“அது சரி, ஆனால் ‘ஸ்வய மரியாதை என்ன ஆவது?’ என்று சோஷலிசம் சொல்கிற சீர்திருத்தக்காரர்கள் கேட்டால் அவர்கள் தங்கள் கொள்கைக்கு தாங்களே ஆக்ஷேபம் தெரிவிப்பதாகத்தான் ஆகிறது. இவர்கள் என்ன சொல்கிறார்கள்? Dignity of Labour (உழைப்பின் கௌரவம்) என்று நிறையப் பேசுகிறார்கள். ஒரு வேலை கூடத் தாழ்த்தியில்லை என்கிறார்கள். காந்தி கக்கூஸைக் கூடத் தாமே கழுவுவது என்று வைத்துக் கொண்டிருந்தார். ராஜகோபாலாச்சாரி பிரதம [முதன்] மந்திரியாக இருந்தபோதுகூடத் தாமே துணி தோய்த்துக் கொண்டார். இந்த டிக்னிடி ஆஃப் லேபரை காட்டுவதற்காகத்தான் வருஷத்தில் ஒரு நாள் மேயர் மாதிரியானவர்களே துடைப்பக் கட்டையை வைத்துக் கொண்டு தெருவைப் பெருக்குகிறார்கள். இதைப் பேப்பரில் ஃபோட்டோ பிடித்துப் போடுகிறார்கள். ஆகையால் சரீரத்தால் உழைத்துச் செய்கிற தொழில் ஸ்வயமரியாதைக்குக் குறைச்சல் என்று இவர்களே இன்னொரு பக்கத்தில் சொன்னால் அது ஒன்றுக்கொன்று முரண்தான்.
என்னைக் கேட்டால் ‘status’, ‘ஸ்வயமரியாதை’ என்றெல்லாம் சொல்வதைவிட, அஹங்காரம் என்ற வார்த்தையைச் சொல்லிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும். பிராம்மணனுக்கும் க்ஷத்ரியனுக்கும் வைசியனுக்கும் ஏற்படக்கூடிய அஹங்காரம் மற்றவனுக்கு ஏற்படவில்லை என்கிற angle -ல் [கோணத்தில்] இதைப் பார்த்தால், வியாஸர் சொன்னமாதிரி நாமும் “சூத்ர: ஸாது” என்றுதான் முடிவு கட்டுவோம். இப்போது அபேதவாதத் தலைவர்கள் சொல்கிற மாதிரிதான் சாஸ்திரங்களிலும் எல்லா விதமான காரியங்களும் உசந்தவை என்று ஸமமாகச் சொல்லியிருக்கிறது. இவர்கள் லௌகிக (material) மட்டத்தில் மட்டும் இருந்துகொண்டு சொல்வதையே சாஸ்திரத்தில் ஆத்மாபிவிருத்திக்கு உரியதாக (spiritual -ஆக) ச் சொல்லி அதிலே பக்தியையும் கலந்து கொடுத்திருக்கிறது. அதாவது, ‘லோக க்ஷேமத்துக்காகப் பல தினுஸான காரியங்கள் நடக்க வேண்டியிருப்பதால் அவற்றுக்குள் உயர்த்தி-தாழ்த்தி என்பதே இல்லை. அவரவரும் தங்களுக்கு லபித்த தொழிலை ஈச்வரார்ப்பணமாகச் செய்தால் சித்த சுத்தி பெறலாம்’ என்கிறது. ஈச்வரார்ப்பணம் என்கிற போது பக்தி வந்துவிடுகிறது. சித்த சுத்தி என்பது ஆத்ம ஞானத்தில் கொண்டு சேர்க்கிறது.
