வேதங்கள் நாலு, வேதாங்கங்கள் ஆறு, உபாங்கங்களான மீமாம்ஸை-நியாயம்-புராணம்-தர்மசாஸ்திரம் என்கிற நாலு ஆக மொத்தம் இந்தப் பதினாலுமே ஹிந்து மதம் என்று சொல்லப்படுகிற ஸநாதன தர்மமான வேத ஸமயத்துக்கு ஆதாரமாக இருக்கப்பட்டவை.
தர்மத்தைச் சொல்லி, ஆத்மாவை சுத்தப்படுத்துவதால் இவற்றை ‘தர்ம ஸ்தானங்கள்’ என்பார்கள். அதோடு இவை அறிவையும் மனஸையும் வளர்ப்பதால் ‘வித்யா ஸ்தானங்கள்’ என்றும் பெயர் பெற்றிருக்கின்றன.
ஆத்மாவை நேராக சுத்தப்படுத்தப் பிரயோஜனப் படாமல் உடம்பை ரக்ஷித்து, அறிவைத் தந்து, உணர்ச்சிகளை உண்டாக்கி மனஸுக்கு இன்பம் தருவதாக உள்ள வேறு நாலு சாஸ்திரங்களும் உண்டு. அவை தர்ம ஸ்தானமாக இல்லாமல் வித்யா ஸ்தானமாக மட்டும் இருக்கிறவை. இவற்றைச் சேர்த்தால் வித்யா ஸ்தானங்கள் பதினெட்டு.
இப்படி வித்யா ஸ்தானமாக மட்டும் உள்ள நாலு ஆயுர் வேதம், தநுர்வேதம், காந்தர்வ வேதம், அர்த்த சாஸ்திரம் என்பன. அவற்றை ‘உபவேதங்கள்’ என்பார்கள்*.
இவற்றில் ஆயுர்வேதம் என்பது வைத்ய சாஸ்திரம் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். அது உடம்பைப் பற்றியும், வியாதிகளைப் பற்றியும், வியாதிகளின் பரிஹாரங்களைப் பற்றியும் அறிவைக் கொடுக்கிற சாஸ்திரம். நேராக ஆத்ம ஸம்பந்தமுள்ளதென்று சொல்ல முடியாதது.
தநுர்வேதம் க்ஷத்ரியர்களுக்கு யுத்த அப்பியாஸத்தைத் தருவது. இங்கே தநுஸ் (வில்) என்பது எல்லா ஆயுதங்களையும் குறிக்கும். தேச ரக்ஷணைக்காக என்னென்ன ஆயுதங்களை எப்படிப் பிரயோகம் பண்ண வேண்டும் என்ற அறிவைத் தருகிற இதுவும் நேராக ஆத்ம சுத்திக்கு ஏற்பட்டதில்லைதான்.
காந்தர்வ வேதம் என்பது ஸங்கீதம், நடனம் முதலான கலைகள். இது கலையறிவைத் தருவது. மனஸின் உணர்ச்சிகளை ஸந்தோஷப்படுத்துவது. ‘பொழுது போக்கு’ என்ற அளவில் எல்லா மநுஷ்யர்களுக்கும் இது வேண்டியிருக்கிறது. வித்யா ஸ்தானமாக மட்டும் இருக்கிற நாலில் இது ஒன்றுதான் நாதோபாஸனையாகவும், தெய்வபக்தியோடும் அநுஷ்டிக்கப்பட்டால் நேராக ஆத்ம ஸம்பந்தமுள்ளதாகிறது.
அர்த்த சாஸ்திரம் என்பது பொருளாதார சாஸ்திரம் என்று பொருள்படுவது. முக்கியமாக இது ஆட்சிமுறையை, statecraft -ஐச் சொல்வது. இதிலே வரும் உபாங்கங்களான ஸாம, தான, பேத, தண்டத்தில் பேதமும் (பிரித்தாள்வதும்) தண்டமும் (தண்டனை தருவதும்) கொடுமையாக தோன்றினாலும் நடைமுறை வாழ்க்கையில் தவிர்க்க முடியாததால் ராஜாங்கத்துக்கு மட்டும் அநுமதிக்கப் பட்டுள்ளன.
