வேதமே ஸ்மிருதிகளுக்கு அடிப்படை : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

பெரிய ஆதாரம் மஹாகவியின் வாக்குத்தான். நம்முடைய மத ஸ்தாபகர்கள் யாவரும் – சங்கரர், ராமாநுஜர், மத்வர் எல்லாரும் – தர்ம சாஸ்திரங்கள் வேதத்தை அநுஸரிப்பவையே என்று எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இது நமக்குப் பெரிய ஆதாரம் என்று சொல்லமுடியாது. இந்த மதாசாரியர்களுக்கெல்லாம் கொள்கைப் பிடிமானம் உண்டு. ஸம்பிரதாயத்தை ரக்ஷிக்க வேண்டும் என்ற லக்ஷ்யம் உண்டு. அதனால் இவர்கள் மரபை மீறிப் பேசமாட்டார்கள். ஆனால் கவி விஷயம் இப்படியில்லை. அவனுக்கு ஒரு கொள்கையையும் நிலை நாட்டுகிற பிடிமானம், பிடிவாதம் இராது. கொள்கைச் சார்பில்லாமலே தனக்கு ஸத்யமாகப் படுவதையெல்லாம் சொல்லிக்கொண்டு போகிறவன் அவன்.

இப்படிப்பட்ட மஹாகவிகளில் முக்கியமான காளிதாஸன் ‘ரகுவம்ச’த்தில் ஓரிடத்தில் ஸ்மிருதிகளைப் பற்றிச் சொல்கிறான்.

ராமனுக்குத் தகப்பனார் தசரதர். தசரதருடைய தகப்பனார் அஜன். அஜனுடைய தகப்பனார் ரகு. அதனால்தான் ரகுராமன் என்ற பெயரே – கொள்ளுத்தாத்தாவின் பெயரே- ராமனுக்கு வந்தது. ‘தாசரதி’ என்று தகப்பனாரின் பெயரை இரண்டோர் இடங்களில்தான் சொல்லியிருக்கும். பொதுவாகத் தாத்தாவின் பெயரைத்தான் பேரனுக்கு வைப்பது. ஆனால் தாத்தா பேரான அஜன் என்பது ராமனுக்குக் கிடையாது. கொள்ளுத் தாத்தாவின் பேரேதான் இவருக்கு அதிகம். அவ்வளவு கீர்த்தியாக, பேரும் புகழுமாக ரகு வாழ்ந்து கொண்டிருந்தார். ராகவன் என்றாலும் ரகு குலத்தோன்றல் என்றே அர்த்தம்.

ரகுவின் தகப்பனாருக்கு திலீபன் என்று பெயர். திலீபனுக்கு வெகுநாள் பிள்ளையே இல்லாமல் இருந்தது. திலீபனுடைய குலகுரு வஸிஷ்டர். வஸிஷ்டரிடத்தில் திலீபன் போய், “ஸ்வாமி, எனக்குக் குழந்தையே இல்லை. என் வம்சம் விளங்க நீங்கள்தான் அநுக்கிரகம் செய்ய வேண்டும்” என்று பிரார்த்தனை செய்துகொண்டார்.

வஸிஷ்டர் வீட்டில் ஒரு பசு மாடு இருந்தது. அது காமதேனுவின் பெண். நந்தினி என்று பெயர். அந்த நந்தினியை திலீபனிடத்தில் கொடுத்து, “இதைக் குளிப்பாட்டி, மேய்த்து, மிகவும் சிரத்தையுடன் பூஜித்து வளர்த்துக் கொண்டிரு. உனக்குப் பிள்ளை பிறக்கும்” என்று வஸிஷ்டர் அநுக்கிரஹம் செய்தாராம்.

ராஜாவைப் பார்த்து இப்படி மாடு மேய்க்கச் சொன்னார் என்றால் அவன் எத்தனை விநயமாக இருந்திருக்கவேண்டும்?