ஆகவே ‘டிக்னிடி ஆஃப் லேபர்’ என்று பார்த்தாலும் சரி, சித்த சுத்திக்காக ஈச்வரார்ப்பணம் பண்ணப்படவேண்டியதே கர்மா என்று பார்த்தாலும் சரி – இரண்டு விதத்திலும் ‘ஸ்வயமரியாதை’ என்கிற வார்த்தை அடிபட்டுப் போய் விடுகிறது. அஹம்பாவமில்லாமல் செய்தால் ‘நமக்கு இந்த ஆசாரம் இருக்கிறதே, அல்லது இல்லையே’, ‘இந்த அநுஷ்டானம் இருக்கிறதே, அல்லது இல்லையே’ என்ற குறைகள், கோபதாபங்கள் உண்டாகாது. இந்தத் தொழிலுக்கு இந்த ஆசாரம், இந்த ஆஹாரம்தான் சரி என்று ஒப்புக் கொள்ளத் தோன்றும். பிராம்மணன் க்ஷத்ரியனையும் வைசியனையும் போல ஸெளக்கியங்களை அநுபவித்தால் மந்திர சக்தியே இராது. ஒரு தொழிலாளி பிராம்மணனைப் போல உபவாஸம் இருந்தால் அவனால் உடலுழைப்புப் பண்ணவே முடியாது.
ஒரு சின்ன விஷயம் ஒருத்தர் சொன்னார். ‘சாஸ்திரத்தில் பிராம்மணன் வெள்ளை வஸ்திரமும், க்ஷத்ரியன் சிவப்பு வஸ்திரமும், வைச்யன் மஞ்சள் வஸ்திரமும், நாலாம் வர்ணத்தவன் நீல வஸ்திரமும் உடுத்த வேண்டும் என்றிருக்கிறது. முதலில் இதெல்லாங்கூட மட்டம் தட்டுகிற அபிப்ராயமே எனக்குத் தெரிந்தது. அப்புறம்தான் எனக்கு அதிலுள்ள நியாயம் புரிந்தது’ என்றார். நான்கூட அப்போது இதைப் பற்றி நினைத்துப் பார்த்ததில்லை. ஆகையால், “இதிலே என்ன நியாயமிருக்கிறது? என்று கேட்டேன். “வெள்ளை வஸ்திரமாயிருந்தால் கொஞ்சம் ஏதாவது கறை பட்டாலும் தெரிந்துவிடும். பிராம்மணன் யஞ்ஞாதிகள் பண்ணுகிறபோது எந்த திரவியத்தையும் சிந்தாமல், வீணாக்காமல் ஜாக்கிரதையாக செலவழிக்காவிட்டால் அவனுடைய வஸ்திரமே காட்டிக் கொடுத்து விடும். பிறரை உபத்ரவித்துப் பணம் வாங்கக் கூடாத அவனுக்கு இந்த ஜாக்கிரதையும் சிக்கனமும் வேண்டும் என்றே வெள்ளை வஸ்திரம். க்ஷத்ரியன் யுத்தம் செய்கிறவன்; ரத்தம் சிந்துகிறவன். சிந்தப் பண்ணுகிறவன். இது தவிர்க்க முடியாதது. ஆனால் துணியைப் பாழாக்கிப் பயமுறுத்துகிற மாதிரி இது தெரியக் கூடாது என்றே சிவப்பு வஸ்திரமாக வைத்திருக்கிறது. வைசியர்கள் மண்டியில் பல ஸாமான்களை கையாண்டாலும் மஞ்சள்தான் சட்டென்று துணியில் ஒட்டிக் கொண்டு குபீரென்று தெரிவது. அவர்களுக்கான பசு ரக்ஷணையைப் பார்த்தாலும் மாட்டுக்கு நிறைய மஞ்சள் பூச வேண்டியிருக்கிறது. இந்த மஞ்சள் ஒட்டிக் கொண்டு தெரியாமலிருக்கத்தான் மஞ்சள் கலரிலேயே வஸ்திரம். நிலத்தில் புழுதியில் வேலை செய்கிறவர்களுக்கு நீல வஸ்திரமானால்தான் அழுக்கு தெரியாது. இந்தக் காலத்தில் கூட ஃபாக்டரிகளில் தொழிலாளர்களுக்கு நீல யூனிஃபாரம் தான் கொடுத்திருக்கிறார்கள். எனவே அந்த ஜாதிக்கு நீலம் வைத்ததும் நியாயம்தான்” என்றார். யோசித்துப் பார்த்தால் இப்படி ஒவ்வொரு வித்யாஸத்திலும் நியாயம் தெரியும். அவரவருக்கு ஸெளக்கியமானதை உத்தேசித்து சாஸ்திரம்; “சாஸ்த்ராய ச; ஸுகாய ச” என்பதன் அர்த்தம் புரியும். இப்படி பலவற்றில் அர்த்தம் புரிவதாலேயே புரியாதவற்றிலும் உள்ளூர அர்த்தம் இருக்கவேண்டுமென்று தெரியும்.