இந்த நாலுமே spiritual life -ஐ (ஆத்மிக வாழ்க்கையை) விட practical living -க்கு (நடைமுறையில் ஜீவனம் நடத்துவதற்கு)த் தான் அவசியமாகின்றன. வாழ்க்கையில் நோய் வருகிறது. எனவே ஆயுர்வேதம் வேண்டியிருக்கிறது. எதிரி ராஜ்யங்கள் இருப்பதால் தநுர்வேதம் அவசியமாகிறது. எப்போதும் காரியம், அல்லது தூக்கம், சோம்பல் என்றில்லாமல் பொழுது போக்குகள் தேவையிருப்பதால் காந்தர்வ வேதம் இருக்கிறது. ஒரு நாடு என்றால் பிரஜைகளின் ஸமுதாய வாழ்க்கை ஒழுங்காக நடந்தால்தானே முடியும்? அப்படி நடத்தப்பண்ண அர்த்த சாஸ்திரம் தேவைப்படுகிறது. இவை practical necessity -கள் [நடைமுறைத் தேவைகள்.]
அதனால் இவற்றின் பலனும் பிரத்யக்ஷம். மருந்து சாப்பிட்டால் உடனே வியாதி போவது கண்கூடு. ஆயுதத்தைப் பிரயோகித்தால் அது சத்ருவைத் தாக்குவதும் பிரத்யக்ஷம். பாட்டுக் கச்சேரி, டான்ஸ் அநுபவிக்கும்போதே ஆனந்தம் தருகின்றன. அர்த்தசாஸ்திரப்படி நடக்கிற ராஜ்ய விஷயங்களும் பிரத்யக்ஷமாகப் பலன் தந்து, பேப்பரில் அன்றன்றும் அடிபடுவதாகும்.
ஆத்மாவுக்கே ஏற்பட்ட பதினாலு தர்ம ஸ்தானங்கள் இப்படிப் பிரத்யக்ஷமான பலனுள்ளவை அல்ல. அவற்றுக்கு ‘அத்ருஷ்ட பலன்’ என்பார்கள். ‘த்ருஷ்டம்’ என்றால் திருஷ்டிக்கு அகப்படுவது. அதாவது பிரத்யக்ஷமானது. அப்படியில்லாதது அத்ருஷ்டம். ஆத்மா பரிசுத்தி அடைவதை நேரில் பார்த்துக் கொள்ள முடியாது. பாப புண்ணியங்கள் ஒருவனை ஸ்வர்க்க நரகங்களுக்கு அழைத்துப் போவதை உடனே பார்த்துக் கொள்ள முடியாது. நாம் பார்க்கிறபோதும் பிறருக்கும் காட்டி ஒப்புக்கொள்ளும்படிப் பண்ண முடியாது! யாகம் செய்தால் ப்ரீதி அடைந்து தேவர்கள் மழை பெய்வித்தாலும் மழைதான் தெரியுமே தவிர, தேவர்கள் தெரிய மாட்டார்கள்! பரம சுத்தர்களுக்குத் தெரிந்தாலும் மற்றவர்களுக்குக் காட்ட முடியாது. அதனால், ‘யாகம் பாட்டுக்குச் செய்தார்கள். மழை பாட்டுக்குப் பெய்கிறது. அதன் பலன்தான் இது என்று எப்படிச் சொல்ல முடியும்? இது காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதையாய் இருக்கலாம்’ என்று கூட ஆக்ஷேபிக்க இடமிருக்கிறது. இப்படியிருந்தாலும் வாஸ்தவத்தில் தர்ம ஸ்தானமான பதினாலுதான் ஆத்மாவுக்கு, மெய்யான சாச்வதமான ச்ரேயஸுக்கு முக்கியமானவை. அவற்றுக்கு வழிகோலவேதான் மற்ற நாலு வித்யா ஸ்தானங்களும்.
“சரீரத்துக்குள்ளே ஆத்மா மாட்டிக் கொண்டிருக்கிறதே! இந்த சரீரம் இருக்கும்போதேதானே பாபத்தைப் போக்கும் புண்ய கர்மாக்களைப் பண்ணினால் ஆத்மாவை அறியலாம்?” என்ற அடிப்படையில்தான் சரீர ரக்ஷணத்துக்கான ஆயுர்வேதம் ஏற்பட்டிருக்கிறது. தனி மநுஷ்யனுக்கு தேகம் ஆரோக்யமாயிருந்தால் ஆத்ம ஸாதனை பண்ண அநுகூலமாயிருக்கும் என்பது போல், ஒரு ஜன ஸமூஹத்துக்கு சத்ருக்களால் ஹிம்ஸை இல்லாவிட்டால்தானே அது தேசரீதியில் ஆத்மாபிவிருதிக்காக நிம்மதியாகப் பாடுபட முடியும்? — என்றே தநுர்வேதம் ஏற்பட்டிருக்கிறது. வெளியிலிருந்து மட்டுமின்றி உள்ளேயே இப்படிப்பட்ட குழப்பங்கள் ஏற்பட்டு ஒரு தேசத்தின் ஆத்மிக் அபிவிருத்திக்கான சூழ்நிலை கெட்டுப் போகக் கூடாதென்றே அர்த்த சாஸ்திரம் இருக்கிறது. மனுஷ்யனின் மன நெரிசலைப் போக்கி அவனுடைய கலா ரஸனையை வளர்த்து விடுவதும் ஆத்ம க்ஷேமத்துக்கு அவசியம் என்பதனால்தான் காந்தர்வ வேதம் இருக்கிறது.
