சலுகை இல்லை : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

தர்ம சாஸ்திரங்களை பிராம்மணர்களின் ஸ்வய நலத்துக்காகவே எழுதி வைத்துக் கொண்டார்கள் என்று சொல்வது எவ்வளவு தப்பு என்பது அந்த ஜாதிக்கே மிகக் கடுமையான‌ நியமமும், ரொம்ப எளிமையான வாழ்க்கையும் விதிக்கப்பட்டிருப்பதிலிருந்து தெளிவாவது மட்டுமில்லை; தர்ம சாஸ்திரங்களின் நிஷ்பக்ஷபாதத்துக்கு இன்னொன்றும் இதைவிடப் பெரிய சான்றாக இருக்கிறது. ஸகல கலைகளையும், வித்யைகளையும் பிராம்மணன் கற்றாலும் பிறருக்குத்தான் அவற்றை போதிக்கலாமே தவிர, வைதிகாநுஷ்டானங்களைப் போல கஷ்டமாயில்லாததும், அதிகப் பண லாபம் தருவதுமான அந்தக் கலைகளில் ஏதொன்றையும் தானே தொழிலாக நடத்தக் கூடாது என்று கட்டிப் போட்டிருப்பதைத்தான் சொல்கிறேன்.

இப்போது எல்லாரும் எல்லாவற்றிலும் ஸமம், முக்யமாக நீதிக்கு முன் அனைவரும் ஸமம் என்றெல்லாம் நிறைய கோஷம் போட்டாலும், சட்டசபை, பார்லிமென்ட், கோர்ட் என்று எதை எடுத்தாலும் அததைச் சேர்ந்தவர்கள் தங்களை மற்ற பொது ஜனங்களோடு ஸமமாக வைக்கக் கூடாது என்று privileges (சலுகையான உரிமைகள்) எழுதி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களை யாராவது ஏதாவது [கண்டனமாகச்] சொன்னால் contempt charge [அவமதிப்புக் குற்றம்] என்று கொண்டு வந்துவிடுகிறார்கள். இப்படி நான் சொல்வதைக் கூட contempt என்று கொண்டு வரக்கூடும். இதே மாதிரி தங்களுக்கு அலவன்ஸ் வேண்டும், ரயில் பாஸ் வேண்டும் என்றெல்லாம் மற்றவர்களுக்கில்லாத சலுகைகளைத்தான் ஜனநாயக அபேதவாதிகளும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இதற்கெல்லாம் மாறாகத் தங்களையே வறுத்தெடுத்துக் கொண்டு கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டவர்கள்தான் தர்ம சாஸ்திரங்களை ரக்ஷித்த ஜாதிக்காரர்கள். வேறொருத்தனால் இவர்களுக்கு அநாசாரம் வந்தால்கூட அவனுக்குத் தண்டனை இல்லை; தாங்கள்தான் ஸ்நானம் பண்ணி பட்டினி கிடக்க வேண்டும் என்ற அளவுக்குத் தங்களையே கஷ்டப்படுத்திக் கொண்டதைத்தான் சாஸ்திரங்களில் பார்க்கிறோம்.

பிராம்மணனுக்குப் பதினெட்டு வித்தைகளும் தெரிய வேண்டும். லோகத்திற்கு வேண்டியவைகளெல்லாம் தெரிய வேண்டும். ஸங்கீத வித்தையான காந்தர்வ வேதம் தெரிய வேண்டும். கிருஷி சாஸ்திரம் [உழவு] தெரிய வேண்டும். அது ஜ்யோதிஷத்தில் ஸம்ஹிதை என்னும் பிரிவில் வந்து விடும். வீடு கட்டத் தெரிய வேண்டும். இப்படி எல்லாத் தொழில்களையும் தெரிந்து கொண்டு அந்த அந்த வித்தைகளுக்கும் ஏற்ற ஜாதியினருக்கு அந்த அந்த வித்தையைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். இவனே அவற்றில் ஒரு விருத்தியிலும் [தொழிலிலும்] நுழையக் கூடாது. வேத அத்தியயனம்தான் பண்ண வேண்டும். வேறே தொழில் நடத்தி அதிக லாபம் ஸம்பாதிக்க வரக்கூடாது.

தநுர்வேதம் விச்வாமித்ரருக்குத் தெரியும். விச்வாமித்ரர் யாகம் பண்ணினார். அதை ஸுபாஹூ, மாரீசன் என்னும் ராக்ஷஸர்கள் வந்து கெடுக்க ஆரம்பித்தார்கள். அப்பொழுது அவர், “எனக்குத்தான் தநுர்வேதம் தெரியுமே! நானே இவர்கள் பேரில் அஸ்திரங்களைப் போடுகிறேன்” என்று எண்ணிப் போடவில்லை. ராம லக்ஷ்மணர்களைக் கூட்டிக் கொண்டு வந்தே அந்த ராக்ஷஸர்களை தொலைக்கச் சொன்னார். வழியிலே இவரேதான் அவர்களுக்கு அஸ்திர-சஸ்திர வித்தை உபதேசித்தார்!

