றே ஸாந்தி கல்யாணத்தையும் [மந்திரோக்தமாகக் கூட இல்லாமல்] பண்ணிவிடுவது என்றெல்லாம் முறை கெட்டுச் செய்து வருகிறோம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is எடுத்துச் சொல்லிப் பயணுண்டா?
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  உற்றமும் சுற்றமும் செய்யவேண்டியது
Next