இப்படி indirect ஆக (மறைமுகமாக) ஆத்மாவுக்கு ஸஹாயம் பண்ணுவதாலேயே இந்த நாலுக்கும் உபவேதங்கள் என்ற உயர்வான பெயர் இருக்கிறது. அர்த்த சாஸ்திரம் நீங்கலாக மற்ற மூன்றின் பெயரிலுமே வேதம் என்று வருகிறது. ஆயுர்வேதம் தநுர் வேதம், காந்தர்வ வேதம். நாலு வேதங்களுக்கு இந்த நாலும் உபவேதம் என்பார்கள்.
ஆகையால் இந்திரிய ஸெளக்கியம், கொலை முதலான தப்புத் தண்டாக்களில்கூட இழுத்து விட இந்த நாலில் இடமிருப்பதாகத் தோன்றினாலும், வாஸ்தவத்தில் நடைமுறை லோகத்தின் தேவைகளை அநுஸரித்தும், முடிவில் ஆத்மாவுக்கே உதவும்படியாகத்தான் இந்த நாலு சாஸ்திரங்களும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
இந்தப் பதினெட்டோடு இப்போதுள்ள அத்தனை ஸயன்ஸ்களிலும், ஆர்ட் [கலை] களிலும் ஒன்று பாக்கியில்லாமல் அத்தனைக்கும் நம்மிடம் பிராசீனமான சாஸ்திரங்கள் இருக்கின்றன. நம் ஆயுர்வேதம் ஒன்றிலேயே நவீனர்களின் physiology [உடற்கூறு இயல்] , Zoology [உயிரின இயல்], Botany [தாவர இயல்], Medical Science [மருத்துவ இயல்], Chemistry [ரஸாயனம்] இத்தனையும் வந்து விடுகின்றன. இப்படி அநேகம். இவற்றில் Surgery [ரண சிகித்ஸை], கணிதத்தில் ஸைபர் முதலான பல விஷயங்கள் இந்தியாவிலிருந்தே மற்ற எல்லாத் தேசங்களுக்கும் கிடைத்ததாக இப்போது ஸகல தேசத்தாரும் ஒப்புக் கொள்கிறார்கள்.
துருக்கர்கள் வந்து நம் தேச வாழ்வில் நிம்மதியைக் கெடுத்து, அந்நியர் ஆட்சி ஏற்பட்டபின் இப்படி ஸகல வித்யைகளிலும் (64 வித்யை என்று ஒரு கணக்கு) நாம் ஆராய்ச்சி பண்ணுவதற்கு ஊக்கமும் மான்யமும் போய் விட்டது. அதற்கு அப்புறம்தான் நாம் ஸயன்ஸில் பின் தங்கியவர்களாகி விட்டோம்.
அதற்கு முன் நாம் கண்டு பிடித்திருந்த அநேக விஷயங்கள் மற்றவர்களுக்குத் தெரியாது. ஆனால் நாம் கண்டு பிடிக்காத ஒன்றே ஒன்று அவர்களுக்குத் தெரிந்திருந்ததால் தான் நாம் தோற்றுப்போய் தினக்ரமேண ஆத்மிகம், ஸயன்ஸ் இரண்டிலும் கீழே போகும்படியாகி விட்டது. அந்த ஒன்று வெடிமருந்து என்பதுதான். பீரங்கிக்குப் பதில் சொல்ல முடியாமல்தான் முகலாய ஆட்சிக்கு ஆளானோம். அதிலிருந்து எல்லாம் இறங்குமுகமாயிற்று – பரமபத ஸோபான படத்தில் பாம்பு வாயில் விழுந்த மாதிரி!
இப்போது நம் சாஸ்திரங்களான பழைய மருத்துவம், சில்பம் முதலியவற்றையே அநுஸரித்தோமானால் நமது சீதோஷ்ணம், நாகரிகம் இவற்றுக்கு அநுஸரணையான இவற்றாலேயே நம்முடைய சாஸ்திரோக்த வாழ்க்கைக்கு திரும்புவதையும் ஸுலபமாக்கிக் கொள்ளலாம்.
* இந்நான்கு உபவேதங்கள் குறித்த உரைகளுக்கு “தெய்வத்தின் குரல்” மூன்றாம் பகுதி பார்க்க.