ஆகையால் பிராம்மணன் வேத அத்யயனத்தை மாத்திரம் ஜாக்கிரதையாக ரக்ஷித்து வர வேண்டும். ஆனால் மற்ற எல்லாவற்றையும் அவன் தெரிந்து கொள்ள வேண்டும். ‘கத்தி சுற்றத் தெரியுமா?’ என்றால் ‘தெரியும்’ என்று சொல்ல வேண்டும். ‘சிகித்ஸை முறை தெரியுமா?’ என்றால் ‘தெரியும்’ என்று சொல்ல வேண்டும். ‘சித்திரம் எழுதுவாயா?’ என்றால் ‘எழுதுவேன்’ என்று சொல்ல வேண்டும். வர்ணாச்ரம தர்மத்துக்குத் தக்கபடி அந்த அந்தத் தொழிலாளியைச் சிஷ்யனாக்கிக் கொண்டு அந்த‌ அந்த வித்யையைச் சொல்லிக் கொடுத்து அவன் தரும் குரு தக்ஷிணையைக் கொண்டு ஜீவிக்க வேண்டும். குரு தக்ஷிணை கொஞ்சமாக இருந்தாலும் திருப்தி அடைய வேண்டும்.

அப்படி எங்கேயானும் ஓரிரண்டு இடங்களில் ஒரு ஜாதிக் காரனுக்கு தனிச் சலுகை கொடுத்திருக்கிறது என்று தோன்றும்படியிருந்தாலும் அதற்கு நியாயமான காரணம் இருக்கும். டிக்கட் கொடுக்கும் இடத்தில் டிக்கெட் கொடுப்பவனை மட்டும் தனி ரூமில் வைத்து, மற்றவர்கள் வெளியிலிருந்து வாங்கிக் கொள்வது ஸமத்வமாகாது என்று எல்லாரும் உள்ளே புகுந்துவிட்டால் டிக்கெட் கொடுப்பவன் என்ன செய்வான்? மற்றவர்களுக்குந்தான் ஒழுங்காக டிக்கெட் கிடைக்குமா? ஒவ்வொருவருக்கும் தங்கள் தங்கள் கடமைகளைச் செய்யச் சில சௌகரியங்கள் இருக்க வேண்டும். ஒரு பொது குடும்பத்தில் ஒருவருக்கு வியாதி உண்டானால் அவருக்குச் சில ஸெளகரியங்கள் செய்து கொடுக்கிறோம். மற்றவருக்கும் அப்படி வேண்டுமென்பது நியாயமா? எல்லாருக்கும் பொதுவான தர்மங்களும் நம் மதத்தில் நிறைய இருக்கின்றன. கடமையைச் செய்வதற்குச் சில ஸெளகரியங்கள் வேண்டுமல்லவா? வாஸ்தவத்தில் அவை ஸெளகரியங்களல்ல; சலுகையுமல்ல. அவர்களுக்குள்ள அந்த விசேஷ தர்மம் ஸமூஹத்துக்குப் பயன்படுவதற்கே வேண்டியவைதாம் இந்த சில வசதிகள். இதை எல்லாரும் அங்கீகாரம் செய்ய வேண்டும். ஏனென்றால் அவர்கள் செய்வது தங்களுக்காக மட்டுமல்ல; எல்லோருக்கும் ஸெளக்யம் உண்டாவதற்காகவே அவர்கள் தங்கள் விசேஷ தர்மங்களை அநுஷ்டிக்கிறார்கள்.

ஹ்ருதயத்தில் அன்பும் ஒற்றுமையும் இருக்க வேண்டும். எல்லாம் ஒரே ஜாதி என்று சேருவதால் மட்டும் ஒற்றுமை வந்துவிடாது. ஒன்றாகக் கல்யாணம் பண்ணிக் கொண்டும், ஒரே ஜாதியாகக் கட்டிப் புரண்டு கொண்டும் இருக்கிற மேல் நாடுகளில் இருக்கிற பரஸ்பரப் போட்டியும் த்வேஷமும் கொஞ்சமா நஞ்சமா? நம்முடைய சாஸ்திர தர்மப்படி ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் காரியங்களைச் செய்து கொண்டு மற்றவர்களுடைய காரியங்களும் நடக்கும்படி செய்து மனஸில் ஒற்றுமையாகவே இருந்து வந்தார்கள். மாமனாரிடம் மருமகள் பேசுவதில்லை; மரியாதைக்காக அப்படி இருக்கிறாள்; அது த்வேஷம் ஆகுமா? நமக்கு ரொம்பவும் நெருங்கிய நம் ஜாதிக்காரரான ஒருவருக்கே ஏதாவது தீட்டு வந்துவிட்டால் நாம் அவர் தொட்டுச் சாப்பிடுவதில்லை. அவரைத் தொடுவதில்லை; அதனால் த்வேஷம் உண்டா? இந்த மாதிரி உள்ளவைகளை த்வேஷமென்று சொன்னால் அது நம் பார்வையில் உள்ள தோஷம்தான். நமக்குள்ள மனக் கலக்கத்தினால் நம்முடைய தர்மங்கள் தப்பாகத் தோன்றுகின்றன.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is ஹிந்து மதத்தின் சிரஞ்சீவித்வம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  அனைத்தும் அனைவர் பொருட்டுமே!
Next