ஸ்திரீகளின் ஒரே வைதிகச் சொத்து : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

ஒளபாஸனம் எல்லா ஜாதியாருக்கும் உண்டு என்றேன். அதே போல் ஒளபாஸனம் ஆண்-பெண் இருவருக்கும், பதி-பத்தினி இரண்டு பேருக்கும் சேர்ந்த பொதுக் காரியமாய் இருக்கிறது.

பதி கிருஹத்திலிருக்கும் போது அவனோடு கூடச் சேர்ந்து பத்தினியும் ஒளபாஸனம் பண்ணுகிறாள். அவன் ஊரிலில்லா விட்டாலும் ஒளபாஸனாக்னியில் ஹோமம் பண்ண வேண்டிய அக்ஷதைகளை அதில் பத்தினியே போட வேண்டும். அந்த ரைட் அவளுக்கு வேதத்திலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது.

பிற்பாடு வந்த பௌராணிகமான விரதங்கள், பூஜைகள் இவைகளைச் சேர்க்காமல் சுத்த வைதிகமாகப் பார்த்தால், ஒளபாஸனத்தைத் தவிர ஸ்திரீக்குச் சொந்தமாக எந்த வேத கர்மாவும் இல்லை. புருஷன் பண்ணுகிறதிலெல்லாம் automatic -ஆக இவளுக்கு share கிடைத்து விடுகிறது. ஆகவே, ‘இவள் கிருஹரக்ஷணை தவிர தனியாக எந்த தர்மமும், கர்மமும் பண்ண வேண்டாம். பண்ணினாலும் ஒட்டாது என்று தான் வைதிகமான தர்ம சாஸ்திரத்தில் இருக்கிறது. ஒரே exception [விதி விலக்கு] ஒளபாஸனம்.

ஆகையால் ‘ரைட்’ ‘ரைட்’ என்று கேட்கிற ஸ்திரீகளை இந்த விஷயத்தில் கிளப்பிவிட்டாவது வீட்டுக்கு வீடு ஒளபாஸனாக்னி ஜ்வலிக்கும்படிச் செய்யலாமோ என்று எனக்கு ஆசை. ஒளபாஸனம் செய்யாத புருஷனிடம் பத்தினியானவள், “உங்களுக்குக் கொஞ்சமாவது வேத ஸம்பந்தம் இருக்கும்படியாக, (நீங்கள் வைதிகமான பாக்கியெல்லாவற்றையும் விட்டுவிட்டாலும்) வேத மந்திரமான காயத்ரீயாவது பண்ணுகிறீர்கள். இப்போது பண்ணாவிட்டாலும், மந்திரமே மறந்து போயிருந்தாலும்கூட, பின்னாலாவது என்றைக்காவது பச்சாதாபம் ஏற்பட்டால் காயத்ரீ பண்ணுவதற்கு அநுகூலமாக உங்களுக்கு உபநயன ஸம்ஸ்காரமாவது ஆகியிருக்கிறது. எனக்கோ உபநயனமும் இல்லை, காயத்ரீயும் இல்லை. நம் மதத்துக்கே, லோகத்துக்கே, ஸ்ருஷ்டிக்கே ஆதாரமாக இருக்கப்பட்ட வேதத்தில் ஸ்திரீயான எனக்கு ஏதாவது ‘ரைட்’ இருக்குமானால் அது இந்த ஒளபாஸனம்தான். நீங்கள் இதுவும் செய்யாவிட்டால் எனக்கு வேத ஸம்பந்தம் அடியோடு போய் விடுகிறதல்லவா?” என்று சண்டை போட்டு அவனை ஒளபாஸனம் ப‌ண்ண வைக்க வேண்டும். இந்த மஹா பெரிய சொத்துரிமைக்குத்தான் பெண்கள் சண்டை போட வேண்டும்.

ஸ்திரீகளுக்காவது ஒளபாஸனம், அக்னி ஹோத்ரம் (ஒளபாஸனத்தைப் போலவே நித்யம் இரண்டு வேளை செய்கிற அக்னி ஹோத்ரம் என்று ஒன்று உண்டு. இதைப் பற்றி அப்புறம் சொல்கிறேன்) முதலிய வைதிக சொத்துக்களில் சிரத்தையிருக்க வேண்டும் என்பதே நான் சொல்வதன் தாத்பர்யம். ஸ்திரீகள் யோசித்துப் பார்க்க‌ வேண்டும், “அகத்தில் எத்தனையோ அக்னி இருக்கிறதே! காப்பி போட, சமைக்க, ஸ்நானத்துக்கு வெந்நீர் வைக்க இதற்கெல்லாம் அக்னியிருக்கிறதே! எதை சாட்சியாக வைத்துக் கொண்டு விவாஹம் பண்ணிக் கொண்டோமோ அது ஒளபாஸனமில்லாமல் அணைந்துபோக விடலாமா?” என்று.

அக்னி எப்போதும் அணையாமலிருக்க உமி போட்டு வரவேண்டும். இதற்காக நெல்லை வீட்டில் குத்தினால் அதில் பல பிரயோஜனங்கள் ஏற்படுகின்றன. உமி கிடைப்பதோடு, நாம் சாப்பிட ஆரோக்யமுள்ள கைக்குத்தல் அரிசி கிடைப்பது; நெல்லைக் குத்துகிற ஏழைக்கு ஏதோ கொஞ்சம் ஜீவனோபாயம் கிடைப்பது, என்றிப்படி. ஹோமம் செய்ய வேண்டிய அக்ஷ‌தை மட்டும் பத்தினியே குத்தியதாக இருக்க வேண்டும். இது மந்திர பூர்வமான காரியம்.

ஒளபாஸனத்துக்கு அதிகச் செலவு இல்லை. அதைச் செய்ய ரொம்ப நேரமும் பிடிக்காது. ஆகவே மனஸ் மட்டும் இருந்து விட்டால் எல்லாரும் செய்யலாம். இதிலே உமிக்காகப் பிறருக்குக் கூலி கொடுத்துச் குத்தச் செய்வதன் வழியாகப் பரோபகாரம்; மெஷின் உஷ்ணம் சேராமல் போஜனத்துக்கு ஆரோக்யமான வஸ்து என்கிறவையும், கைக்குத்தலரிசி சேர்ப்பதில் காந்தீயமும்கூட வந்து விடுகிறது.

ஒளபாஸன அக்னியைக் காப்பாற்றி வந்தால் பூதப் பிரேத பிசாசாதிகளால் வரும் கஷ்டங்கள், வியாதிகள் கிட்டவே வராது. இப்பொழுது எவ்வளவோ பிராம்மணர்கள் வீட்டில் கூட வேப்பிலை போடுவது, பிரம்பால் அடிப்பது, மசூதிக்குப் போய் ஊதுவது, என்னிடம் வந்து பிரார்த்திப்பது என்றெல்லாம் செய்யும்படியாகியிருப்பது ஒளபாஸன அக்னி இல்லாததன் கோளாறுதான். புருஷப் பிரஜைகளும் ஸ்திரீப்ரஜைகளும் எந்த விகிதத்தில் பிறக்க வேண்டுமோ அப்படிப் பிறப்பதற்கும் ஒளபாஸனம் ஸஹாயம் பண்ணும் என்று முன்னமே சொல்லியிருக்கிறேன். ஒளபாஸன பஸ்மா [சாம்பல்] இட்டுக்கொள்வது பெரிய ரக்ஷை.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is புது பிராம்மண ஜாதி உண்டாக்கலாமா?
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  அக்னியின் சிறப்பு
Next