அன்றைய தினத்திலிருந்து திலீப மஹாராஜாவும் ஒரு மாட்டுக்காரனைப் போலவே தினமும் அந்த நந்தினியைக் காட்டுக்கு ஓட்டிக்கொண்டு போவது, மேய்ப்பது, குளிப்பாட்டுவது, இப்படி மிகவும் பக்தி சிரத்தையுடன் ரக்ஷித்துக் கொண்டிருந்தாராம். காட்டுக்கு மாட்டை ஓட்டிக் கொண்டு மேய்க்கப் போகிறபோது, துஷ்ட ஜந்துக்களால் மாட்டுக்கு ஆபத்து வராமல் இருக்க ஒரு தனுசு, ஒரு பாணம் மாத்திரம் எடுத்துக் கொண்டு மாட்டின் பின்னாலேயே போவாராம். அதைச் சொரிந்து கொடுக்கிறது, அதை மேய்க்கிறது, அது நின்றால் இவரும் நிற்கிறது, அது படுத்துக்கொண்டால் இவரும் படுத்துக்கொள்வது, அது நடந்தால் இவரும் நடக்கிறது – இப்படி அதன் பின்னாலேயே இவர் போய்க் கொண்டிருந்தார். ஒரு நிழல் எப்படி இருக்குமோ – நாம் உட்கார்ந்தால் நிழலும் உட்காருகிறது, நின்றால் நிற்கிறது, ஓடினால் ஓடுகிறது – அப்படி,

சாயேவ தாம் பூபதிரந்வகச்சத்|

நிழல்போல் அந்த அரசர் நந்தினி என்ற பசுமாட்டை ரக்ஷித்து வந்தார் என்று காளிதாஸன் சொல்கிறான்.

இப்படி தினமும் வீட்டிலிருந்து திலீபன் மாட்டை மேய்க்க ஓட்டிக்கொண்டு போகிற காலத்தில் திலீபனுடைய மனைவி ஸுதக்ஷிணையும் கொஞ்ச தூரம் பின்னாடியே நடந்து போய் வழியனுப்பிவிட்டு அப்புறம் திரும்பி வருவது வழக்கம். வெகு நியமமாக வீட்டில் இருந்துகொண்டு பர்த்தாவை அனுப்பி வைப்பது, சாயந்திரம் காட்டிலிருந்து அவர் பசுமாட்டோடு எப்போது திரும்பி வருவார் என்று பார்த்துக் கொண்டிருப்பது – இப்படி ஸுதக்ஷிணையும் பதிக்கு சுசுரூஷை செய்து கொண்டிருந்தாள். இவர் நந்தினியை நிழல் போல் பின்பற்றினார் என்றால் இவரை ஸுதக்ஷிணை நிழல் மாதிரி அநுஸரித்தாள்.

பதிவ்ரதா தர்மத்தை ஜனகரே ஸீதா கல்யாணத்தின் போது இப்படித்தான் சொன்னார். ராமனைப் பார்த்து “என் குழந்தை ஸீதை உன்னை நிழல் போலத் தொடர்ந்து வருவாளப்பா! சாயேவ அநுகதா” என்றார். இப்படி வால்மீகி ராமாயணத்தில் இருக்கிறது. வால்மீகி சொன்ன ராமனுடைய சரித்திரத்தைக் காளிதாஸனும் சொல்ல வந்தான். ராமனுக்கு பின்னாடி வந்த லவ குசர்களைப் பற்றியும் சொல்கிறான். ராமனுக்கு முந்தி ரகுவம்சம் இருக்கிறதே- ராமனுடைய முன்னோர்கள்- அவர்களைப் பற்றியும் எழுதியிருக்கிறான். இப்படி ராமாயணம் சொல்ல வந்தவன், அந்த உத்தமமான வம்சத்தில் முன்னும் பின்னும் உள்ள சந்ததிகளைப் பற்றியும் சொல்லி, ராமனுக்கு யாருடைய பெயர் வந்ததோ அந்த மகா கீர்த்தி வாய்ந்த ராமனுடைய கொள்ளுத் தாத்தா பெயரையே “ரகுவம்சம்” என்று அந்த மஹாகாவியத்துக்கு வைத்தான். உத்தமமான வம்சத்தைப் பற்றி சொன்னாலே நாக்கு பவித்திரமாகும் என்பது போல் சொல்லியிருக்கிறான்.

