பிற தேச ஸமாசாரத்தையெல்லாம் ஒதுக்க வேண்டும் என்று நான் சொல்லவேயில்லை. அதில் நல்லதாக ஆத்மாபிவிருத்திக்கும், லோக க்ஷேமத்துக்கும் உதவுவதாக, நமது genius-கு (தேசபண்புக்கு) உகந்ததாக இருக்கிறவைகளை அங்கீகரித்துப் பயனடையத்தான் வேண்டும். ‘வஸுதைவ குடும்பகம்’ (லோகம் பூரா ஒரு குடும்பம்) , ஆசார்யாளே சொன்ன மாதிரி ‘ஸ்வதேசோ புவனத்ரயம்’ (மூவுலகும் நம் தாய் நாடு) , ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதுதான் நம் ஸித்தாந்தம். அதனால் அந்நியம் என்பதாலேயே எதையும் கழித்துக் கட்ட வேண்டாம். காளிதாஸன் [‘மாளவிகாக்னி மித்ர’த் தொடக்கத்தில்]
புராணமித்யேவ ந ஸாது ஸர்வம்
ந சாபி காவ்யம் நவமித்யவத்யம்|
ஸந்த: பரீக்ஷ்யான்யதரத் பஜந்தே
மூட: பர: ப்ரத்யயநேய புத்தி:||
என்கிறான். ‘நம்முடையது, பழையது என்பதற்காகவே ஒன்றை நல்லது என்று தீர்மானித்து விடக்கூடாது. பிறருடையது புதுசு என்பதற்காகவே ஒன்றைத் தள்ளியும் விடக் கூடாது. பரீட்சை பண்ணிப் பார்த்தே ஏற்க வேண்டியதை ஏற்று தள்ள வேண்டியதை தள்ளி விட வேண்டும். முதலிலேயே முடிவு கட்டி மனஸைக் குறுக்கிக் கொள்வது மூடனின் காரியம்’ என்று இதை விரித்துப் பொருள் கொள்ளலாம். அதனால்தான் விதேசமானது, நவீனமானது எதுவுமே நமக்குக் கூடாது என்று சொல்லிவிடவில்லை. ஆனால் இப்போது காளிதாஸன் சொன்னதற்கு நேர்மாறாக, ‘நம்முடையது பழசு என்பதாலேயே மட்டம், அது தள்ள வேண்டியது; மேல் நாட்டிலிருந்து வந்ததுதான் modern (புதிசு) என்பதாலேயே அதை அப்படியே யோசிக்காமல் சேர்த்துக் கொள்ள வேண்டும்’ என்றாயிருக்கிறது! இதுவும் தப்பு.
ஆகையால் அந்நியமும், நவீனமுங்கூட எங்காவது நமக்குக் கொஞ்சம் தேவையாயிருந்தாலும் பெரும்பாலும் நம்முடையதான பழைய விஷயங்கள்தான் விசேஷமாக, அதிகமாக அநுஸரிக்கத் தக்கன என்று சொல்ல வேண்டியதாகிறது. புதிதில் எவையெல்லாம் வேண்டும் என்று நாம் ஆலாப் பறக்கிறோமோ, அவைகள் வேண்டவே வேண்டாம் என்று அவற்றைக் கண்டுபிடித்த நாடுகளிலேயே பக்குவிகள் விட்டு விட்டு நம்முடைய யோகம், பஜனை, ஆத்ம விசாரம் முதலியவற்றுக்குக் கூட்டம் கூட்டமாகத் திரும்பிக் கொண்டிருப்பதை முக்யமாகக் கவனிக்க வேண்டும்.
நவீனம் என்று நாம் எதை நாடிப் போகிறோமோ அதிலே கரை கண்டவர்கள் பெரும்பாலும் அது பிரயோஜனமில்லை என்றே உணர்ந்து நம் வழிகளுக்கு வந்து கொண்டிருக்கிறார்களாதலால், நாம் நம்முடைய பழைய வழியைத் தான் ஆதாரமாக வைத்துக் கொண்டு, அதன்படி செய்ய வேண்டும் என்பது தெளிவு. இப்போது செய்கிற மாதிரி, மேல்நாட்டார் கழிசடை என்று ஒதுக்கித் தள்ளுகிறவற்றை நாம் கொண்டாடி எடுத்துக் கொள்வதற்காக நான் புது ஸயன்ஸ்களைப் படிக்கச் சொல்லவில்லை. நம் வழிக்குப் பாதகமில்லாமலே, அதற்கு அநுகூலமாகவே ஏதாவது அம்சங்களில் இந்த ஸயன்ஸ்களின் மூலம் பண்ணிக் கொள்ள முடியுமா என்று தெரிந்து கொள்வதற்கே இவற்றை தெரிந்து கொள்ளவேண்டும். இவை லோக க்ஷேமத்துக்குப் பிரயோஜனப்படுமா என்று தெரிந்து கொள்வதற்காகவே கற்றறிய வேண்டும். அல்லது இவற்றில் தப்பு இருந்தால் அதை எடுத்துச் சொல்லி நாம் திருத்துவதற்கும் இவற்றில் நமக்கு ஆழ்ந்த அறிவு இருந்தால்தானே முடியும்? அதற்காகவாவது, குமாரிலபட்டர் பௌத்த தத்வங்களை கண்டிப்பதற்கே பௌத்த வேஷம் போட்டு அதன் ரஹஸ்ய சாஸ்திரங்களை படித்த மாதிரி நாம் மாடர்ன் ஸயன்ஸைப் படிக்க வேண்டும். அதில் நல்லதாகவும் பல அம்சம் இல்லாமலில்லை.
“களவும் கற்று மற” என்றார்கள். முதலில் நம் ஸமயாசாரங்களால் நல்லொழுக்கங்களைப் பாறை மாதிரி உறுதிப்படுத்திக் கொண்டுவிட்டால், அப்புறம் எதுவும் நம்மைக் கெடுக்க முடியாது என்ற நிச்சயத்துடன் கெட்டதோ, நல்லதோ எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கு நல்லது கெட்டதுகளை எடுத்துச் சொல்லலாம். ஆகையால் knowledge -க்கு (அறிவை வளர்த்துக் கொள்வதற்கு) முன்னால் character (ஒழுக்கம்) அவசியம். இல்லாவிட்டால் அறிவு கெட்டதற்கு apply ஆகி, கெட்டதுகளை வளர்க்கும். முதலில் வரவேண்டிய இந்த ஒழுக்கம் மதாநுஷ்டானத்தால் தான் வரும்.
உபவேதங்கள், மற்ற வித்யைகள், விஞ்ஞானங்கள் யாவும் லௌகிகத்துக்கும் அறிவுக்கும் மட்டுமே பிரயோஜனமானாலும் இவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். Basic -ஆக [அடிப்படையாக] தெய்வபக்தியும், ஸமயாநுஷ்டானங்களும் இருந்துவிட்டால் அறிவுக்கும் மனோவளர்ச்சிக்கும் ஏற்பட்ட விஞ்ஞானங்களையும் கலைகளையும் தெரிந்து கொள்வதுகூட அந்த அறிவையும் மனஸையும் நன்றாக வளர்த்து சுத்தப்படுத்தவே உதவும். அப்புறம் இவற்றைத் தாண்டி ஆத்மாவிலேயே ஆணி அடித்த மாதிரி நிற்க, ஆரம்பத்தில் இவையே உபாயமாயிருக்கும்.