அனைத்தும் அனைவர் பொருட்டுமே! : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

பிராம்மணன் கொடுக்கும் வைச்வதேவத்தில் பஞ்சமனுக்கும் வீட்டு வாசலில் பலி போட வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. வேதத்தில் சொன்ன ஸகல கர்மமும் “லோகா: ஸமஸ்தா: ஸுகினோ பவந்து” (உலகிலுள்ள உயிர்க்குலம் முழுவதும் இன்பம் அடைய வேண்டும்) என்ற லட்சியத்துக்காக ஏற்பட்டதுதான். வேத சப்தமும் யஜ்ஞமும் எல்லார் நலனுக்காகவும்தான்.

ஒரு க்ஷத்ரியன் அரசாள்வது, போர் செய்வது, police [காவல் பணி] செய்வது எல்லாம் ஸமஸ்த ஜனங்களின் நன்மையின் பொருட்டேயாகும்.

வைச்யன் வியாபாரம் பண்ணி லாபத்தை எல்லாம் தனக்கே மூட்டை கட்டிக் கொள்கிறான் என்று நாம் நினைத்தால் தப்பு. அவனும் பெரிய சமூக சேவை செய்கிறான்.

வைச்யர்கள் செய்யவேண்டிய தருமத்தை பகவான் கீதையில் ஒரு ச்லோகத்தில் சொல்லியிருக்கிறார்: ‘கிருஷி கெளரக்ஷ வாணிஜ்யம் வைச்யம் கர்ம ஸ்வபாவஜம்’ என்று [கீதை XVIII.44]. வைசியர்களுக்கு இங்கே முக்கியமாக மூன்று காரியங்கள் சொல்லியிருக்கிறது. ‘கிருஷி’ என்றால் பூமியை வைத்துக் கொண்டு உழுது சாகுபடி செய்து ஜனங்களுக்கு உபயோகப்படுத்த வேண்டியது. அடுத்தது பசுவை ஸம்ரக்ஷிக்க வேண்டியது. மூன்றாவது, வியாபாரத்தினால் ஜனங்களுக்கு உபகாரம் செய்யவேண்டியது. அதாவது விவசாயத்தை விருத்தி செய்து அதனால் மற்ற ஜீவராசிகளுக்கு உபகாரம் செய்யவேண்டியது ஒரு வைசிய தர்மம். பசுவை நன்றாக ஸம்ரக்ஷணை செய்து அதன் கன்றுக்குக் கண்டு பாக்கியுள்ள பாலை யஜ்ஞங்களுக்கும் ஜனங்களுக்கும் உபயோகப் படுத்த வேண்டும். அவ்வளவு புஷ்டியாகப் பசுவை ஸம்ரக்ஷிப்பது இன்னொரு முக்கிய தர்மம். வியாபாரமானது வைச்யர்களுக்கு மூன்றாவது முக்கியமான தர்மம். அதாவது வெகு தூரமான தேசங்களில் விளையும் கோதுமை, பெருங்காயம், குங்குமப்பூ போன்ற ஸாமான்களை ஓர் இடத்தில் சேகரித்து ஜனங்களுக்கு விற்று உபகாரம் செய்வதே ஒரு தர்மம். ஒரு மனிதனுக்கு லட்சக்கணக்கான பணம் இருந்தும் பயிர் முதலியவை இல்லாத பாலைவனத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தால், இந்த பணத்தைக் கொண்டு மாத்திரம் அவன் ஜீவிக்க முடியுமா? அதே மாதிரி நெல் ஏராளமாக விளையும் தேசத்தில் நெல்லை மாத்திரம் வைத்துக் கொண்டு மற்றவை இல்லாமல் ஜீவிக்க முடியுமா? ஆகையால் வியாபாரம் என்பது பல இடங்களில் கிடைக்கும் ஸாமான்களை ஓர் இடத்தில் சேகரித்து ஜனங்களுக்குக் கிடைக்கப் பண்ணும் பெரிய உபகாரம் என்று தெரிகிறது. இது வைசியருக்கு முக்கிய தர்மமாக ஏற்பட்டிருக்கிறது. வைசியர்கள் தமக்கு வியாபாரம் வேண்டாமென்றிருப்பது பாபம். அதே மாதிரி ஒரு பிராம்மணன் கர்மாநுஷ்டானத்தை விட்டுவிட்டுக் கண்ட தொழிலைப் பண்ணிக் கொண்டு பணம் ஸம்பாதித்தால் அதுவும் பாபம். வியாபாரத்தை அவரவர்கள் லாபத்தை உத்தேசித்துச் செய்கிறார்கள் என்று நினைக்கக் கூடாது. ஏனென்றால் ஒரு ஸமயம் ஒரு வாரம் ஹர்த்தால் ஏற்பட்டுக் கடைகள் மூடப்பட்டிருந்ததால் அப்பொழுது ஒரு ஸாமானும் கிடைக்காமல் ஜனங்கள் படும் சிரமம் சொல்லி முடியாது. ஆகையால் வியாபாரம் பொது பிரயோஜனத்தை உத்தேசித்த‌தே தவிர சொந்த பிரயோஜனத்தை மட்டும் உத்தேசித்ததல்ல. வைசியர்கள் வியாபாரத்தைத் தங்கள் லாபத்துக்காகச் செய்கிறோமென்று எண்ணாமல் ஸமூஹ நலனுக்காக பகவானால் ஏற்படுத்தப்பட்ட காரியத்தைச் செய்கிறோமென்று நினைத்து செய்ய வேண்டும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is சலுகை இல்லை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  நாலாம் வர்ணத்தவரின் அநுகூல நிலை
Next