இதிலே, ஸுதக்ஷிணை மாடு மேய்க்கப் போகும் திலீபனைத் தொடர்ந்து போகிறதைச் சொல்கிறபோதுதான் ரிஷிகள் எல்லாரும் ஸ்மிருதிகளை எப்படி பண்ணினார்கள் என்பதைச் சொல்கிறான். இதைச் சொல்ல வேண்டும் என்று கொள்கை கட்டிக் கொண்டு சொல்லவில்லை. இதற்காகச் சொல்கிற மாதிரியும் வலிந்து சொல்லவில்லை. என்னவோ அவனுடைய திறந்த மனஸில் பளிச்சென்று பட்டு, அதை அப்படியே சொல்லிவிட்டான் என்று தோன்றுகிற ரீதியிலே ஸ்மிருதிகளைப்பற்றிச் சொல்கிறான். என்ன சொல்கிறான்?

ஸுதக்ஷிணை மாட்டின் பின்னால் கொஞ்ச தூரம் எப்படிப் போனாள் என்று வருணிக்கிறான். நந்தினி முன்னாடி போகிறது. இவள் வேறு எங்கும் பார்க்காது, அந்த அடிச் சுவட்டின் வழியிலேயே நடந்தாள் என்று சொல்ல வருகிறான். நந்தினி நடக்கும்போது அதன் குளம்புகள் படுகிற இடத்தில் கொஞ்சம் தூசி கிளம்புகிறது. இப்படி கிளம்பும்படியான பவித்ரமான தூசி இருக்கிறதே, அந்தத் தூசியைப் பார்த்துக் கொண்டு, அந்தச் சுவட்டை அநுஸரித்து ஸுதக்ஷிணை கொஞ்சம் தூரம் நடந்தாள் என்று காளிதாஸன் சொல்கிறான்.

மற்ற கவிகளைக் காட்டிலும் காளிதாஸன் வெகு அழகாக உபமானம் சொல்வான். அதுதான் அவனிடத்திலுள்ள விசேஷம். ஒவ்வோரு கவிக்கு ஒவ்வோர் அம்சத்தில் விசேஷம். “உபமா காளிதாஸஸ்ய”- உவமைக்குக் காளிதாஸன். அப்படி உபமானத்தோடு ஸுதக்ஷிணை நந்தினிக்குப் பின் நடந்து போகிறதைச் சொல்கிற போதுதான் வேதத்தை ஸ்மிருதி பின் தொடர்வது உவமையாக வருகிறது:

தஸ்யா: குரந்யாஸ பவித்ர பாம்ஸும்

அபாம்ஸுலாநாம் துரி கீர்த்தநீயா|

மார்கம் மநுஷ்யேச்வர தர்மபத்நீ

ச்ருதேரிவார்த்தம் ஸ்ம்ருதிரந்வகச்சத்||

‘பாம்ஸு’ என்றால் தூசி. நந்தினி குளம்பு வைக்கிற இடத்தில் தூசி கிளம்புகிறது. ‘குர’ என்று குளம்புக்குப் பெயர். ‘குரந்யாஸ’- குளம்பு வைத்ததினாலே; ‘பவித்ர பாம்ஸும்’-கிளம்புகிற பவித்திரமான தூசியைப் பார்த்துக் கொண்டு போனாள்.

பசுவின் பாத தூசி மிக விசேஷமானது. அது எந்த இடத்தையும் பரிசுத்தம் செய்துவிடும். ஸாதாரணப் பசுவின் தூசியே பவித்ரம் என்றால், காமதேனு புத்திரியான நந்தினியின் பாத தூசி எத்தனை உயர்ந்ததாயிருக்கும்? அதற்குப் பாத்திரமான ஸுதக்ஷிணையோ இயல்பாகவே பரம பவித்ரமான தூசிபடியாத சரித்திரத்தை உடையவள்!

அபாம்ஸுலாநாம் துரி கீர்த்தநீயா

‘அபாம்ஸு’ ஒரு தூசி இல்லாதவள்! யாதொரு பழியோ களங்கமோ இல்லாத ஜன்மம். அப்பேர்ப்பட்ட உத்தமமான ஸுதக்ஷிணை, நந்தினியின் குளம்பு படுவதனாலே எழும்புகிற பவித்திரமான தூசியை அநுஸரித்து, சுத்தமான மார்க்கத்தை அநுஸரித்து காலடி எடுத்து வைத்து நடந்தாள். அது எப்படியிருந்தது என்றால் வேதத்தினுடைய (ச்ருதிகளுடைய) அர்த்தத்தை அநுஸரித்து மஹரிஷிகள் செய்திருக்கும்படியான ஸ்மிருதிகள் எப்படிச் சென்றிருக்கின்றனவோ அப்படியிருந்தது என்கிறான் காளிதாஸன்.