“ஒருத்தன் செய்தால் தர்மமாக, புண்ணியமாக இருப்பதே இன்னொருத்தன் பண்ணினால் பாபமாக ஆகிறது என்று சொல்வதெப்படி?” என்று இப்போது புத்திசாலிகளும் புரிந்து கொள்ளாமல் கேட்கிறோம். முன்னாளில் பாமர ஜனங்களும், இப்படிக் காரியங்களை மாற்றிக் கொண்டால் ஸமூஹத்துக்காக மொத்தத்தில் நடக்க வேண்டியவை எல்லாம் ஏறுமாறாவதால் இது அதர்மந்தான், பாபந்தான் என்று புரிந்து கொண்டு சாஸ்திரப்படியே செய்து வந்தார்கள். ஈச்வர ஸந்நிதானம், உத்ஸவம், பொதுத்தொண்டு தவிர பாக்கி விஷயங்களில் ரொம்பக் கலந்து கொண்டால் ஆஹாரம் முதலான எல்லா விஷயங்களிலுமே மாறிப் போகத் தோன்றும். ஒவ்வொரு ஆசாரமும் அந்த ஜாதியின் தொழிலுக்கு உதவுவதால், இப்படி ஒரேடியாக கலப்பது முடிவில் ஸமூஹ நன்மைக்கான தொழில் முறையையே கெடுக்கும் என்று அறிந்திருந்தார்கள். அதிலே ஒரு நிறைவு, ஸெளக்கியம் இல்லாமலா இத்தனை மெஜாரிட்டி ஜனங்கள் ஆயிரம் பதினாயிரம் வருஷங்கள் ஆக்ஷேபமில்லாமல் அநுஸரித்தார்கள்? பிற்பாடும் தன்னால் இங்கே இந்த வாதங்கள் வந்திருக்காது. வெள்ளைக்காரன் வந்தது, அதனால் பிராம்மணர்களுக்கு ராஜமானியங்கள் போனது, அதே சமயம் அவர்களுக்கு வெள்ளைக்கார ஆட்சியில் உத்யோகங்கள் கிடைத்தது, மெஷின்களும் நகர வாழ்க்கையும் ஏற்பட்டுக் கைத்தொழிலும் கிராம வாழ்க்கையும் நசிந்தது, இதனால் மற்றவர்கள் தொழிலுக்குக் கஷ்டப்படும்போது இவர்கள் மட்டும் நகத்தில் அழுக்குப்படாமல் சம்பாதித்தது, இதனால் ஏற்பட்ட போட்டி – இப்படி சாதுர்வர்ண [நான்கு வர்ண] ஏற்பாட்டின் அஸ்திவாரத்தில் ஆட்டம் கொடுத்திருக்கிற சமயத்தில் வெள்ளைக்காரன் புதிய ஸமத்வக் கொள்கைகளையும், ரேஸ் தியரி [இனக் கொள்கை] யையும் கொண்டு வந்து விட்டதால் தான் சாஸ்திர நம்பிக்கையுள்ள பொது ஜனங்களின் மனசு மாறிவிட்டது. ஈச்வராநுக்ரஹத்தில் அது பழையபடி மாறினால், பிராமணனிலிருந்து பஞ்சமன் வரை ஒவ்வொருத்தனும் செய்கிற காரியம் அவனவனுக்குச் சித்த சுத்திக்கான ஸாதனம்; அதே சமயத்தில் ஒவ்வொருவன் செய்வதும் லோக க்ஷேமத்தை உத்தேசித்துத்தான் என்று புரிந்துவிடும். இதையெல்லாம் அலசி ஆலோசனை பண்ணிப்பார்த்தால், நம்முடைய மதத்தில் மட்டும் இருக்கிற வர்ண தர்மத்தைப் பற்றி, நமக்குக் குறைவும் அவமானமும் ஏற்படுவதாகவும் ஆரம்பத்தில் சொன்னேனே, அது அப்படியே மாறி, இந்த ஏற்பாட்டில் பெருமையும் இதை வகுத்துக் கொடுத்தவர்களிடம் மரியாதையும் உண்டாகும்.