ச்ருதேரிவார்த்தம் ஸ்ம்ருதிரந்வகச்சத் |

‘அந்வகச்சத்’ – பின்தொடர்ந்தாள். இங்கே பசுமாட்டுக்கு உபமானம் வேதம்-ச்ருதி. அதனுடைய குளம்படிதான் அர்த்தம். வேத அர்த்தத்தையே ஸ்மிருதி பின் தொடர்கிற மாதிரி பசு மாட்டின் அடியை ஸுதக்ஷிணை பின்பற்றினாள். ஸுதக்ஷிணை முழுக்க அப்படியே பசு மாட்டோடு போகாது கொஞ்ச தூரம்தான் போனாள். அதுபோல் வேதத்தில் இருப்பதை எல்லாம் ஸ்மிருதிகள் சொல்லவில்லை. அவை நினைவுக் குறிப்புகள்தான். ஆனால் வேதத்தின் அடியும் பொருளும் தப்பாமல், அதில் இருப்பதையே ஸ்மிருதிகள் சொல்லியிருக்கின்றன. வேதத்திலிருக்கிற அத்தனை ஆயிரம் மந்திரங்களையும் ஸ்மிருதி சொல்லவில்லை. அவற்றை பிரியோஜனப் படுத்துகிற வழியையே சொல்கிறது. அதாவது வேதம் போகிற வழியில் அதை கொஞ்ச தூரம் அநுஸரிக்கிறது.

“பரிசுத்த அந்தஃகரணத்தையுடைய ஸுதக்ஷிணை பதியைப் பின்பற்றி நந்தினியின் குர‌தூளி எழும்பும் ப‌வித்திர‌ மார்க்க‌த்திலிருந்து சிறிதேனும் வ‌ழுவாம‌ல் போனாள்” என்று சொன்ன‌ காளிதாஸ‌ன் இத‌ற்கு ஒரு ந‌ல்ல‌ உவ‌மை சொல்ல‌ வேண்டும் என்று நினைத்த‌வுட‌ன் த‌ன் ம‌ன‌ஸில் ப‌ளீரென்று எழுந்த‌ உவ‌மையாக‌, “வேத‌ அர்த்த‌த்திலிருந்து கொஞ்ச‌ங்கூட‌ வ‌ழுவாம‌ல் ஸ்மிருதி அதைப் பின்ப‌ற்றிப் போவ‌து போல‌ப் போனாள்” என்கிறான்.

எப்பொழுதும் உபமானமானது உபமேயத்தைவிட உயர்ந்ததாக இருக்கும். சந்திரன் மாதிரி, தாமரைப்பூ மாதிரி ஒருத்தர் முகம் இருந்தது என்று சொன்னால் வாஸ்தவத்தில் உபமானமான சந்திரனும், தாமரைப்பூவும் உபமேயமான முகத்தைவிட உயர்ந்ததாகத்தான் இருக்கும். அந்தப்படி, இங்கு பர்த்தாவான திலீபனைப் பசுவின் சுவட்டால் பின்பற்றிய பரம பவித்ரையான ஸுதக்ஷிணை என்ற உபமேயத்துக்கு உபமானமாகச் சொல்லப்பட்ட ஸ்ம்ருதியானது ச்ருதியை இன்னம் ரொம்ப க்ளோஸாக பின்பற்றுகிறது என்று ஆகிறது. உவமை சொல்வதில் அதிச்ரேஷ்டனான காளிதாஸன் இந்த உபமானத்தைச் சொன்னான் என்பதைவிட, ஸ்மிருதிகள் முழுக்கவும் ச்ருதிகளை அநுஸரித்தவையே என்பதற்கு ஆதாரம் வேண்டியதில்லை.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is ஸ்மிருதிகள் சுதந்திர நூல்கள் அல்ல
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  ச்ருதி-ஸ்மிருதி;ச்ரௌதம்-ஸ்மார்த்தம்
Next